மலேசிய உச்சி மாநாட்டில் பங்கேற்காத இம்ரான்கான்


இஸ்லாமிய நாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் மலேசிய அரசு ஏற்பாடு செய்துள்ள உச்சி மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்காதது பரபரப்பையும் புது விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கடைசி நேரத்தில் சௌதி அரேபியா கொடுத்த அழுத்தம் காரணமாகவே பிரதமர் இம்ரான்கான் மலேசிய பயணத்தைக் கைவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இது தவறான தகவல் என மறுத்துள்ளார் மலேசிய பிரதமர் துன் மகாதீர்.
கோலாலம்பூரில் நடைபெறும் 'கேஎல் உச்சி மாநாடு 2019', இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு (ஓஐசி - OIC)மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள புதிய ஏற்பாடு அல்ல என்றும், இது தொடர்பாக சௌதி அரேபிய மன்னர் சல்மான் அப்துல்அசிஸ் அல் சவுத்திடம் தாம் விளக்கமளித்து இருப்பதாகவும் மலேசிய பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் உச்சி மாநாட்டின் நோக்கம் என்ன?

மலேசியா, இந்தோனிசியா, பாகிஸ்தான், துருக்கி மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை ஒருங்கிணைப்பதும், அதன் மூலம் இஸ்லாமியர்கள் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள், விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதும் தான் கோலாலம்பூர் உச்சி மாநாட்டின் நோக்கம் என்கிறார் பிரதமர் மகாதீர்.
இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு உலகெங்கிலும் இஸ்லாமியர்கள் வாழக்கூடிய 56 நாடுகளுக்கும் மலேசியா அழைப்பு விடுத்தது. அதிலும் குறிப்பாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கடந்த மாதமே அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மலேசிய பிரதமர் மகாதீர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்நிலையில், டிசம்பர் 18ஆம் தேதியன்று மாநாடு துவங்கும் நிலையில், தமது கோலாலம்பூர் பயணத்தை திடீரென ரத்து செய்வதாக கடைசி நேரத்தில் அறிவித்துள்ளார் இம்ரான்கான்.
இதற்கு சௌதி அரேபியா தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தமே காரணம் என பாகிஸ்தானைச் சேர்ந்த ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் இது உண்மையல்ல என்கிறார் மலேசியப் பிரதமர்.
"இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் (இம்ரான்கான்) வராததற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். எனவே ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் உண்மை இல்லை.
"கோலாலம்பூர் மாநாட்டில் பங்கேற்க வருமாறு ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தோம். முன்னதாக மூன்று நாடுகளின் அரசுத் தலைவர்களை மட்டுமே மாநாட்டுக்கு அழைப்பதாக இருந்தது. பிறகு கத்தார், இந்தோனேசிய தலைவர்களுக்கு ஆர்வம் இருப்பின் அவர்களையும் அழைப்பது என முடிவானது.
"பங்கேற்க இயலாது என்றால், வர இயலாது என்றால் நாம் யாரையும் நிர்பந்திக்க இயலாது. எனினும் அந்நாடுகள் தங்களைப் பிரதிநிதிக்கும் குழுவை அனுப்பியுள்ளன. இதன் மூலம் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் விஷயங்கள் குறித்து அவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர் என்பது தெரிகிறது," என்று பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார்.

சௌதி மன்னரிடம் மாநாடு குறித்து விளக்கம் அளித்த மகாதீர்

சௌதி மன்னர்படத்தின் காப்புரிமைDAN KITWOOD/GETTY IMAGES
Image captionசௌதி மன்னர்
இதற்கிடையே, பாகிஸ்தான் பிரதமரின் வருகை ரத்தானது இஸ்லாமிய நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இதில் சௌதி அரேபியாவின் தலையீடு இல்லை என மறுத்தாலும், மாநாடு தொடர்பாக சௌதி மன்னரிடம் விளக்கம் அளித்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார் துன் மகாதீர்.
செவ்வாய்க்கிழமை தாம் பங்கேற்க இருந்த ஒரு நிகழ்ச்சியை திடீரென ரத்து செய்துவிட்டு, அவர் காணொளி வசதி மூலம் சவுதி மன்னர் சல்மானுடன் உரையாடினார். அப்போது கோலாலம்பூர் மாநாடானது, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு (ஓஐசி) மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள புதிய ஏற்பாடு அல்ல என்று தாம் சவுதி மன்னரிடம் தெளிவுபடுத்தியதாக பின்னர் செய்தியாளர்களிடம் மகாதீர் குறிப்பிட்டார்.
"நாங்கள் மிகவும் சிறியவர்கள். அத்தகைய மாற்று ஏற்பாட்டைச் செய்யக்கூடிய அளவுக்குப் பெரிய நாடல்ல என்பதை மன்னரிடம் விவரித்தேன். பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது போல் கோலாலம்பூர் மாநாடானது மாற்று ஏற்பாடு அல்ல.
"அதேவேளையில், இஸ்லாமிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கும் தளமாக கோலாலம்பூர் மாநாடு ஏற்பாடு செய்யப்படுவதில் தமக்கு விருப்பம் இல்லை என்பதை சௌதி மன்னரும் தெளிவுபடுத்தினார்.
"மேலும், OIC போன்ற பெரிய தளத்தில் இஸ்லாமியர்களின் விவகாரங்களை விவாதிப்பதே பலனளிக்கும் என்ற அவர் கருத்தையும் தெரிவித்தார். நாங்கள் கொண்டுள்ள கருத்ததில் இருந்து அவர் மாறுபட்டுள்ளார்.
"இஸ்லாமியர்களின் பிரச்சினைகள் குறித்து இரண்டு அல்லது மூன்று நாடுகள் மட்டும் விவாதிப்பது சரியல்ல என்றும் மன்னர் கருதுகிறார். அவரது கருத்தை நானும் ஒப்புக் கொண்டேன்," என்றார் பிரதமர் மகாதீர்.
இஸ்லாமியர் விவகாரங்கள் குறித்து விவாதிக்க சவுதி அரேபியா ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்கிறது எனில் அதில் மலேசியா பங்கேற்க தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், கோலாலம்பூர் மாநாட்டில் தம்மால் பங்கேற்க முடியாததற்கான காரணத்தை சவுதி மன்னர் தம்மிடம் விவரித்ததாகக் கூறினார்.

மகாதீருக்கு மிகவும் நெருக்கமான இம்ரான்கான் வராததால் நெருடல்

"இஸ்லாமிய உலகத்தின் அங்கமாக உள்ள 56 நாடுகளுக்கு கோலாலம்பூர் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. அனைத்து நாடுகளும் வெவ்வேறு தளங்களில் தங்களுடைய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்துள்ளன," என்று மலேசிய பிரதமர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பொறுப்பேற்றது முதல் அவர் மலேசியாவுடன் நெருக்கமான நட்பு பாராட்டி வருகிறார். அவர் முக்கியமான விவகாரங்கள் குறித்து மலேசியப் பிரதமருடன் தொடர்ந்து கலந்தாலோசிப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே கோலாலம்பூர் மாநாட்டில் அவர் பங்கேற்பது உறுதி எனக் கூறப்பட்ட நிலையில், திடீரென அவர் தனது பயணத்தை ரத்து செய்திருப்பது இஸ்லாமிய நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதுடன், புதிய விவாதப் பொருளாகவும் இது மாறியுள்ளது.