Showing posts with label Eastern. Show all posts

 


பாறுக் ஷிஹான்

பல்லின சமூகத்தினருடன்  வாழ்கின்ற போது பிரச்சினைகள் அதிகரித்தாலும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் தீர்த்துக் கொள்வதே சிறந்ததாகும்-கல்முனை பிராந்திய  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  அதிகாரி அப்துல் அஸீஸ்

கல்முனைப் பிராந்தியத்தில் பொதுவாக எல்லைப் பிரச்சினைகள் இருந்து வருகின்ற போது காணிப்பிரச்சினைகள் தலைதூக்குவதன் காரணமாக முரண்பாடுகள் தோன்றுவதாகவும்இ பல்லின சகத்தினருடன்  வாழ்கின்ற போது பிரச்சினைகள் அதிகரித்தாலும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் அவற்றைத் தீர்த்துக் கொள்வதே சிறந்ததாகும்  என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய மனித உரிமைகள் அதிகாரி அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிவில் குழுவின் கலந்துரையடல்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை காரியாலயத்தில் பிராந்திய மனித உரிமைகள் அதிகாரி அப்துல் அஸீஸ் தலைமையில் இன்று இடம்பெற்ற போது சிவில் சமூகத்தினர் கருத்துத் தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

இன்றைய காலகட்டத்தில் எமது பிரதேசங்களில் தலைவிரித்து தாண்டபமாடுகின்ற பிரச்சினையாக காணிப் பிர்ச்சினை இருக்கிறது எனவும் பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழி மூலம் கையாளக்கூடிய அதிகாரிகள் பற்றாற்குறை காரணமாக பெரிதும் சிரமப்படுவதாகவும் இன்று எமது பிரதேசங்களில் போதைவஸ்துப் பாவனை மேலோங்கி நிற்பதன் காரணமாக குடும்ப வன்முறைகள் தலையோங்கி நிற்பதாகவும் இதனால் இளைஞர்களும் யுவதிகளும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். 

குறிப்பாக இத் தவறுகளை செய்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். ஆனால் இன்று மிகக் கூடுதலாக நடப்பதென்னவென்றால்  அடிப்படை உரிமைகளை அனுபவித்து வருகின்றவர்களுக்கெதிராக அச்சுறுத்தல் விடுத்து தேவையற்ற விசாரணைகளுக்கு அழைத்து மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்துவது இல்லாதொழிக்கப்பட வேண்டுமென மேலும் தெரிவித்தனர்.

இது பற்றிய விரிவான அறிக்கையினை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் பீடத்திற்கு அறிவிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது. 

 


பாறுக் ஷிஹான்


தமிழ் தேசிய  கட்சிகள் பொது அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள்  வட கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தாலுக்கு விடுத்த கோரிக்கையினை அம்பாறை மாவட்ட  மக்கள் அதனை நிராகரித்து வழமையான செயற்பாட்டில்  ஈடுபட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பெரிய நீலாவணை  சவளக்கடை  சம்மாந்துறை  காரைதீவு சாய்ந்தமருது அக்கரைப்பற்று நிந்தவூர் மத்தியமுகாம்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள்  புடவைக்கடைகள் வீதியோர வியாபாரங்கள் வங்கிகள் சந்தைகள் போன்றவை  வழமை போன்று இயங்கியது.

 இம்மாவட்டத்தில் வழமை போன்று அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது.  இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு ,சாய்ந்தமருது, மாளிகைக்காடு நிந்தவூர்,அட்டப்பளம், சம்மாந்துறை மாவடிப்பள்ளி ,சவளக்கடை, மத்தியமுகாம் ,உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம்  அதிகரித்து வழமை போன்று செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று  பொலிஸாருடன் இணைந்து கடற்படை இராணுவம்  பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.

அத்துடன்  கல்முனை பொது சந்தை உட்பட அதனை சூழ உள்ள பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம் களைகட்டியது. மேலும் வியாபார நிலையங்கள் ,சுப்பர்மார்க்கெட்டுகள், பாடசாலைகள் , பாமசிகள் வங்கிகள் எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கபட்டடு வியாபாரம் இடம்பெற்றது.

