உலக தலைவர்கள் இரங்கல்


 


இளவரசரும், எடின்பரோ கோமகனுமான ஃபிலிப், தனது 99ஆவது வயதில் காலமானார் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்ததை அடுத்து, உலக தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

பல்வேறு நாடுகளின் அரசர்கள், நாட்டின் தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், ஸ்வீடன் முதல் இந்தியாவின் பிரதமர்கள் ஆகியோர் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

எடின்பரோ கோமகன், ராணி எலிசபெத்துடன் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு பயணங்களில் உடன் சென்றுள்ளார்.

அமெரிக்கா

அமெரிக்காவின் முன்னாளர் அதிபர் ஜார்ஜ் டபள்யு. புஷ், "இளவரசர் ஒரு நீண்ட சிறப்பான வாழ்வை வாழ்ந்துள்ளார்." என தெரிவித்துள்ளார். மேலும், "முக்கிய காரணங்களுக்காகவும், பிறருக்காகவும் தன்னை அர்ப்பணித்து கொண்டவர்" என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா

பிரிட்டன் மக்கள் மற்றும் அரச குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். இளவரசர் "ராணுவத்தில் சிறப்பாக பணியாற்றியவர் மற்றும் சமூக சேவை முன்னெடுப்புகளுக்கு முதல் நபராக நின்றவர்" எனவும் மோதி கூறியுள்ளார்.

பெல்ஜியம்

பெல்ஜியத்தின் அரசர் ஃபிலிஃப், ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு தனிப்பட்ட செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் எப்போது முடியுமோ அப்போது மேதகு ராணியை நேரில் சந்தித்து பேச முடியும் என நம்பிக்கை கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா

ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கியவர் இளவரசர் ஃபிலிப். ஆஸ்திரேலியாவில் பல அமைப்புகளுக்கு அவர் நிதியுதவி வழங்கிவந்தார் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஜூலியா கில்லியார்ட், "கடமையை நிறைவேற்றும் ஒரு நபராகவும், நகைச்சுவை உணர்வு கொண்டவராகவும்" இருந்தார் என தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து

நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன், "நியூசிலாந்து மக்கள் மற்றும் அரசு சார்பாக மேதகு ராணி மற்றும் அரச குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்," என தெரிவித்துள்ளார்.

இளவரசர் ஃபிலிப்

பட மூலாதாரம்,PRINCE PHILIP

மால்டா

"இளவரசர் ஃபிலிப்பை இழந்தது குறித்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவர் மால்டாவை தனது சொந்த ஊராக கருதினார். இங்கு அடிக்கடி பயணம் செய்தார். அவரின் நினைவுகளை எங்களது மக்கள் எப்போதும் நினைவில் கொள்வர்," என மால்டாவின் பிரதமர் ராபர்ட் அபேலா தெரிவித்துள்ளார்.

ஸ்வீடன்

"பல வருடங்களாக எங்களின் குடும்பத்தின் சிறந்த நண்பர், இளவரசர் ஃபிலிப், இந்த உறவை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்." என அரசர் கால் கஸ்டஃப் தெரிவித்துள்ளார்.

ஸ்வீடனின் அரச குடும்பத்தின் செய்தி தொடர்பாளர், மார்கரெட்டா தோர்க்ரென், அரசர் மற்றும் இளவரசர் இருவரும் இங்கிலாந்தில் கப்பலில் ஒன்றாக பயணித்துள்ளனர் அதுதான் அவர்களின் சிறந்த நட்புக்கு காரணம் என அவர் கூறியுள்ளார்.