ரஷ்யா மீது தடை விதிக்க ஆயத்தமாகும் அமெரிக்கா


 


அமெரிக்கா மீது நடத்தபட்ட சைபர் தாக்குதல் மற்றும் 2020ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக கூறப்படுவதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

வியாழக்கிழமை இந்த நடவடிக்கை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையை 30 ரஷ்ய நிறுவனங்கள் இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அதோடு 10 தனி நபர்கள், அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.

ராஜரீக ரீதியிலான அதிகாரிகள் இந்த பட்டியலில் இலக்கு வைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்க நிதி நிறுவனங்கள் ரஷ்யாவின் கரன்சியான ருபலில் வெளியாகும் கடன் பத்திரங்களை வரும் ஜூன் மாதத்திலிருந்து வாங்க, அதிபரின் செயல் ஆணை மூலம் தடை விதிக்க இருப்பதாகவும் பிபிசியின் கூட்டாளி சிபிஎஸ் நியூஸிடம் கூறப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஜோ பைடன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவு முறை பதற்றமாக இருக்கும் இந்த நேரத்தில், இந்த தடைகள் விதிக்கப்பட உள்ளன.

அமெரிக்கா தன் தேச நலனைப் பாதுகாக்கும் விஷயத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என, கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான தொலைபேசி உரையாடலின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.

இரு நாடுகளும் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பிருக்கும் விஷயங்களைக் குறித்து விவாதிக்க, அமெரிக்கா மற்றும் ரஷ்யா இல்லாமல் வேறு ஒரு நாட்டில், சந்தித்துப் பேச ஒரு திட்டத்தையும் ரஷ்ய அதிபர் புதினிடம் முன் மொழிந்து இருக்கிறார் அமெரிக்க அதிபர் பைடன்.

கடந்த மாதம் வெளியான ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு கொலைகாரர் என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டதற்கு, ஆம் என விடையளித்தார் ஜோ பைடன்.

சோலார் விண்ட்ஸ் சைபர் தாக்குதல்

செஞ்சதுக்கம், ரஷ்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த ஆண்டு, சோலார் விண்ட்ஸ் என்கிற மென்பொருளில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். இந்த தாக்குதலால் அமெரிக்காவில் உள்ள அரசு மற்றும் தனியார் என மொத்தம் சுமார் 18,000 கணிணிகளை சைபர் குற்றவாளிகளால் இயக்க வழி வகுத்தது.

உளவுத் துறையினரோ இந்த தாக்குதலுக்குப் பின் ரஷ்யா இருப்பதாக நம்புகிறார்கள். இந்த சைபர் தாக்குதலால் ஹேக்கர்கள் அமெரிக்காவின் கருவூலம், நீதித் துறை, உள் துறை உட்பட பல அரசு முகமைகளின் பல டிஜிட்டல் விவரங்களை அணுகுவதற்கான அனுமதியைப் பெற்றனர்.

"சோலார் விண்ட்ஸ் தாக்குதல் தான் உலகம் இதுவரை கண்ட மிகப் பெரிய மற்றும் அதிநவீன சைபர் தாக்குதல்" என மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பிராட் ஸ்மித் கடந்த பிப்ரவரி மாதம் கூறியது இங்கு நினைவுகூரத்தக்கதுஅறிக்கையில், டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக வெற்றி பெற ரஷ்ய அதிபர் நடவடிக்கைகளை எடுத்ததாக அமெரிக்க உளவுத் துறை முகமைகள் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றன.

யுக்ரேன் விவகாரத்தில் ரஷ்யா கடுமையாகவும், தீவிரமாகவும் நடந்து கொள்வதை எதிர்த்து, அமெரிக்கா பொது வெளியில் எச்சரித்திருக்கிறது. யுக்ரேனின் கிழக்கு எல்லைப் பகுதியில், ரஷ்யா தொடர்ந்து ராணுவ நடமாட்டத்தை அதிகரித்து வருவதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

"அமெரிக்காவின் இந்த விரோதப் போக்கு மற்றும் கணிக்க முடியாத செயல்பாடுகள் தான், எப்போதும் மோசமான சூழல்களை எதிர்கொள்ள எங்களைக் கட்டாயப்படுத்துகிறது" என க்ரெம்ளினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கொவ் கடந்த வாரம் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறினார். மேலும், தாங்கள் அமெரிக்காவின் தடைகளை எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.