Showing posts with label Southern. Show all posts

அம்பலாந்தோட்டை-வலேவத்த பகுதியில் வசித்து வந்த 17 வயது யுவதியொருவர் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை குறித்த யுவதியின் வீட்டுக்கு வந்த 6 பேர் அடங்கிய குழுவொன்று, கடத்திச் செல்லப்பட்ட யுவதியின் தந்தையையும், மூத்த ​சகோதரியையும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி விட்டு யுவதியைக் கடத்திச் சென்றுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும், இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லையென்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பேருவளை கடலில் மீன்பிடிக்க சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

நேற்று (11) மாலை கடலிற்கு 7 பேருடன் சென்ற ´மலிது புதா´ என்ற படகே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த 7 பேரில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் காப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னான் ஜனாதிபதியின் மஹிந்த ராஜபக்ஷவின் உயிரிழந்த சகோதரர் சந்திரா ராஜபக்ஷவுக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

இலங்கையில் 79 வயதான முதியவர் ஒருவர் இம்முறை க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதியுள்ளார். சட்டத்தரணியாகும் கனவில் 79 வயதான டியுடர் முனசிங்க உயர்தர பரீட்சை எழுதி, மாணவர்களை மட்டுமன்றி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருப்பதற்கு கல்வி மிகவும் முக்கிய விடயம் என டியுடர் முனசிங்க தெரிவித்துள்ளார்.

களனி, லுவிஸ் மாவத்தையை சேர்ந்தவரே சட்டத்தரணியாகும் எதிர்பார்ப்பில் உயர்தர பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு கலை பிரிவில் உயர்தர பரீட்சை எழுதிய அவர் இரண்டு பாடங்களில் சித்தியடைந்தார். எனினும் அவரின் முயற்சியை கைவிடாமல் நன்கு கல்வி கற்று இம்முறையும் உயர்தர பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார்.

தனது வாழ்க்கை குறித்து கூறிய முனசிங்க, வெலிகன்ன கிராமத்தில் பிறந்தேன். அந்த பகுதியில் உள்ள பாடசாலையில் நான் ஆரம்ப கல்வியை கற்றேன். களுத்துறை, மத்துகம வீதி லேவன்துவ மகா வித்தியாலயத்தில் சாதாரண தர பரீட்சை எழுதினேன். உயர்தர பரீட்சை எழுதுவது கனவாகவே இருந்தது. அதற்கு முயற்சிகளிலேயே இருந்தேன்.

இம்முறை நான்கு பாடங்களிலும் சித்தி பெறுவதற்காக கடினமாக கற்றேன். ஆங்கிலம் கட்டயாப்பாடமாகும். ஆங்கில மொழி மற்றும் இலக்கியம், அரசியல் அறிவியல் மற்றும் இந்திய வரலாறு ஆகிய 3 பாடங்களையும் தெரிவு செய்து இம்முறை பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளேன்.

சட்டத்தரணியாகுவதே என மிகப்பெரிய எதிர்பார்ப்பாகும். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றி கொள்வதற்கு நான் உயர்தரத்தில் சித்தியடைவது கட்டாயமாகும். இதனாலேயே இந்த முயற்சியை எடுத்துள்ளேன்.

நான் 1939ஆம் ஆண்டு 12ஆம் மாதம் 6ஆம் திகதி பிறந்தேன். எனக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். எனது மூத்த மகள் பல்கலைக்கழக விரிவுரையாளராக செயற்படுகின்றார்.

இரண்டாவது மகள் உள்நாட்டு வருவாய் திணைக்களத்தில் பணியாற்றுகின்றார். மூன்றாவது மகன் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் முகாமையாளராக செயற்படுகின்றார். கடைசி மகன் வெளிநாட்டில் ஹொட்டல் துறையில் முக்கிய அதிகாரியாக செயற்படுகின்றார்.

கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் எனது மனைவி உயிரிழந்தார். அதனாலேயே நான் கல்வி வெற்றி பெற முயற்சிக்கின்றேன்…” என முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ருஹுனு பல்கலைகழக கலை பீடத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் பிக்குகள் சிலரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

மாத்தரை, எலிய கந்த பிக்குகள் விடுதியில் பகிடிவதை செய்த சம்பவம் தொடர்பில் 5 பிக்குகள் நேற்று (20) மாத்தரை பிரதான நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை மீண்டும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஜூலை மாதம் 18 ஆம் திகதி இந்த பகிடிவதை சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய பிக்குகளின் உயர் கல்வி நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

பகிடிவதை சட்டத்தின் கீழ் குறித்த பிக்குகளுக்கு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒருவகை மருந்தை அருந்தியதால் நோயுற்று தங்காளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளவயது சிறுமி ஒருவர் 05 மாத கர்ப்பிணி என்பது தெரி வந்துள்ளது. 

பெலியத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 01ம் திகதி ஒருவகை மருந்தை அருந்தியதால் நோயுற்ற குறித்த சிறுமி பெலியத்தை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிகச சிகிச்சைகளுக்காக தங்காளை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

அந்த சிறுமி கர்ப்பிணி என்பது தங்காளை ஆதார வைத்தியசாலையில் வைத்து தெரிய வந்துள்ளது. 

இதனைதயடுத்து அந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவித்து பெலியத்தை, கரம்பகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் பெலியத்தை பொலிஸ் அதிகாரிகளால் நேற்று சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் பெலியத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்டு பெருமளவு சொத்துக்களை இழந்த 128 பேருக்கான 182 மில்லியன் ருபாய் நட்டஈடு நேற்று (27) வழங்கி வைக்கப்பட்டது. 

தர்கா நகர் ஸாஹிராக் கல்லூரி பிரதான மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. 

நட்டஈடு வழங்கும் நிகழ்வில், சுகாதாரம், போசனைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர் காதர் மஸ்தான், புனர்வாழ்வு அதிகார சபையின் அதிகாரிகள், அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த போது, 2014 ஆம் ஆண்டு அளுத்கம, பேருவளை மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈட்டினைப் பெற்றுக்கொடுப்பதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை அமைச்சர் சுவாமிநாதன் ஊடாக சமர்ப்பித்தார். 

அதற்கமைய முதற் கட்டமாக கலவரத்தில் உயிரிழந்த மூவரது குடும்பத்தினருக்கும் தலா 20 இலட்சம் ரூபாய் வீதமும், காயமடைந்த 12 பேருக்கும் தலா 5 இலட்சம் ரூபாய் வீதமும், சிறியளவு சொத்துக்களை இழந்த 84 பேருக்கு ஒரு இலட்சம் ரூபாய் வீதமும் நட்டஈடு கடந்த மார்ச் 22 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் கலவரத்தில் பெருமளவு சொத்துக்களை இழந்தவர்களுக்கு நட்டஈட்டினைப் பெற்றுக்கொடுப்பதற்கு மீண்டும் அமைச்சரவைப் பத்திரம் சமர்பிக்கப்பட்டதுடன் புனர்வாழ்வு அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட பெருமளவு சொத்துக்களை இழந்த 128 பேருக்கு 182 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியது. 

அதற்கமைய அவர்களுக்கான நட்டஈடு நேற்று வழங்கி வைக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.

“The Keyboard Warrior" என்றழைக்கப்பட்ட இலங்கையின் இரும்பு மனிதன் என்று செல்லமாக அழைக்கப்பட்ட இர்பான் ஹாபிஸின் ஜனாசா நல்லடக்கம் இன்று தா்கா நகரில் இடம்பெற்றது. எல்லாம் வல்ல இறைவன் இவரது பாவங்களை மன்னித்து ஜென்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கம் வழங்க #CELON24 பிரார்த்திக்கின்றது.

1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி தனது உம்மாவின் ஊரான மாத்தறையில் பிறந்தார் இர்பான். பிறப்பு முதல் பாடசாலைக் கல்வியை ஆரம்பிக்கும் வரைக்கும் மாத்தறையில் வசித்துவிட்டு, பிறகு, தனது வாப்பாவின் பிறந்த ஊரான தர்கா நகருக்குவந்து குடியேறினார்.

