கேளர வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.




கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் வெள்ளச் சூழ்நிலை மோசமடைந்து வருகிறது. புதன்கிழமை ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து மாநிலத்தில் வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் உள்ள 35 அணைகள் திறக்கப்பட்டு வெள்ள நீர் வெளியேற்றப்படுகிறது. 12 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியார் அணை அதன் முழு கொள்ளளவான 142 அடியை எட்டியுள்ளது என கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
இது கொச்சி விமான நிலையமா? பெருக்கெடுக்கும் ஆறா? பதறவைக்கும் காட்சி
எடப்பாடிக்கு பினராயி கடிதம்
இதனிடையே முல்லை பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் என்றும், அணையின் நீர் மட்டத்தை 139 அடியில் பராமரிக்கவேண்டும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
ஆகஸ்டு 18ஆம் தேதி வரை கொச்சி விமான நிலையம் மூடப்படும் என்றும் கேரள முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.
கேரளா
முல்லைப்பெரியார் அணையின் வெள்ளநீர் கீழே உள்ள இடுக்கி அணைக்கு வந்து, அங்கிருந்து பெரியார் நதி பாயும் செருதோனிக்கு வந்துசேரும் என்பதால் நதிக்கு அருகில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வார காலமாக கனமழை பெய்யும் கேரளாவில் இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 42 பேர் பலியாகியுள்ளனர் என்றும், சுமார் ஒரு லட்சம் மக்கள் வீடுகளை இழந்து வெள்ள நிவராண முகாம்களில் தங்கியுள்ளனர் என்றும் அரசாங்க தரவுகள் கூறுகின்றன.
கேராளாவில் 44 நதிகள் உள்ளன. இதில் பெரியார் நதி 244கிலோமீட்டர் பாய்ந்து செல்லும் நீண்ட நதி. மழைக்காலங்களில் இந்த நதியின் வெள்ள நீர் இறுதியாக வந்துசேரும் இடம் இடுக்கி மாவட்டம் ஆகும். தற்போது அங்குள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியார் அணையின் நீர் மட்டம் உயர்வு,மக்கள் வெளியேற்றம்படத்தின் காப்புரிமைFACEBOOK
முல்லைப் பெரியார் அணையின் நீர் மட்டம் உயந்ததால், புதன் கிழமை அதிகாலை வெறும் நான்கு மணிநேரத்தில் ஐந்து கிராமங்களில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டதாக கேரள மாநில நீர் மேலாண்மை குழுவின் சிறப்பு அதிகாரி ஜேம்ஸ் வில்சன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
''முல்லைப் பெரியார் அணையில் இருந்து இடுக்கி அணைக்கு வெள்ள நீர் செல்லும் வழியில் சுமார் 75,000 மக்கள் குடியிருக்கின்றனர். வெறும் நான்கு மணி நேரத்தில் அவர்களை வெளியேற்றி, பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய காட்டாயம் நேர்ந்தது. தற்போது கேரளா சந்தித்து வரும் வெள்ளம் 1961ல் நடந்ததை விடவும் கோரமானது. 1924ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை ஒத்தது.'' என்று ஜேம்ஸ் வில்சன் தெரிவித்தார்.
கேரளா
இன்று மதியம் ஒரு மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 142 அடியாக இருந்ததாகவும், நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் ஆகியன நொடிக்கு முறையே 30,056 கன அடி மற்றும் 2,178 கன அடியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இச்சூழலில், கொச்சி விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
35 அணைகளில் நீர் திறப்பு
"கேரளத்தில் உள்ள 35 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகின்றன. மாநிலத்தில் பல மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கன்னூர், காசர்கோடு, திருச்சூர், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்று கேரள முதல்வர் அலுவலகம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.
எர்ணாகுளம் மெட்ரோ சேவை பாதிப்பு
கேரள வெள்ளச் சூழ்நிலையில் இதுவரை பாதுகாப்பான பகுதியாக கருதப்பட்ட எர்ணாகுளம் பகுதியிலும் வெள்ளம் சூழத் தொடங்கியுள்ளது. மெட்ரோ ரயில் பாதை மேல் மட்டத்திலேயே இருந்தாலும், மெட்ரோ ரயில் நிலையங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இந்த சேவையை மக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார் பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன்.
ஒரே நாளில் 25 பேர் பலி
கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவுக்கு இன்று புதன்கிழமை மட்டும் 25 பேர் பலியாகியுள்ளனர்.மலப்புரம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 14 பேர்.
இறந்தவர்களில் மற்றவர்கள் கோழிக்கோடு, பத்தனம் திட்டா, இடுக்கி, ஆலப்புழா, கொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள். கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் 3 நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது.
மீட்பு விமானம், ராணுவம் வேண்டும்: மத்திய அரசுக்கு கோரிக்கை
கூடுதல் ராணுவப் படையினர் மற்றும் பேரிடர் மீட்புப் படையினரை கேரளாவுக்கு அனுப்பவேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உபகரணங்களை அனுப்ப சி-17 ரக விமானங்கள் தேவை என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.