அழியும் கடல் உயிர்கள்


புவி வெப்பமாவதால் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காணப்படும் அரிய வகை கடல் பாசிகள், பவளப் பாறைகள் அழிந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புவி வெப்பமாவதால் கடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ராமநாதபுரம் வனச் சரகர் சதீஸ் பிபிசி தமிழிடம் கூறுகையில், “பிப்ரவரி மாதத்திற்கு பிறகு கடல் தண்ணீரின் வெப்பநிலை 32ல் இருந்து 36 டிகிரி வரை உயர்ந்துள்ளது. இதனால் கடல் பாசிகள் பாதிப்படைந்துள்ளன. கடந்த மூன்று மாதங்களில் மன்னார் வளைகுடா பகுதிகளில் உள்ள பவளப்பாறைகள் அதிகம் பாதிக்கப்பட்டு கரை ஓதுங்குகின்றன. கடல் நீரில் அதிகரிக்கும் வெப்பம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வனத்துறை மற்றும் விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது" என்று தெரிவித்தார்.
பூமியில் வளரும் பல தாவரங்கள் மூலிகைகளாகப் பயன்படுவதை போன்று, கடல் தாவரங்களான பாசிகளும் மருந்தாகப் பயன்படுகின்றன. கடல் பாசி அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது. இந்தியாவிலும் மாத்திரைகள் தயாரிக்க பயன்படுகிறது.
தென் தமிழக கடலோர மாவட்ட மீனவப் பெண்கள் பாசி வளர்ப்பில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பாம்பன், தோணிதுறை பகுதியில் செயற்கை முறையில் வளர்க்கப்படும் கடல் பாசிகள், கடலின் வெப்பம் அதிகரிப்பதால் அழுகி போவதோடு, அவற்றின் வளர்ச்சியும் குன்றிப்போய் உள்ளது.
ராமேஸ்வரம் அருகே பாம்பன் பாலம் மற்றும் தோணித்துறை கடற்கரை பகுதிகளில் கவட்டை, கஞ்சி, மரிக்கொழுந்து, கப்பா பைக்கஸ் ஆகிய கடல் பாசிகள் மீனவர்களால் செயற்கை முறையில் வளர்க்கப்படுகின்றன.
இப்பாசிகள் அகார் அல்வா மற்றும் குளிர்பானம் உள்ளிட்ட உணவு பொருட்கள், மருந்து பொருட்கள் தயாரிக்க பயன்படுகின்றன. கடந்த பத்து ஆண்டுகளாக இப்பகுதிகளில் மூங்கிலில் கயிறு கட்டி, கூண்டு அமைத்து பாசிகள் வளர்க்கப்படுகின்றன.
தமிழக கடற்பகுதியை பாதிக்கும் பருவநிலை மாற்றம் - அழியும் பவளப் பாறைகள்
அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்கள் வரையிலான குளிர்காலத்தில் கவட்டை, கப்பா பைக்கஸ் பாசிகள் விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததைவிட அதிக வளர்ச்சியடைகின்றன.
பின்னர் ஏப்ரல் மாதம் தொடங்கி, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் கடல் நீரில் தட்பநிலை அதிகரிப்பதால், தேவையான நைட்ரஜன் சத்து கிடைக்காமல் கடல் பாசிகளின் வளர்ச்சி குன்றிப்போய் காணப்படுகிறது.
இவற்றில் கவட்டை பாசி வெள்ளை நிறத்தில் வளர்வதால் தரமும் குறைந்து போய்விட்டது. குளிர்காலத்தில் 45 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்தபோது 80 முதல் 100 கிலோ வரை பாசிகள் கிடைத்தன. இப்போதோ 10 முதல் 20 கிலோ வரை மட்டுமே பாசிகள் கிடைப்பதால் பாசி வளர்க்கும் மீனவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இது குறித்து பாசி வளர்க்கும் மீனவர் முகமது பிபிசி தமிழிடம் கூறுகையில், "கடந்த ஆண்டைவிட இந்தாண்டு கடல் நீரின் வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால் கடல் பாசி மட்டுமல்லாது கடற்புற்கள், பவளப்பாறைகள் என அனைத்தும் அழிந்து கடலில் இருந்து கரைக்கு வெளியேறி வருகின்றன. இதனால் மீன்களின் எண்ணிக்கை கனிசமாக குறைந்து வருவதால் மீனவர்கள் தொழிலுக்கு செல்லும்போது மீன்கள் கிடைக்கமால் மீன்பிடி தொழில் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது" என்றார்.
இதே போல் ராமேஸ்வரத்தில் இருந்து தூத்துக்குடி வரை கடற்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம், தென்கிழக்கு ஆசியாவில் நிறுவப்பட்ட முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகமாகும்.