 எனினும் சில இடங்களில் பொதுமக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மண்ணைக்காக்க மரபுரிமை காக்க ஒற்றுமையாக எழுவோம் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் முஸ்லீம்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி ஹர்த்தாலை அனுஸ்டிப்போம்  என தமிழ் தேசிய கட்சி பிரதிநிதிகள் சிவில் செயல்பாட்டாளர்கள்  கூட்டாக வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


பாறுக் ஷிஹான்


3 பேர் சென்ற மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதில் நால்வர் காயமடைந்து கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை முஹைத்தீன் ஜும்மா பள்ளிவாசல் முன்பாக இவ்விபத்து ஞாயிற்றுக்கிழமை(23) இரவு இடம்பெற்றது.

இதன் போது மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி எதிரே வந்த கார் ஒன்றின் மீது மோதுண்டதனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் தலைக்கவசமின்றி பயணித்த மூன்று சிறுவர்கள் மற்றும் கார் சாரதி ஆகியோர் காயமடைந்த நிலையில் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிகக்ப்பட்டனர்.

மேலும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்கள் சுமார் 15 வயது 16 வயது  மதிக்கத்தக்கவர்கள் என்பதுடன் சாரதி அனுமதி பத்திரமின்றி மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றமை பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதே வேளை கல்முனை பெரிய நீலாவணை காரைதீவு சம்மாந்துறை நிந்தவூர் பகுதிகளில் பகல் மற்றும் இரவு வேளையில் தலைக்கவசமின்றி மூவர் கொண்ட மோட்டார் சைக்கிள் படையணி போன்று இளைஞர்கள் சிறுவர்கள்  அபாயகரமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

 

வி.சுகிர்தகுமார் 0777113659 

  ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து இன்று சில மணிநேரம் கண்டன கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரை அவமதிக்கும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை உள்வாங்கி; ஊடகமொன்றில் வெளியான தவறான செய்திகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இப்போரட்டம் இடம்பெற்றது.
இதன்போது கிராம உத்தியோகத்தர்கள் தாம் மன உளைச்சலுக்கு உள்ளதான தெரிவித்து தனியார் ஊடக செய்தியில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கு மறுப்பறிக்கையும் தெரிவித்தனர்.
ஊடகங்களே நேர்மையான அதிகாரிகளின் சேவையினை கொச்சைப்படுத்தாதே, தவறான தகவல்களை பரப்பும் ஊடகங்களே ஊடக தர்மத்தை பேணு, பிரதேச மக்கள் அடையாளம் கண்ட சுயநலவாதிகளை ஊடகங்கள் இனங்காண மறுப்பது ஏன், சுய இலாபத்திற்காக பிரதேச மக்களை ஏமாற்றும் நடவடிக்கைக்கு ஊடகங்களை இரையாக்காதே, எமது பிரதேச செயலகத்தின் நற்பெயரை கெடுக்க முயற்சிக்கும் நபர்களுக்கு எதிராக போராடுவோம், உண்மை தன்மையை கண்டறியும் ஊடகமே உங்கள் புலனாய்வு குழுவை அனுப்பி உண்மையை கண்டறி, தனிப்பட்ட சுயநலவாதிகளின் பின்னாலே நடுநிலையான ஊடகமே பிழையான முறையில் செல்லாதே, போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை தாங்கியவாறு உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் தொடர்பில் தனியார் ஊடகமொன்று தவறான செய்திகளை பரப்பியதாக தெரிவித்து பிரதேச சமூக நலன் அமைப்புக்கள் இந்து நிறுவனங்கள் ஆலயங்களின் பிரதிகள் என பலர் ஒன்றிணைந்து ஊடக சந்திப்பொன்றை நடாத்தி தமது கண்டனங்களை தெரிவித்த நிலையில் இன்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
பிரதேச செயலகம் முன்பாக ஒன்று கூடிய உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டதுடன் தமது கண்டங்களையும் வெளிப்படுத்தினர். இதன் பின்னராக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்கள் சிறந்த முறையில் நிருவாகத்தை முன்கொண்டு செல்லும் பிரதேச செயலாளரை அவமானப்படுத்தும் வகையில் செய்திகளை பரப்பும் ஊடகங்கள் மற்றும் சுயநலவாதிகளுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததுடன் தாம் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் நடுநிலையாக ஊடகங்கள் செயற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

