மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள்


(க.கிஷாந்தன்)
ஊவா மாகாணம் அப்புத்தளை தம்பேதன்ன மவுசாகல தோட்டத்தில் 2014ல் மண்சரிவில் பாதிப்புக்குள்ளாகியிருந்து வாழ்ந்து வந்த 68 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை கட்டிக்கொடுக்க  26.02.2019 அன்று இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர்கள் சங்கத்தின் பொது செயலாளரும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஸ் மற்றும் அதிகாரிகள் இணங்காணப்பட்ட இடங்களை பார்வையிட்டு அடிக்கல் நாட்டி வைத்தனர்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் 26.02.2019 அன்று மதியம் மேற்படி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 68 குடும்பங்களுக்கு தம்பேதன்ன பெருந்தோட்ட பகுதியில் குடியிருப்புகள் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.  குறித்த ஒரு வீட்டிற்கு 12 இலட்சம் ரூபா செலவிடப்படுகின்றது.
இந்நிகழ்வின் போது பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி.விஜயலட்சுமி, பசறை பிரதேச சபையின் செயலாளர், தோட்ட முகாமையாளர், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரிகள், வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் அதிகாரிகள், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மண்சரிவு அபாயத்தினால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸின் கவனத்திற்கு பாதிக்கப்பட்ட மக்கள் கொண்டு வந்ததையடுத்து, இராஜாங்க அமைச்சர் கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் 26.02.2019 அன்று அடிக்கல் நாட்டப்பட்டமை குறிப்பிடதக்கது.