கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கா வைரஸ் தொற்றை கண்டறிய நடவடிக்கை





இலங்கைக்கு வரும் பயணிகள் சிக்கா (Zika) வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்களா என்பது தொடர்பில் கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை நாட்டுக்கு அது தொடர்பில் எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை எனவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

நாட்டுக்குள் வருபவர்களை பரிசோதிக்க உறுதியான கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக இலத்தின் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்கள் அவதானிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

சிக்கா என்ற வைரஸ் தற்போது வெளிநாடுகளில் பரவி வருகிறது. 1947–ம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ‘சிக்கா’ என்ற காட்டில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டதால் அதற்கு இந்தப் பெயர் வழங்கப்பட்டது. 

ஆபிரிக்க, ஆசிய கண்டத்தில் பரவிய இந்த வைரஸ் 2007–ம் ஆண்டு மேற்கு பசிபிக் பெருங்கடல் அருகில் உள்ள ‘யாப்’ என்ற தீவில் 75 சதவீதம் பேரை தாக்கியது. 

அதனால் தொடர்ந்து 2015–ம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் இருந்து வருகிறது. இலத்தீன் அமெரிக்காவில் பிரேசில், பார்படாஸ் உள்ளிட்ட 20 நாடுகளில் ‘சிக்கா’ வைரஸ் பரவி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.