கொட்டகலை பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்





 (க.கிஷாந்தன்)

 

கொட்டகலை பிரதேச சபையின்  2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் செவ்வாய்க்கிழமை (11) நேற்று இடம்பெற்ற போது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அடுத்த ஆண்டில் மந்த போசனையைக் குறைக்கும் வகையில் சத்துணவுத் திட்டத்துக்காக 25 இலட்ச ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தமது உரையில் தெரிவித்தார்.

 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

 

அடுத்த ஆண்டுக்கான சபையின் வருமானம் 15 கோடியே 46 இலட்சத்து 5  ஆயிரத்து  20 ரூபாவும், செலவினம் 15 கோடியே 46 இலட்சத்து  3 ஆயிரத்து   865 ரூபாவும் ஆகும்.

 

மந்த போசனைக்குள்ளான சிறுவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்காக 25 இலட்ச ரூபாவும், சக்கர நாற்காலி அல்லது ஊன்றுகோல் பெற்றுக் கொடுப்பதற்காக 75 ஆயிரம் ரூபாவும், லொக்ஹில் – கிரிஸ்லர்ஸ்பாம் ஆற்றை அகலப்படுத்த 38 இலட்ச ரூபாவும், கொட்டகலை மைதானத்தில் விளையாட்டரங்கம் அமைக்க 50 இலட்ச ரூபாவும், சுகாதார முகாமுக்கு 8 இலட்சத்து  50 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதோடு, 5 பஸ்தரிப்பு நிலையங்கள், புதிய நூலகங்கள், வாராந்த சந்தை, நடமாடும் மலசல கூடங்கள், சுயதொழில் வாய்ப்புக்கான காணிகளைப் பெற்றுக் கொடுத்தல், உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வசதிக்காக கொமர்ஷல் பிரதேசத்தில் சிறுவர் பூங்கா மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து சபைக்கு வருமானத்தைப் பெற்றுக் கொள்ளுதல், கடந்த 6 வருடங்களாக தேங்கிக் கிடக்கும் கொட்டகலை பிரதேச சபையின் கட்டுமானப் பணிகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளூர் கடன் மற்றும் அபிவிருத்தி நிதியத்தின்கீழ் 50 மில்லியன் கடனாகப் பெற்றுக் கொள்ளுதல், குப்பைகளை மீள் சுழற்சி செய்தல், சேதனப் பசளை  திட்டத்தை அதிகரித்தல், உழவு இயந்திரம் பெற்றுக் கொள்ளுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

   விளையாட்டரங்கம் அமைக்க ஜனவரி முதலாந் திகதி அடிக்கல் நாட்டவும், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு சத்துணவுத் திட்டத்தை ஆரம்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

    கடந்த நான்கு வருடங்களாக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டங்களுக்கு ஆதரவளித்தது போல, ஐந்தாவது திட்டத்துக்கும் ஏகமனதாக ஒத்துழைப்பு வழங்கியமைக்கு சகல உறுபினர்களுக்கும் செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கும் , என்னை அரசியலுக்கு அறிமுகப்படுத்திய அமரர் ஆறுமுகன் தொண்டமான், சபையின் வளர்ச்சிக்கு நிதிகளை வழங்கி உதவிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜீவன், ராமேஸ்வரன் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

   புதிதாக உருவாக்கப்பட்ட சபைகளில் கொட்டகலை பிரதேச சபை மாத்திரம் 2019 ஆம் விருது பெற்றமையும், 2021 ஆம் ஆண்டு கணக்கறிக்கைக்கு பாராட்டு கிடைத்தமையும்  சபைக்கு கிடைத்த கௌரவங்களாகும். உள்ளூராட்சி மன்றங்கள் எந்த நேரத்தில் கலைக்கப்பட்டாலும் மக்களுக்கான அபிவிருத்தி பணிகள் தங்குதடையின்றி நடைபெறும் வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சபையினதும் உறுப்பினர்களதும்  சார்பாக அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் உரித்தாகட்டும் என்றார்