ருத்ரதாண்டவம் ஆடிய கே.எல்.ராகுல்- சென்னை அணியை பந்தாடியது பஞ்சாப்


 


துபாய்:


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்  துபாயில் நடைபெற்ற  ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. 

தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய சென்னை அணி 61 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய டூ பிளெசிஸ் 76 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். இதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதையடுத்து 135 ரன்கள் என்ற எளிய இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடி ரன்ரேட்டை உயர்த்தினார். மயங்க் அகர்வால் (12), சர்பராஸ் கான் (0), ஷாருக் கான் (8), மார்க்ராம் (13) ஆகியோர் விரைவில் விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் மறுமுனையில் கே.எல்.ராகுல் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றியை உறுதி செய்தார். 

பஞ்சாப் அணி 42  பந்துகள் மீதமிருந்த நிலையில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த கே.எல்.ராகுல், மொத்தம் 42 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 98 ரன்கள் குவித்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.