தர்கா நகர் ஸாஹிறா கல்லூரியில் தான் நான் கல்வி கற்றேன். பாடசாலைக்கு நடந்து செல்வதில் சிரமங்கள் இருந்தன. இரண்டாம் வகுப்பு வரை நடந்து சென்றேன் ஆனால் பிறகு எனது நாநா தான் என்னை சைக்கிளில் கூட்டிச் சென்றார். ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய பின்பு ஆகஸ்ட் விடுமுறை முடிந்ததும் பாடசாலை செல்ல முடியவில்லை. அடிக்கடி கீழே விழுவதும் வகுப்பறையை விட்டு வெளியே செல்ல முடியாத பல சிக்கல்கள் இருந்தன. ஐந்தாம் வகுப்புக் கல்வியுடன் பாடசாலை வாழ்க்கை முற்றுப் பெற்றது. வகுப்பில் பாடங்களில் நான் எனது ஏனைய சகோதரர்களைப் போன்று திறமை காட்டவில்லை. பாடசாலைக் கல்வி ஐந்தாம் வகுப்புடன் முடிந்ததும் எனக்கு வீட்டிலே இருப்பது பெரிய சந்தோசத்தைத் தந்தது. பாடசாலை செல்வதிலும், வகுப்பறையில் கூட நடமாட முடியாத நிலை காரணமாக வீட்டில் இருக்க கிடைத்தது மனதிற்கு பெரிய ஆறுலாய் இருந்தது.” என்கின்றார் எழுத்தாளர் இர்பான்.
இர்பானுக்குநேர்ந்தது என்ன? என்னநோய் அவரை பாதித்தது? ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்த ஒருவரால் எப்படி மூன்று பிரசுரங்களுக்கு உயிர் கொடுக்க முடிந்தது?
Parent Project Muscular Dystrophy டுஷேன் மஸ்கியுலர் டிஸ்ட்ரோபி என்பது ஆண் பிள்ளைகளில் ஏற்படக்கூடிய உயிராபத்தை ஏற்படுத்தும் ஓர் தசைச்சிதைவு நோயாகும். இந்நோய் பிறக்கும் ஆண் குழந்தைகளில் சாராசரியாக 3500 பேரில் ஒருவருக்கு ஏற்படுவதாகக் அறியப்பட்டுள்ளது. (இது பற்றி முதன்முதலில் விவரித்த பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கிளோம் டுஷேன் என்ற நரம்பு நோய் நிபுணரின் பெயரிலேயே இந்நோய் அழைக்கப்படுகிறது)தசைகளின் வளர்ச்சிக்குத் தேவையான டிஸ்ட்ரோபின் எனப்படும் புரோட்டீன் உருவாக்கத்தில் ஏற்படும் தவறு காரணமாக இந்நோய் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 
இந்தநோயால் பாதிக்கப்பட்டவரே சகோதரர் இர்பான் ஹாபிஸ். இலங்கையில் இது போன்ற 600-700 நோயாளர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.பெரும்பாலும் இப்பிள்ளைகள் பிறக்கும் போது சாதாரண பிள்ளைகள் போல் தோன்றக்கூடும். எனினும், 4 வயதாகும் போது நடத்தல், படிக்கட்டுகளில் ஏறுதல், ஓடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது சிரமத்தைத் தர ஆரம்பிக்கும். 7-8 வயதை அடையும் போது எதுவிதக் காரணமுமின்றி அவர்கள் கீழே விழ ஆரம்பிப்பர். 11-14 இடைப்பட்ட வயதை அடையும் போது நடப்பது அவர்களுக்கு மிகவும் சிரமமான விடயமாக மாறிவிடுவதால் இப்பிள்ளைகள் நாற்காலிக்கு அல்லது சக்கர நாற்காலிக்கு மாறுவர். 16-17 வயதாகும் போது முள்ளந்தண்டெலும்பு வளைய ஆரம்பிப்பதாலும் மார்புத் தசைகள் பலவீனமடையத் தொடங்குவதாலும் சுவாசித்தல் சம்பந்தமான பிரச்சினைகளும் ஏற்படும். நுரையீரல் சரியான முறையில் வளியால் நிரப்பப்படாத காரணத்தால் தடுமல் போன்ற சிறு நோய்களும் இலகுவில் நியுமோனியாவாக மாறி உயிராபத்து ஏற்பட வாய்ப்பாக அமைகிறது. இதயத்தசைகள் பலவீனமடைவதால் இருதயக் கோளாறுகளும் ஏற்படலாம். 

டுஷேன் நோயாளிகளில் பெரும்பாலானோர் இறப்பது நியுமோனியா அல்லது இருதயக் கோளாறு காரணமாகவாகும்.இந்நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்துகள் எதுவுமில்லை. எனினும், இது தொடர்பான ஆராய்ச்சிகள் பாரிய அளவில் வெற்றியைத் தந்து வருகின்றன. இப்போதைக்கு Ataluranஎனும் பெயரில் ஒரு மருந்து ஐரோப்பாவின் EMA எனும் மருந்துகள் அதிகார சபையின் அனுமதியைப் பெற்றுள்ளது. இன்னும் சில மாதங்களில் அது சந்தைக்கு வரக்கூடும். Nonsense mutation வகை பரம்பரையலகு விகாரம் காரணமாக ஏற்படும் டுஷேன் நோய்க்கு இம்மருந்து மூலம் குணம் கிடைக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்.
இத்தனை ஆபத்தான நிலையில் இருக்கும் இர்பான் இதோ பேசுகின்றார்.
“என் வாழ்க்கையில் நான் பெற்ற பெரும் பாக்கியம் எனது பொற்றோர். அவர்கள் இருவரினதும் தியாகம், அளவிலா பாசம் என்னை இன்று வரைக்கும் உயிர் வாழச் செய்துள்ளன. எனது உம்மாவின் தியாகம் நிகரற்றது. நான் பிறந்த நாள் முதல் உம்மா அவருடைய இறுதி நாள் வரைக்கும் ஒரு சிறு குழந்தைக்கு எப்படியெல்லால் அரவணைப்பு செய்யப்படுமோ அதே அரவணைப்பை எனக்கும் செய்துகொண்டே இருந்தார்.
உம்மா இல்லாத உலகை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. வாப்பாவின் செல்வாக்கு எனது அறிவு வளர்ச்சியிலும், ஆத்மீக வளர்ச்சியிலும் இருந்தது. என்னுடைய நோயைப் பற்றிய அறிவும் தெளிவும் இலங்கையில் இந் நோயால் பாதிக்கப்பட்ட வேறெந்த பிள்ளைகளின் பெற்றோரிடத்திலும் இருக்க முடியாது. மிக உயர் தரங்களை அடைந்திருக்கக் கூடிய தனது அதிபர் பதவியைத் துறந்து எனக்காக ஓய்வு பெற்றுக்கொண்டார் எனது வாப்பா. எனது வைத்தியரும் எனது வாப்பா தான். கிட்டத்தட்ட கடந்த இருபது வருடங்களாக ஒரு வைத்தியரைக்கூட நான் கண்டதில்லை. உம்மாவின் திடீர் மறைவுக்குப் பிறகு என்னைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்று செய்து வருகிறார்.”
மேலும் இர்பான் கூறுகையில்.. “பாடசாலைக் கல்வி இடையில் விடுபட்டதும் எனக்கு ஆங்கில மொழியில் பேசக் கற்க வேண்டும் என்ற ஆசை மனதில் உதித்தது. எனது வாப்பாவின் மூத்த தம்பியின் பிள்ளைகள் ஆங்கில மொழியில் தான் கல்வி கற்று வந்தார்கள். அவர்களுக்கு தமிழ் தெரியாமலிருந்தமையும் எனக்கு ஆங்கிலம் தெரியாமலிருந்தமையும் அவர்களோடு பேசி உறவாட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இது என் மனதைப் பெரிதும் பாதித்தது. எப்படியாவது ஆங்கில மொழியைக் கற்று அவர்களுடன் ஒரு நாளைக்கு பேசுவேன் என்று உறுதி பூண்டேன்.
ஆங்கிலம் படிப்பதை பெரும் சவாலாகக் கருதி எனக்கு நானே ஆசானானேன். எனது தனி முயற்சியால் அச்சவாலை வெற்றிகொண்டேன். எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே!2011ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் தான் முதன் முதலில் எழுத ஆரம்பித்தேன். பேஸ்புக் வாயிலாக Iiwordsஎனும் இளம் எழுத்தாளர்களுக்கான பக்கத்தில் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதிப் பதிவேற்றினேன். அதில் சந்தித்த நண்பர்களின் ஊக்குவிப்பே எனக்கு எழுதத் தூண்டியது.
2012ஆம் வருடம் பெப்ரவரி 19ஆம் திகதி எனது முதலாவது வெளியீடாக Silent Struggle என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பு வெளியிடப் பட்டது. அமோக வரவேற்பும் பாராட்டுக்களும் கிடைத்தன. இரண்டாம் வெளியீடாக Moments Of Merriment சிறுவர்களுக்கான கதைகள் அடங்கிய புத்தகம் 2014ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி வெளியிட்டேன். 2016 ஜூலை 10ஆம் திகதி மூன்றாவது புத்தகம் Silent Thoughts வெளியாகியது. இந்த புத்தகம் எனது தனிப்பட்ட சிந்தனைகளையும், வாழ்க்கை அனுபவங்களையும், எனது பொற்றோரிடமிருந்து பெற்ற வாழ்க்கைப் பாடங்களையும் வைத்து எழுதப்பட்டது.


