தெரு விழா போல அமைந்தது,கிழக்குப் புத்தகத் திரு விழா






‘கற்றது கையளவு கல்லாதது கடலளவு’ எனக்கூறுவார்கள். வாசிப்பும் தேடலும் விரிய விரியத்தான் நாங்கள் எவ்வளவு சிறுமையானவர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு பெற்றோரும், ஆசிரியர்களும், தமது பிள்ளைகளை மாணவர்களை சிறந்த வாசகர்களாக உருவாக்க வேண்டும்.

இன்றைய நவீன சாதனங்களின் பெருக்கம் சிறந்த வாசிப்புக்கு பல வழிகளை ஏற்படுத்தியிருந்த போதும், இளைய தலைமுறையினர் மேலோட்டமான பாவனைகளுடனேயே திருப்பதிப்பட்டுக் கொள்வதை அவதானிக்கிறோம். உண்மையில் வாசிப்பு என்பது ஒவ்வொருவரின் சுவாசத்தைப் போலவும் அமைகின்ற போதுதான் சிந்தனை மாற்றமும். சமூக மாற்றமும் எதிர்காலத்தை புத்தியால் வெல்லும் சாணக்கியமும் இயல்பாக உருவாகும்.




”வாசிப்பதால், மனிதன் பூரணமடைகிறான்”. சிறு வயதிலிருந்தே இந்த வார்த்தைகள் மிகவும் பிடித்தமானது. வாசிப்புப் பழக்கத்தை சிறுவயதிலிருந்தே ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதர்களிடமும் அது ஒரு பண்பாக வளர வேண்டும். எந்தவொரு மனிதருக்கும் முதல் நண்பராக அவரது வாசிப்பே அமைய வேண்டும்.


அக்கரைப்பற்றில், கடந்த வெள்ளியன்று ஆரம்பித்த, கிழக்குப் புத்தக திரு விழா,இன்றிரவு இனிதே நிறைவுற்றுள்ளது. குறிப்பிட்டளவு புத்தகங்கள் மாத்திரம் இங்கு காணக் கிடைத்தது.


இவ்வாறு இந்தப் புத்தகங்களையும், அதனை அறிமுகம் செய்த ஆசிரியர்களையும் என்ன அளவு கோலை வைத்து, இதன் ஏற்பாட்டுக் குழு செய்தது என்பது கேள்விக்குறி. இது திருவிழாவாக அலல ஒரு தெரு விழா போன்று சுருங்கிக் காணப்பட்டது. ஏற்பாட்டுக் குழுவினர் அதிகமதிகம் புத்தகங்களைச் கூட்டிப் பெருக்கியிருக்கலாம்.தமது எல்லைக் கோடுகளைத் தாண்டிப் பயணித்திருக்கலாம். 

அரசியல்வாதிகள் இல்லாமல், இலக்கிய கர்த்தாக்களையும், கலை இலககிய நேய நெஞ்சங்களையும் வைத்து, குறுகிய காலத்துள், சிறப்பாக தமிழ் நாட்டின் புத்தகத் திருவிழா போல்,செய்வதற்கு கற்பனை செய்து, பரிசோதனை முயற்ச்சியில் இறங்கிய சிராஜ் மசூர் தமிழ் இலக்கியப் பரப்பில் இன்னும் கூர்ந்து கவனிக்கத் தக்கவர்.