நடிகர் இர்ஃபான் கான் காலமானார்




புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் தனது 53 வயதில் இன்று (ஏப்ரல் 29) காலமானார்.
லண்டனில் புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்த இர்ஃபான் கானின் உடல்நிலை மோசமானதால் நேற்று மும்பையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் இந்நிலையில் அவர் இன்று உயிரிழந்தார் என்னும் செய்தி வெளியாகியுள்ளது.
தனது இயல்பான நடிப்பிற்காக மிகவும் பேசப்பட்ட இர்ஃபான் கான், பாலிவுட் படங்களான பிக்கு, லன்ச் பாக்ஸ், கரிப் கரிப் சிங்கிள், மக்பூல் உட்பட 100 படங்களுக்கு மேல் அவர் நடித்துள்ளார்.
மேலும் லைஃப் ஆஃப் பை, ஸ்லம்டாக் மில்லினியர், ஜுராசிக் வேல்ட் போன்ற ஆங்கில படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
2013ஆம் ஆண்டு பான் சிங் தோமர் என்ற படத்திற்காக அவர் தேசிய விருதும் பெற்றுள்ளார்.
இர்ஃபான் கான்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
முன்னதாக, கடந்த வாரம் சனிக்கிழமையன்று, இர்ஃபானின் தாயார் சயீதா பேகம் ஜெய்பூரில் காலமானார்.
தற்போது இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருப்பதால், தாயின் இறுதிச் சடங்கில் இர்ஃபானால் கலந்துகொள்ள முடியவில்லை.
தாயின் முகத்தை கடைசியாக நேரில் பார்க்க முடியாமல் வீடியோ கால் மூலம் பார்த்து அழுதார் இர்ஃபான்.
இர்ஃபான் கானின் உயிரை பறித்த புற்றுநோய்
இர்ஃபான் கான் 'நியுரோ எண்டோ க்ரைன்' புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இது ரத்தத்திற்குள் ஹார்மோன்களை விடுவிக்கும் செல்களை பாதிக்கும்.
இந்த புற்றுநோய் கட்டியானது, உடலின் பல்வேறு உறுப்புகளில் உருவாகலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சில புற்றுநோய் கட்டிகள் ரத்தத்திற்குள் அதிக அளவிலான ஹார்மோன்களை விடுவிக்க செய்கிறது இதனால், இதய நோய், ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஆகியவை ஏற்படுகிறது.
இதற்கு அறுவை சிகிச்சை அல்லது கிமோதெரபி மூலம் சிகிச்சை அளிக்கலாம்.