கண்ணீரை பாய்ச்சும் வாழ்க்கைப் பாடங்கள் அடங்கியSilent Thoughts நூல் விமர்சனங்கள் முகநூலில்ஒரு குறிப்பிட்ட காலத்தில் அமோக வரவேற்பை பெற்றிருந்தன. சகோ. இர்பான் ஹாபிஸ் குறித்து நான் தேட ஆரம்பித்த புள்ளி அதுதான்.
“என் கை விரல்களை மட்டுமே என்னால் அசைக்க முடியும். முதல் இரண்டு நூல்களும் எனது லப்டொப்பில் ஒன்ஸ்க்றீன் கீபோர்ட் உதவியுடன் மெளஸால் ஒவ்வொரு எழுத்தாக கிளிக் செய்வதன் மூலம் டைப் பண்ணினேன். மூன்றாவது நூலை எழுதும் போது என் விரல்களால் மெளஸை பயன்படுத்த முடியாமல் போயிருந்தது. ஆகவே எனது ஐபோனில் தான் Silent Thoughts முழுதையும் டைப் செய்தேன்.”

“வாழ்க்கை என்பது ஒரு சோதனைக் களம். சோதனைகள் பல விதமானவை.அவைகளை எவ்வாறு ஒருவர் நோக்குகிறார் என்பதே முக்கியமானது. இறை நம்பிக்கையும் மன பலமும் சோதனைகளைச் சாதனைகளாக ஆக்கிக்கொள்ள உதவுமென திடமாக நம்புகிறேன். சாதித்த மனிதர்களைப் பார்த்து எங்களால் அப்படி முடியவில்லையே என நினைத்து மனம் வாடிப் போகாமல் அவர்களின் வாழ்வினிலிருந்து எமது வெற்றிக்கு சாதகமான விடயங்களை தேர்ந்தெடுப்பது சிறந்ததாகும். பெற்றோரை என்றும் மதிப்பவர்களாகவும் அவர்களின் அன்பைப் பெற்றவர்களாகவும் இருப்பின் இறைவன் என்றும் உங்களைக் கைவிட மாட்டான்.” என்கின்றார் உற்சாக நாயகன்.
இறுதியாக… “இன்று வரைக்கும் இன்னொரு நூல் எழுதுவதைப் பற்றி யோசிக்கவில்லை. ஆங்கிலத்தில் சிறுகதை எழுதி பேஸ்புக்கில் பதிவிடுவதில் ஆர்வமாய் உள்ளேன். இரண்டு கதைகள் எழுதினேன். இன்னும் எழுத உத்தேசித்துள்ளேன். தமிழிலும் கவிதை போன்று எழுத முயற்சித்து எழுதியும் உள்ளேன்.அல்லாஹ்வின் அருள் எனக்கு அதிகமாகவே கிடைத்திருக்கிறது என்று சொல்வதில் என் மனம் குளிர்ச்சியடைகிறது. பெற்றோர்களின் தியாகம், சகோதரர்களின் பாசம், உறவினர்களின் உற்சாக வார்த்தைகள், நண்பர்களில் முக்கியமாக பேஸ்புக் நண்பர்களின் உந்துதல் என்பன நான் பெற்ற அருட்கொடைகளாகும்.” என்று சொல்லி முடிக்கின்றார் எழுத்தாளர் இர்பான் ஹாபிஸ்.

#காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தை,அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டாம் என்ற கோரி்க்கையுடன் அமைதிப் பேரணியொன்று இன்று காலை இடம் பெற்றுள்ளது.


இப் பேரணி காலி நகர மத்தியில், இடம் பெற்றதால், போக்கு வரத்துக்கு தடங்கல் எற்பட்டதாக அங்குள்ள எமது விசேட செய்தியாளர் அறிவித்துள்ளார்.

(வைப்பகப் படம்: #இஸ்மாயில்உவைசுர் ரஹ்மான்,#இயன்சப்பெல் #ரொனிகிரேக்)

காலி சர்வதேச மைதானம் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட மாட்டாது என்றும், எனினும் காலி சர்வதேச மைதானத்தில் உள்ள பெவிலியன் அகற்றப்படும் என்றும் திட்ட முகாமைத்துவம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 

தேசிய மற்றும் சர்வதேச போட்டிகள் காலி மைதானம் இனி வரும் காலங்களிலும் நடைபெறும் எனவும், காலி மாவட்டத்தில் புதிய கிரிக்கெட் மைதானம் ஒன்று அமைக்கப்படும் எனவும் அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் கொக்கல பிரதேசத்தில் உள்ள ஒரு காணியில் புதிய கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணிக்க முடியும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

இன்று (08) காலை பொலிஅத்த பகுதியில் உள்ள தனியார் வகுப்பொன்றின் கூரை உடைந்து விழுந்ததில் வகுப்பில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

16 மற்றும் 15 வயதுடைய மாணவ, மாணவிகளே இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பொலிஅத்த பொலிஸ் நிலையத்திற்கு முன்னாள் உள்ள 4 மாடி கட்டிடத்தின் 4 ஆவது மாடியில் குறித்த வகுப்பு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தில் மழையுடன் வீசிய பலத்த காற்றின் காரணமாக இவ்வாறு கூரை உடைந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கூரை உடைந்து விழும் சந்தர்ப்பத்தில் குறித்த வகுப்பில் சுமார் 750 மாணவர்கள் இருந்துள்ளனர். 

காயமடைந்தவர்களில் ஒரு மாணவன் தங்கல்ல வை்ததியசாலையிலும் ஏனைய ஆறு பேரும் பொலிஅத்த வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த கட்டிடத்திற்கு அருகில் இருந்த வியாபார நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஹிக்கடுவ, வெரல்லன பிரதேசத்தில் காலி - கொழும்பு பிரதான வீதியில் தற்போது போக்குவரத்து தடைப்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அந்தப் பிரதேசத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாகவே போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் 07 பேர் கடலுக்கு சென்று காணாமல் போயுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

ஆழ்கடல் மீன்பிடிக்கு செல்லும் மீனவர்களுடன் கரையில் இருப்பவர்கள் தொடர்பை ஏற்படுத்துவதற்கான ராடர் கருவியை இயக்குவதற்கு படகு உரிமையாளர்களிடம் மாதாந்தம் 3000 ரூபா அறவிடப்பட்ட போதிலும், அரசாங்கத்தால் அந்தக் கருவி இயக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது.

அந்தக் கருவியை இயக்கினால் காணாமல் போயுள்ள மீனவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

மீன்பிடி நடவடிக்கைக்காக சென்ற ஆழ்கடல் படகு ஒன்று 07 மீனவர்களுடன் காணாமல் போயுள்ளது. 