560 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தில் கோரி தீவு, குருசடை தீவு, புள்ளிவாசல் தீவு, பூமரிச்சான் தீவு, மனோலி தீவு, நல்லத்தண்ணி தீவு, உப்புத் தண்ணி தீவு, என 21 தீவுகள் அமைந்துள்ளன.
இந்த 21 மன்னார் வளைகுடா தீவுகளைச் சுற்றிலும் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரியவகை உயிரினங்கள் வசிக்கின்றன.
குறிப்பாகப் பாலூட்டி இனங்களைச் சேர்ந்த 'ஆவுளியா' என்று அழைக்கப்படும் கடல் பசு, 'ஓங்கில்' என்று அழைக்கப்படும் டால்பின்கள் அதிகமாக இப்பகுதியில் காணப்படுகின்றன.
தமிழக கடற்பகுதியை பாதிக்கும் பருவநிலை மாற்றம் - அழியும் பவளப் பாறைகள்
கடல் பசு, டால்பின், ஆமை, கடல் குதிரை உள்ளிட்டவை, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காணப்படக்கூடிய 13 வகையான கடல் புற்களையே பிரதானமாக உண்கின்றன. மேலும் இந்த கடல் புற்களில் காணப்படும் நுண்ணுயிரிகள் கடலின் சூழலியல் மண்டலம் சீராக இயங்க உதவுகின்றன.
ஆனால் தற்போது பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் சுமார் 100 கி.மீ. பரப்பளவில் கடலில் கொட்டப்படும் குப்பைகள், கடலில் கலக்கும் கழிவுநீர் மற்றும் விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்தும் தடை செய்யப்பட்ட படகுகளாலும் கடற்கரைகளில் கடல் புற்கள் ஒதுங்குகின்றன.
தமிழக கடற்பகுதியை பாதிக்கும் பருவநிலை மாற்றம் - அழியும் பவளப் பாறைகள்
ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக கடல் பாசிகளில் பரவிய நோய் காரணமாக நஷ்டம் ஏற்பட்டதால் பாசி வளர்பதில் மீனவர்கள் அதிகம் ஈடுபாடு காட்டவில்லை என்று பிபிசி தமிழிடம் பேசிய முகமது கூறுகிறார்.
"இந்த ஆண்டு மீனவர்கள் மீண்டும் பாசி வளர்க்க ஆரம்பித்தோம். ஆனால் கடல் நீரின் வெப்பம் அதிகரிப்பதால் பாசிகள் அழுகத் தொடங்கியுள்ளன. இதனால் அதிக நஷ்டம் அடைந்து வருவதாக" பிபிசி தமிழிடம் வேதனையுடன் தெரிவித்தார் பாசி வளர்க்கும் மீனவப் பெண் கனிதாபேகம்.
இது குறித்து மண்டபம் மீன்பிடி சங்கத்தலைவர் ஜாகீர் கூறுகையில், மத்திய மாநில அரசுகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்காக கடல் பாசிகள் வளர்ப்பதை ஊக்குவித்து வருகின்றன. ஆனால் அதே சமயத்தில் பூமி வெப்பமயமாவதால் கடலில் ஏற்படும் மாற்றங்களாலும், கடல் நீர் அதிக வெப்பமடைவதாலும் கடல் புற்கள், பவளப்பாறைகள், கடல் பாசிகள் அழிந்து வருதை தடுக்க மண்டபம் பகுதியில் அமைந்துள்ள மத்திய கடல் ஆராய்ச்சி மையம், ஆய்வு செய்து தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
கடல் நீரின் வெப்பம் அதிகரிப்பால் கடல் பாசிகள் பாதிக்கப்படுவதாக பாசி வளர்ப்பவர்கள் கூறுவது குறித்து மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் மண்டபத்தில் இயங்கி வரும் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் விஞ்ஞானி ஈஸ்வரனிம் பிபிசி தமிழ் பேசியது.
கடல் பாசியை பொருத்தமாட்டிலும் கடல் நீரின் வெப்பநிலை 30 டிகிரி முதல் 35 டிகிரி வரை உயிர்வாழ முடியும். ஆனால், 2010ஆம் ஆண்டு ஆய்வின்படி கடல் நீர் 26 முதல் 28 டிகிரி வரை உயர்ந்தது. பின்னர், 2013-14 ஆண்டுகளில் 30 முதல் 34 டிகிரி வரையிலும், கடந்த ஆண்டு 34 முதல் 35 டிகிரி வரையிலும் உயர்ந்துள்ளது. இதனால் கடல் பாசி மட்டுமின்றி கடல் வாழ் உயிரினங்கள், பவளப்பாறைகள், கடல் புற்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன. கடல் நீரின் வெப்பத்தை குறைக்க இதுவரை இப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டும் தீர்வு கிடைக்காததால், "Temperature Tolerant Starin" என கூறப்படும் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்று வாழக்கூடிய புதிய வகை கடல் பாசிகளை உருவாக்குவது குறித்த ஆய்வு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.