பனங்காட்டு ஆலய வளாகத்தினுள் உட்புகுந்தன,யானைகள்




tp.Rfph;jFkhh; 
     

  அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தினுள் உட்புகுந்த யானைகள் அங்கிருந்த பயன்தரு தென்னை மரங்களை துவம்சம் செய்ததுடன் கச்சான் பயிரையும் சேதமாக்கியது.


இதன் பின்னர் ஆலய வளாகத்தில் இருந்த கட்டடத்தின் கதவுகளை உடைத்த யானை அருகில் இருந்த கவடாப்பிட்டி கிராமத்தில் நுழைந்து அங்கிருந்த கடையொன்றினையும் தாக்கி சேதப்படுத்தியது.

இச்சம்பவம் நேற்றிரவு(01) நடைபெற்றுள்ள நிலையில் யானைகள் அங்கிருந்து அகன்று அருகில் உள்ள சிறிய பற்றைகாடுகளுக்குள்ளும் நீர் நிலைகளிலும் நிற்பதை அவதானிக்க முடிந்தது.

வேளாண்மை செய்கையின் அறுவடைக்காலம் நிறைவுற்று வருகின்ற நிலையில் காடுகளுக்குள் இருந்த யானைக்கூட்டங்கள் கிராமங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளது.

இதனால் கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில் மின்சார வேலிகள் அமைப்பது தொடர்பில் அசமந்தப்போக்கினை கடைப்பிடிக்கும் அரசாங்கத்தின் மீதும் குற்றம் சுமத்தினர்.

இதேநேரம் சிலர் தமது மேட்டு நிலப்பயிர்ச்செய்கையினை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியாத நிலையில் வெளியேறும் மனநிலையில் உள்ளதையும் காண முடிந்தது.

இதேநேரம் குறித்த ஆலயத்தின் வளாகத்தில் காணப்படும் தென்னம் தோப்பு யானையின் தாக்குதலுக்கு அடிக்கடி உள்ளாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற ஆலய வண்ணக்கர் க.கார்த்திகேசு உள்ளிட்ட நிருவாகத்தினர் நிலைமையினை நேரில் கண்டறிந்ததுடன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்தனர்.