பிரித்தானிய தாளத்துக்கு இராணுவத்தை ஆட்ட வேண்டாம்- கம்மம்பில



பிரித்தானிய நாட்டின் உதவி மற்றும் அந்நாட்டின் ஆலோசனைகள் என்பவற்றின் பின்னால் சென்று யுத்தத்தை வெற்றி கொண்ட இராணுவத்தை தோல்வியடைந்த இராணுவமாக ஆக்க வேண்டாம் என நாட்டை நேசிக்கும் ஒருவன் என்ற வகையில் இந்த அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என தூய ஹெல உறுமயவின் செயலாளர் உதய கம்மம்பில தெரிவித்தார்.
அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கை இராணுவத்துக்கு 6.6 மில்லியன் பவுன்களை (200 மில்லியன் ரூபா) வழங்குவதாக பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹிகோ ஸ்வாயர் இலங்கை விஜயத்தின் போது அறிவிப்புச் செய்திருந்தார்.
இலங்கை இராணுவத்துக்கு எதிரான புலி ஆதரவு சக்திகளின் அழுத்தங்களுக்கு மத்தியில் ஏன் இலங்கை இராணுவத்துக்கு பணம் வழங்கினீர்கள் என அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினரான சியோபோன் மெக்டொனா வெளிவிவகார அமைச்சரிடம் வினவியிருந்தார்.
இதற்கு, இலங்கைக்கு பணம் கொடுப்பது வேறு எதற்கும் அல்ல. யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை தயார் செய்வதற்கு எனவும், யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு முதலில் இராணுவத்தில் மேற்கொள்ளவேண்டி மாற்றங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் எனவும் ஸ்வாயர் பதிலளித்திருந்தார் எனவும் செயலாளர் உதய கம்மம்பில தெரிவித்தார்