கொரோனாவால் இறந்தவர்களின் இறுதிச் சடங்கை எப்படி செய்ய வேண்டும்?


உலகமே கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலால் மிரண்டு போயிருக்கும் நிலையில், கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எந்த மதத்தவர் என்றாலும் அவர்களது உடல்களை தகனம்தான் செய்ய வேண்டுமென்றும், எவர் உடலையும் அடக்கம் செய்ய கூடாது என்றும், மும்பை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையொன்று சர்ச்சையை கிளப்பியது.
பிறகு, மத ரீதியிலான பிரச்சனையாக இந்த விவகாரம் மாறியதால், அந்த அறிக்கை திரும்ப பெறப்பட்டது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கை எப்படி நடத்த வேண்டும், அடக்கம் செய்யப்பட்ட நோயாளியின் உடலிலிருந்து வைரஸ் பரவுமா, அல்லது உடல் தகனம் செய்யப்படும்போது வைரஸ் முற்றிலும் அழிந்துவிடுமா, இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது என்பது உள்ளிட்ட விவரங்களை இந்த கட்டுரை அலசுகிறது.
Banner image reading 'more about coronavirus'

"தனிப்பட்ட விதிமுறைகளை யாரும் உருவாக்க முடியாது"
இந்த விவகாரம் தொடர்பாக பிபிசியிடம் பேசிய மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நவாப் மாலிக், "தற்சமயத்தில் உலக சுகாதார நிறுவனம் அளிக்கும் வழிகாட்டுதல்களையே உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன. அதன்படி, கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை கண்டிப்பாக தகனம் வேண்டுமென்று உலக சுகாதார நிறுவனம் கூறவில்லை" என்று கூறினார்.
"மும்பை மாநகராட்சியின் இந்த அறிக்கை தொடர்பாக அதன் ஆணையரிடம் நான் பேசியபோது, கவனக்குறைவாக இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், எனவே அந்த அறிக்கை திரும்ப பெறப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்குகள் உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள வழிகாட்டுதலின்படியே நடத்தப்படுகின்றன. எனவே, இதுபோன்ற சமயத்தில் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மட்டும் வேறுபட்ட விதிமுறைகளை உண்டாக்குவது மக்களிடையே பதற்றத்தையே உண்டாக்கும்" என்று அவர் கூறினார்.
உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகள் என்னென்ன?
கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களை தகனம் செய்ய வேண்டும், அடக்கம் செய்யக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலில் குறிப்பிடப்படவில்லை. இறுதிச்சடங்குகள் தொடர்பாக கீழ்க்காணும் வழிகாட்டுதல்களை உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ளது.
  • இறுதிச் சடங்குகளின்போது மக்கள் அதிக எண்ணிக்கையில் கூட கூடாது.
  • கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலுக்கு கூடிய விரைவில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட வேண்டும்.
  • குறைந்தபட்ச எண்ணிக்கையிலான மக்கள் முன்னிலையில் உயிரிழந்தவரின் உடல் மத நடைமுறைகளின்படி, தகனம் செய்யப்பட வேண்டும் அல்லது அடக்கம் செய்யப்பட வேண்டும்.
  • இறுதிச் சடங்குகளைச் செய்யும்போது மருத்துவமனை பணியாளர்களின் உதவி கோரப்பட்ட வேண்டும்.
  • கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடல் எந்தவொரு உறவினர் அல்லது தெரிந்தவர்களால் கோரப்படாவிட்டால், அது தகனம் செய்யப்பட வேண்டும்.
  • தகனம் செய்யும் போது மாசு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மின்சார தகனம் மிகவும் வசதியானது.
கொரோனா வைரஸ்
உடல் அடக்கம் செய்யப்பட்டால் அதிலிருந்து வைரஸ் பரவுமா?
"கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் அடக்கம் செய்யப்பட்ட உடலிலிருந்து வைரஸ் பரவுவதாக இதுவரை எந்த மருத்துவ பதிவுகளும் இல்லை. எனினும், உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்குகளை மேற்கொள்ளும்போது, உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய அரசு அளித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்" என்று மும்பையை சேர்ந்த மருத்துவர் பல்லவி சப்பாலே கூறுகிறார்.
கொரோனா வைரஸ்
இந்திய அரசின் வழிகாட்டுதல் என்ன சொல்கிறது?
கொரோனா வைரஸால் உயிரிழந்தவரின் உடலில் அந்த வைரஸ் எவ்வளவு காலத்திற்கு நிலைத்திருக்கிறது என்பது குறித்து இதுவரை எந்த தெளிவும் இல்லை என்று இந்திய அரசு அளித்துள்ள வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, கோவிட்-19 நோய்த்தொற்றால் ஒருவர் உயிரிழந்தவுடன் அவரது உடல் உடனடியாக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பையில் வைத்து சுற்றப்பட்ட வேண்டும். இந்திய அரசு வழங்கியுள்ள மேலும் சில வழிகாட்டுதல்கள் இதோ.
  • இறந்தவரின் உடலை உறவினர்கள் தொலைவில் இருந்தே பார்க்க வேண்டும்; உயிரிழந்தவரின் உடலை கட்டியணைப்பதோ, அருகில் செல்வதோ கூடாது.
  • முடிந்தவரை பிரேத பரிசோதனை தவிர்க்கப்பட வேண்டும். பிரேத பரிசோதனை அவசியம் என்றால் கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • இறுதிச்சடங்குகள் குறிப்பிட்ட மத சடங்குகளின்படி செய்யப்படலாம். ஆனால், இறந்தவர் உடலின் மீது தண்ணீர் ஊற்றுவது போன்றவை செய்யக்கூடாது.
  • சவக்கிடங்கில் உள்ள தொழிலாளர்கள் இது தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன.