பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு


 



மட்டகளப்பு மாவட்ட பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி குறித்து பல அபிவிருத்தி திட்ட யோசனைகள் முன்வைத்ததிற்கு இணங்க ஜனாதிபதியின் நாட்டை சுபீட்சத்தின்பால் கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பில் தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளுக்கான உத்தியோக பூர்வ ஆவணங்களை வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. 

மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட 9 பாடசாலைகளுக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களை வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றபோது பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ ஆவணங்களை தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளான பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயம். அரசடித்தீவு விக்னேஸ்வரா வித்தியாலயம், காக்காச்சிவெட்டை விஸ்ணு வித்தியாலயம், நாவற்காடு நாமகள் வித்தியாலயம், கரடியனாறு மகாவித்தியாலயம், செங்கலடி மத்திய கல்லூரி, வந்தாறுமுலை விஸ்ணு வித்தியாலயம், சித்தாண்டி மத்திய மகா வித்தியாலயம், புதுக்குடயிருப்பு கண்ணகி வித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளில் அதிபர்கள் மற்றும் பாடசாலைகளின் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தார். 

மட்டகளப்பு மாவட்டத்தின் தேசிய பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் பாடசாலை நிருவாகத்தினரினால் ஆசிரியர்களை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்ததிற்கு அமைய இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் விரைவில் கல்வி அமைச்சினூடாக மட்டகளப்பு மாவட்டத்திற்கு பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 

குறிப்பாக மட்டகளப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக தரமுயர்த்தப்படாமல் இருந்து வந்த பாடசாலைகள் தற்போதுள்ள அரசினால் தரமுயர்த்தப்பட்டுள்ளதுடன், மேலும் தகுதிவாய்ந்த பல பாடசாலைகளை தரமுயர்த்துவதற்கான வேலைத்திட்டங்களை தான் முன்னெடுத்துவருவதாகவும், தரமுயர்த்தப்பட்டுள்ள தேசியப் பாடசாலைகளுக்கு தேவையான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளை வழங்கும்பட்சத்தில் அவற்றை மிக விரைவாக நிவர்த்தி செய்து தருவதுடன், இவ்வாறான தரமுயர்த்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய கல்வி அமைச்சர் உள்ளிட்ட நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் உள்ளிட்ட அனைவருக்கும் இதன்போது நன்றி தெரிவித்தார். 

அமைச்சரின் ஊடக இணைப்பாளர் 

அரச தகவல் திணைக்களம்