 


நூருல் ஹுதா உமர்


அம்பாரை மாவட்ட நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு "வாழ்வில் வசந்தம்"  வேலைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பகுதி அளவான 9 வது வீடு கையளிக்கும் நிகழ்வு (22) பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில்இடம்பெற்றது

நிந்தவூர் - 23 ம் பிரிவு அட்டப்பள்ளம் பிரதேசத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையின்  இணைப்பாளர் மௌலவி அல்ஹாபிழ் ஏ எச் மின்ஹாஜ் (முப்தி) கலந்து கொண்டு பயனாளியிடம் குறித்த வீட்டை கையளித்தது வைத்தார்

நிந்தவூரை சேர்ந்த கல்விமான் மர்ஹும் சீ ஓ லெஸ்தகீர் குடும்ப நம்பிக்கை நிதியத்தின் பங்களிப்புடன் நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில்  இருந்து தெரிவுசெய்யப்பட்ட தேவையுடைய பயனாளி ஒருவருக்கே இந்த பகுதி அளவான வீடு  பூர்த்தி செய்து  வழங்கி வைக்கப்பட்டது. வாழ்வதற்கு ஓரளவேனும் வசதியான வீடின்றி கஷ்டப்பட்ட ஒரு  குடும்பத்தின்  கண்ணீர் கதையை இந்த நோன்புப் பெருநாள் தினத்தில் பெஸ்ட் ஒப் யங் அமைப்பு,  மர்ஹும் சீ ஓ லெஸ்தகீர் குடும்ப நம்பிக்கை நிதியத்தின் பங்களிப்புடன்  துடைத்து வைக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

இந்த நிகழ்வில் பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் செயலாளர் ஏ புஹாது, ஏசியன் வலையமைப்பின் பிரதானி சாஜித் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்

 


நூருல் ஹுதா உமர்


நளீர் பௌண்டஷன் அமைப்பின் பத்தாவது ஆண்டை முன்னிட்டு வசதிகுறைந்த தேவையுடைய மக்களுக்கு பத்து வீடுகள் கட்டிக்கொடுக்கும் திட்டத்தின் கீழ்  முதலாவது வீட்டை கையளிக்கும் நிகழ்வும், இரண்டாவது வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வும் நளீர் பௌண்டஷன் ஸ்தாபகர் ஏ.எம். நளீரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் நளீர் பௌண்டஷன் தலைவர் எம்.ஏ. ரஹீம் தலைமையில் இடம்பெற்றது.

அவுஸ்திரேலிய சிட்னி பிரதர்ஸ் நிதியனுசரணையில் சாளம்பெங்கேணி நான்கில் அமைக்கப்பட்ட இந்த வீட்டை கையளிக்கும் நிகழ்விலும், சாளம்பெங்கேணி மூன்றில் அமைக்கப்பட உள்ள வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்விலும், அம்பாறை அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீட்டின் உரிமையாளர்களிடம் வீட்டை கையளித்தார். இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் பீ. பிரணவரூபன், விசேட அதிதியாக நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளர் கே. றிஸ்வி யஹசர் அவர்களும் கலந்து கொண்டார்.

மேலும் நளீர் பௌண்டஷன் அமைப்பின் செயலாளர் ஏ.எல். றிஸான், பொருளாளர் எம்.சி. பயாஸ், உப தலைவர் ஏ.எல்.எம். நௌபர் உட்பட நிர்வாகிகள், அங்கத்தவர்கள், ஊர்பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்


பாறுக் ஷிஹான்

மருதமுனை ஊடக பேரவையின் தொடங்குகை நிகழ்வும் இப்தாரும்  வியாழக்கிழமை(20) மாலை  மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பெண்கள் பிரிவில் பேரவையின் ஸ்தாபகர் கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர் தலைமையில் இடம்பெற்றது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எல்.எம். ஜமால்டீன் தலைவராகவும் ,ஜெஸ்மி எம்.மூஸா பொதுச் செயலாளராகவும், ஏ.எல்.எம். ஷினாஸ் பொருளாளராகவும், தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் பிரதித் தலைவர், உப தலைவர்கள், தவிசாளர், பிரதிச் செயலாளர், அமைப்பாளர், ஊடக இணைப்பாளர், கணக்காய்வாளர் அடங்கலாக நிருவாகக் குழு உறுப்பினர்களாக பதின்மரும் ஏகமானதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

