பொகவந்தலாவ பகுதியில் வெள்ளத்தினால்பல குடும்பங்கள் இடம்பெயர்வு


(க.கிஷாந்தன்)

பொகவந்தலாவ பகுதியில் பெய்து வரும் அடை மழை காரணமாக பொகவந்தலாவ கொட்டியாகலை மற்றும் தெரேசியா ஆகிய தோட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 49 குடும்பங்களை சேர்ந்த 238 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

அந்தவகையில் பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 38 குடும்பங்களைச் சேர்ந்த 184 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தில் 09.10.2019 அன்று மாலை வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் 38 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் உயிராபத்துகள் எதுவும் இல்லையெனவும், சில பொருட்கள் மட்டும் சேதமாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

இதன்காரணமாக இக்குடியிருப்பில் வசித்து வந்த 184 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இவர்கள்  தோட்ட சிறுவர் நிலையத்தில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பொகவந்தலாவ தெரேசியா தோட்டத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 15 கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் வீடும் பகுதியளவு சேதமாகியுள்ளது. 09.10.2019 அன்று பெய்த கடும் மழை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதில் குறித்த வீட்டில் உரிமையாளர்கள் சுய தொழிலுக்காக 15 கோழிகளை வளர்த்துள்ளனர். மண்மேடு சரிந்து விழுந்த வீட்டின் பின்பகுதியில் இந்த கோழிகள் பட்டிகள் ஊடாக வளர்க்கப்பட்டுள்ளது.

அப்பட்டியின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் 15 கோழிகள் மண்ணில் புதையுண்டு உயிரிழந்துள்ளது.

அதேவேளை அந்த வீட்டின் பகுதியளவு சேதமடைந்திருப்பதால் அவ்வீட்டில் வசிக்கும் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, அப்பகுதயில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காரணமாக அப்பகுதியில் உள்ள 11 குடும்பங்களை சேர்ந்த 54 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.