பாடசாலை மாணவர்களுக்கு சீருடை, பாதணிகளுக்கு வவுச்சர்

ஜனவரி மாதம் சீருடை மற்றும் பாதணிகளுக்கான வவுச்சர் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறினார்.  
வவுச்சர்கள் தயாரிக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவை எதிர்வரும் 29,30,31ஆம் திகதிகளில் பாடசாலை அதிபர்களுக்கு கையளிக்கப்படுவதுடன் விரைவில் மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான வழிவகைகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  
சீருடைக்கு ஒரு வவுச்சர், பாதணிக்கு ஒரு வவுச்சர் என இரண்டு வவுச்சர்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தினகரனுக்கு சுட்டிக்காட்டினார்.  
இந்த விடயம் தொடர்பில் இராஜங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிடிய கூறியுள்ளதாவது,  நாட்டில் 44இலட்சம் வரையிலான மாணவர்கள் உள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும் இம்முறை இலவச சீருடை மற்றும் காலணிகள் வழங்கப்படவுள்ளன. பாடசாலைகள் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளன. நாம் அரசாங்கத்தை கடந்த நவம்பர்  மாதம் 20ஆம்  திகதியளவில்தான் அமைத்தோம். அதுவரை பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான கேள்விமனு கோரப்பட்டிருக்கவில்லை.  
இது இலகுவான பணியல்ல. வெளிப்படைத் தன்மையுடன் கேள்விமனுக்கோரலை முன்னெடுக்க ஆறுமாதங்கள் செல்லும். கடந்த அரசாங்கம் இந்த விடயத்தை மறந்திருந்ததா எனத் தெரியவில்லை. பல காரணங்களை கூறுகின்றனர் என்றார்.  
சுப்பிரமணியம் நிஷாந்தன்  


Advertisement