இம்ரான் கான் - "இந்தியாவுக்கு பதிலடி தருவதற்கு நேரமும், இடமும் முடிவு செய்யப்படும்"




பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாமை குறி வைத்து இன்று அதிகாலை இந்தியா தாக்குதல் நடத்தியதாக இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
15.30: இந்தியாவுக்கு பதிலடி தருவதற்கு நேரமும், இடமும் முடிவு செய்யப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இந்திய விமான படைகளுக்கு எதிராக சரியான நேரத்தில் எதிர்வினையாற்றிய பாகிஸ்தானிய விமானபடைக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் இம்ரான்கான்.
எந்த சூழ்நிலைக்கும் தயாராக இருக்கும்படியும் படைகளை வலியுறுத்தி உள்ளார் இம்ரான் கான்.
14:40: தாக்குதலை நேரில் பார்த்த பாகிஸ்தானியர்கள் சொல்வதென்ன?
''அதிகாலை 3 மணியளவில், நாங்கள் ஒரு பயங்கரமான சத்தத்தை கேட்டோம். பூமி அதிர்வதுபோல இருந்தது. அதன்பிறகு எங்களால் தூங்கமுடியவில்லை.அடுத்த 5-10 நிமிடங்களில், அது ஒரு வெடிச்சத்தம் என்று தெரியவந்தது. என் உறவினர் அங்கு வசிக்கிறார். அந்த இடத்தின் பெயர் கங்கட். என் உறவினரின் வீடு சேதமடைந்தது; ஒருவருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது. என உறவினர்கள், அங்கு விமானங்கள் பறக்கும் சத்தம் கேட்டதாகவும், அதன்பிறகு வெடி வெடித்ததாகவும் கூறுகின்றனர்."என்று ஜப்பா பகுதியை சேர்ந்த விவசாயி பிபிசியின் எம்.ஏ.ஜேரலிடம் தெரிவித்தார்.
13:40: இந்தியா பதிலடி தாக்குதல் நடத்திய பாலகோட் எங்கிருக்கிறது?
பாகிஸ்தான்
இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறும் பாலகோட் என்னும் பெயரில் இருநாடுகளுக்கிடையேயான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதி மற்றும் பாகிஸ்தானின் எல்லைக்குட்பட்ட பகுதி என இருவேறு இடங்கள் உள்ளதாக குழப்பம் எழுந்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானின் எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள பாலகோட் பகுதியை சேர்ந்த பத்திரிகையாளர் ஜுபைர் கானை பிபிசி உருது தொடர்பு கொண்டு பேசியபோது, "பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட மன்ஷெரா மாவட்டத்தை சேர்ந்த மக்கள், இன்று அதிகாலை சுமார் மூன்று முதல் நான்கு மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட வெடிச்சத்தங்களை கேட்டதாக தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த தாக்குதல் குறைந்தது நான்கு மணிநேரம் மன்ஷெரா மற்றும் அபோதாபாத்துக்கு அருகிலுள்ள பாலகோட்டில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன" என்று அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான்படத்தின் காப்புரிமைM.A.JARRAL
மேலும், தாக்குதல் நடந்ததாக கூறப்படும் ஜப்பா, கார்ஹி ஹபிபுல்லா பகுதிகளை சேர்ந்த மக்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது அங்கு ஏற்கனவே இருந்த பாதுகாப்பு படைகளால் தாங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக பாலகோட் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம், இந்தியா தாக்குதல் தொடுத்தது பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பாலகோட் பகுதிதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
12:30: நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
11:55: "இன்று அதிகாலை, பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமதின் மிகப்பெரிய பயற்சி முகாமின் மீது இந்தியா தாக்குதல்களை தொடுத்தது." என்று இந்திய வெளியுறவுச் செயலர் தெரிவித்துள்ளார்.
பிபிசிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
மேலும், "இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமதை சேர்ந்த பல பயங்கரவாதிகள், மூத்த கமாண்டர்கள், பயிற்சியாளர்கள், ஜிகாதிகள் அழிக்கப்பட்டனர். இந்த முகாம், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் உஸ்தாத் கெளரியால் தலைமை வகிக்கப்பட்டது." என்றும் தெரிவித்தார்.
"ஜெய்ஷ் இ முகமது குறித்து பாகிஸ்தானுக்கு தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து அதனை மறுத்து வருகிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் எந்தவித திடமான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை." என்றும் அவர் தெரிவித்தார்.
11.40: ஜெய்ஷ் இ முகமது அமைப்பு மேலும் பல தற்கொலை தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தது என இந்திய வெளியுறவுச் செயலர் தெரிவித்துள்ளார்.
என்ன சொல்கிறது பாகிஸ்தான்?
"பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் தொடுத்து வருவதாக இதற்கு முன்பு கூட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. அவற்றை நாங்கள் மறுத்துவிட்டோம். இந்நிலையில், உண்மையிலேயே இந்த தாக்குதலை இந்தியா நடத்தியிருக்குமானால், அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோதியின் சமீபத்திய கூற்றுக்கு நேரெதிராக இருக்கும்" என்று பிபிசியிடம் பேசிய இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் உயர் ஆணையாளர் அஷ்ரப் ஜஹாங்கிர் தெரிவித்துள்ளார்.
"ஏனெனில், மூன்று நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, இராஜ்ஜிய முறையை கடைபிடித்து பாகிஸ்தான் விவகாரத்தை இந்தியா அணுகும் என்றும், இருநாட்டு பிரதமர்களும் இணைந்து கல்வியறிவின்மை, வறுமைக்கு எதிராக போராடுவோம் என்று தெரிவித்திருந்தார்" என்று அவர் மேலும் கூறினார்.
பாகிஸ்தானை சேர்ந்த எழுத்தாளரும், பாதுகாப்பு ஆய்வாளருமான ஆயிஷா சித்திக், "இந்தியா நடத்தியதாக கூறப்படும் இந்த தாக்குதல் உண்மையானதாக இருக்குமானால், இது இருநாடுகளுக்கும் மிகவும் முக்கியமான கட்டம். பாலகோட் பகுதியில் இந்த தாக்குதலை இந்தியா நடத்தியதாக கூறப்பட்டாலும், இதில் பாகிஸ்தான் தரப்பில் எவ்வித சேதமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்று பாகிஸ்தானின் பாதுகாப்புறை கூறியுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.
11:20 - பாலகோட்
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின், மன்ஷெரா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் தான் பாலகோட். குன்ஹார் நதிக்கரையில் இந்த நகரம் அமைந்துள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்நகரம், மலைகளை கொண்டது. கோடை காலங்களில் மிகவும் ரம்யமான வானிலையை கொண்ட பகுதியாக இது அறியப்படுகிறது.
2005ஆம் ஆண்டு, ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இந்த பகுதி பெரிய பாதிப்பை சந்தித்தது. ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகிய இந்த நில நடுக்கத்தில், சுமார் 40ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்த பகுதி பழைய சூழலுக்கு திரும்ப பல ஆண்டுகள் ஆகின. இப்பகுதியின் மறு சீரமைப்பிற்காக சௌதி அரேபிய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவிகள் செய்துள்ளது.
சிந்து சமவெளி நாகரீகம் குறித்த ஆய்வுகள் நடைபெறும் இடங்களில் ஒன்றாகவும் பாலகோட் உள்ளது.
11:07 - "பஞ்சாபின் அம்பாலா விமானப்படை முகாமில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்ட விமானங்கள், சர்வதேச எல்லையை தாண்டாமல் குண்டுகளை வீசியது. மொத்தம் முப்பது நிமிடங்கள் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன, அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக திரும்ப வந்தன. சுமார் அதிகாலை மூன்றிலிருந்து மூன்றரை மணி வரை இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டது." என்று பிபிசி செய்தியாளர் ஜுகல் புரோஹித்திடம் இந்திய விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.