திருகோணமலையை நேசித்தால் தேர்தலிலிருந்து விலகுமாறு சம்பந்தனிடம் விக்னேஸ்வரன் வேண்டுகோள்


திருகோணமலையை நேசித்தால் தேர்தலிலிருந்து விலகுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

துடிப்பும் ஆற்றலும் அறிவும் கொண்ட ரூபன் என்றழைக்கப்படும் ஆத்மலிங்கம் ரவீந்திராவுக்கு வாய்ப்பை வழங்கி ஒதுங்குமாறும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் வட மாகாணத்தின் முன்னாள் முதல்வருமான சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் தேர்தல் திருகோணமலை மக்களுக்கு முக்கியமான தேர்தல் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த தேர்தலை திருகோணமலை மக்கள் சரியாக பயன்படுத்தத் தவறினால், அடுத்த பாராளுமன்ற தேர்தலின் போது நிலம் , அடையாளம் என்பவற்றை இழந்து அரசியல் அநாதைகள் ஆகும் நிலை உருவாகுமென சி.வி.விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.

அம்பாறை, திருகோணமலையை ஏறத்தாழ முழுமையாக கபளீகரம் செய்துள்ள பேரினவாதம் மட்டக்களப்பை முழுமையாகக் கைப்பற்றுவதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொல்பொருள் அடையாளங்களாக 164 இடங்கள் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 600 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், திருகோணமலையில் எஞ்சியுள்ள தமிழர் நிலப்பரப்புகளையும் கபளீகரம் செய்யும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ள சி.வி. விக்னேஸ்வரன், புல்மோட்டை, தென்னைமரவடி, குச்சவௌி, ஏறாமடு பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்படுகின்றமை , கன்னியா வெந்நீரூற்று ஆக்கிரமிக்கப்பட்டமையை எடுத்துக்காட்டுகளாக முன்வைத்துள்ளார்.

கடந்த 10 வருடங்களில் சரியான அரசியல் தலைமைத்துவம் இல்லாமற்போனமையே இதற்கான காரணமெனவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் தலைநகரமும் பூர்வீக பூமியுமான திருகோணமலை பாதுகாக்கப்பட வேண்டுமென விரும்பினால், தேர்தலில் இருந்து விலகுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் வட மாகாண முன்னாள் முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.