அக்கரைப்பற்று, விழிப்புணர்வு நடவடிக்கைள்


 வி.சுகிர்தகுமார் 0777113659   கொரோனாவின் தாக்கம் அம்பாரை மாவட்டத்திலும் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசாரும் இராணுவத்தினரும் சுகாதார பிரிவினரின் ஒத்துழைப்போடு முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கமைவாக இன்று அக்கரைப்பற்று சந்தைப்பகுதியில் தீடிர் சோதனை மற்றும் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டன.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யு எம் எஸ் பி விஜயதுங்க தலைமையில் இடம்பெற்ற இச்சோதனை நடவடிக்கையில் அம்பாரை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.இரத்தினாயக்க கலந்து கொண்டதுடன் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாவுல்லா அகமட் சகி மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி பி.ரி.நசீர் உள்ளிட்ட பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பொலிசார் இராணுவத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.
இச்சோதனை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கையில் வியாபார நிலையங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் வியாபாரிகளும் பொதுமக்களும் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டனர்.
மேலும் வீதியில் பயணித்த ;வாகனங்களும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் கொவிட் சட்டத்தை மீறுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தல் வழங்கப்பட்டது.
இதேநேரம் வீதியில் முகக்கவசம் இன்றி பாதுகாப்பற்ற முறையில் நடமாடுகின்றவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.