வரலாற்று ஆய்வாளர் புத்தளம் அப்துல் லத்தீப் காலமானார்

ஜனாஸா செய்தி
********************
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சிரேஷ்ட உறுப்பினரும் ஓய்வு பெற்ற ஆசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான புத்தளத்தைச் சேர்ந்த எம்.ஐ.எம். அப்துல் லத்தீப்
அவர்கள் தனது 79ஆவது வயதில் இன்று வபாத்தானார்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 9.00 மணிக்கு புத்தளம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அவரது மறைவுக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக, ஊடகவியலாளராக, பன்னூல் ஆசிரியராக, எழுத்தாளராக, ஆய்வாளராக, சமூக சேவையாளராக… என்று பன்முக ஆளுமை படைத்த எம்.ஐ.எம். அப்துல் லத்தீப் அவர்கள் புத்தளம் தமிழ் மொழி எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்து புத்தளம் மாவட்ட முஸ்லிம்களின் எழுத்து மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கு மகத்தான பங்காற்றினார்.

1960‌ ஆம் ஆண்டு முதல் புத்தளம் பிரதேசத்தின்‌ கல்வி, கலாசார, சமய, சமூக, கலை, விவசாய, வர்த்தகம் சார்ந்த பல அமைப்புகளில் பொறுப்பு வகித்து சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட எம்.ஐ.எம். அப்துல் லத்தீப் அவர்களது இழப்பு முஸ்லிம் சமூகத்திற்கும் குறிப்பாக புத்தளம் மாவட்ட முஸ்லிம் மக்களுக்கும் பெரும் இழப்பாகும்.

பல்வேறு கௌரவிப்புக்கள், விருதுகளை வென்றுள்ள அவருக்கு 2001ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஊடகப் பணிக்கான விருது வழங்கி அவரை கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

அவரது மறுமை வாழ்வு ஈடேற்றம் பெற வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு வல்ல இறைவன் அழகிய பொறுமையை நல்குவானாக!

என்.எம். அமீன்
தலைவர்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்.

தகவல்:
சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். முஸ்தபா (பலாஹி)


Advertisement