கடந்த மாதம் 04ம் திகதி அவர்கள் காலி மின்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்றுள்ளதுடன், அவர்கள் மீண்டும் திரும்பாததையடுத்து மீட்டியாகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

ஹிக்கடுவ, தெல்வத்தை, தொட்டகமுவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 07 பேர் இவ்வாறு காணாமல் போயுள்ளனர். 

அவர்கள் கடந்த மாதம் 29ம் திகதி வரை உறவினர்களுடன் தொடர்பில் இருந்துள்ளதுடன், அதன்பின்னர் தொடர்பு இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மீட்டியாகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீ.கே இந்திக அவரது 51 ஆவது வயதில் காலமானார்.

மாத்தறையில், தங்க ஆபரணங்கள் கடையில் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளை கோஷ்டியினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மரணமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில், கொள்ளைக் கோஷ்டியைச் சேர்ந்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர், பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகங்களில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கெப் ரக வாகனமொன்றில் வருகைதந்த ஒன்பது பேரடங்கிய கொள்ளை கோஷ்டியினரே, அந்த நகைகடையை கொள்ளையடிப்பதற்கு இன்றுகாலை வந்துள்ளனர்.
அதன்போதே, பொலிஸாருக்கும் ​கொள்ளை கோஷ்டியினருக்கும் இடையில் பரஸ்பரம் துப்பாக்கிப்ப பிரயோகம் ​ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் ​ பொலிஸார் மூவரும், பொதுமகனும் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாத்தறை நகரத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த மூன்று கொள்ளையர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களில் ஒருவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த கொஸ்கொட தாரக என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். 

பல கொலைச் சம்பவங்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபரா கொஸ்கொட தாரக அறியப்படுகிறார். 

மாத்தறை நகர பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது. 

இதன்போது கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தமை கூறத்தக்கது.

வீரசிங்க என்ற 69532 பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.



மாத்தறை நகரத்தில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 03 பொலிஸார் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அத்துடன் பொலிஸார் தவிர மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதுடன், அதில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை நகர பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் இன்று காலை கொள்ளச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் அங்கிருந்த ஒருவரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அங்கு வந்த பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

06 பேர் அடங்கிய கொள்ளைக் கும்பல் ஒன்றே கொள்ளையிட வந்துள்ளதாகவும், கொள்ளையிட வந்த சிலர் தப்பிச் சென்றுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

காயமடைந்தவர்களில் பொதுமகன் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ள பொலிஸார், கொள்ளையிட வந்த ஏனையவர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெடிவத்த பகுதியில் கொழும்பு கோட்டையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ருஹுனு குமாரி கடுகதி புகையிரதத்தில் பாய்ந்து இருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 

நேற்று (14) மாலை 6.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அஹங்கம, குருதுவத்த பகுதியை சேர்ந்த 54 வயதுடைய நிஹால் பொதேஜு என்பவரும், ஹபராதுவ, களுவகஹவத்த பகுதியை சேர்ந்த 28 வயதுடைய மிகாஷா தில்ஹானி எனும் பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

கள்ள தொடர்பு ஒன்றின் காரணமாகவே குறித்த இருவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



கதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கோபவக தம்மிந்த தேரர் உட்பட இரண்டு தேரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

UP - CAG-8531 என்ற இலக்கமுடைய ஹொண்டா வெஸல் வகையைச் சேர்ந்த ஜீப் வண்டி ஒன்றே துப்பாக்கிச் சூட்டின் போது பயன்படுத்தப்பட்ட வாகனம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றர். 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த விகாராதிபதி கோபவக தம்மிந்த தேரரும் மற்றைய தேரரும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நேற்று (12) இரவு 11 மணியளவில் குறித்த வாகனத்தில் வந்த இனந் தெரியாத மூன்று நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். 

விகாராதிபதியின் அடிவயிற்றுப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயம் ஏற்பட்டுள்ளதுடன், ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அவரின் நிலை தற்போது மோசமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், தங்காளை வலயத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் டொனால்ட் சம்பத் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.