நிகழ்வில் ஸ்தாபகரும் பிரதித் தலைவருமான கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர், தலைவர் எம்.எல்.எம்.ஜமால்டீன், பொதுச் செயலாளர் ஜெஸ்மி எம்.மூஸா, பொருளாளர் ஏ.எம்.ஷினாஸ், தவிசாளர் சிரேஷ்ட ஒலி-ஔிபரப்பாளர் ஊடக வித்தகர் இஸ்மாயில் பீ.மஆரிப், உபதலைர்களான பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஸீர் அப்துல் கையூம், சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.முகம்மட் அன்சார், சட்ட ஆலாசகர் சபை உறுப்பினர் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் றைசுல் ஹாதி, போசகர் சபை உறுப்பினர் ஐ.ஏ.பரீட், பிரதிச் செயலாளர் ஏ.ஆர்.ஏ.நபாயிஸ் ஆகியோரும் நிகழ்வில் கருத்துரை வழங்கினர். 

தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோருக் கான ஆவணங்களும் நிகழ்வில் கையளிக்கப்பட்டதுடன் மருதமுனை ஊடக பேவையின் பின்வரும் நிருவாகிகள் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்கள்.

தலைவர்- எம்.எல்.எம்.ஜமால்டீன் (சிரேஷ்ட ஊடகவியலாளர்) 

பொதுச் செயலாளர்-ஜெஸ்மி எம்.மூஸா (சிரேஷ்ட ஊடகவியலாளர்) 

பொருளாளர்-ஏ.எல்.எம்.ஷினாஸ் (சிரேஷ்ட ஊடகவியலாளர்)

பிரதித் தலைவர்-ஸ்தாபகர் கலாபூஷணம் பீ.எம்.எம்.ஏ.காதர் (சிரேஷ்ட ஊடகவியலாளர்) 

தவிசாளர்-ஊடக வித்தகர் இஸ்மாயில் B.மஆரிப்  


 ஏ.எச்.எம்.பூமுடீன்-

சிரேஷ்ட ஊடகவியலாளர்.

கணக்கு பரிசோதகர்:

ஏ.டபிள்யூ.எம். ஜெஸீம்

(அறிவிப்பாளர், செய்தி வாசிப்பாளர்-வசந்தம்) 

ஊடக இணைப்பாளர்-

இஸ்மாயில் எம். இல்யாஸ் (நிகழ்ச்சித் தயாரிப்பாளர், செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர் ) 

நிருவாகக் குழு உறுப்பினர்கள்:

எம்.ஏ.நஸீர் (அறிவிப்பாளர்-பிறை எப்.எப்)

ஏ.ஜே.சமீம் (சிரேஷ்ட ஊடகவியலாளர்)

எம்.ஐ.எம்.வலீத்,

நழீம் எம்.பதுறுதீன்

ஏ.டபிள்யூ.ஜெஸீல்  

ஏ.ஆர்.ஏ.புஹாரி  

எம்.சி.மறூஸ்,

ஏ.எல்.வஸீம் அகமட்,

நஜிமுடீன் எம்.ஹஸ்ஸான். 

போசகர் சபை:

எம்.ஐ.ஏ.பரீட்

(முகாமைத்துவப் பணிப்பாளர்-பறக்கத் பிறைவட் லிமிட்டட்) 

எம்.எச்.எம். தாஜுதீன்

(முகாமைத்துவப் பணிப்பாளர்-சறோ பாம் பிறைவட் லிமிட்டட்) 

எம்.ஐ.உபைதுர் ரஹ்மான்

(முகாமைத்துவப் பணிப்பாளர்-ஜாஹி வீவிங்) 

ஏ.சி.நளீர்-முகாமைத்துவ பணிப்பாளர். தஹானி ஹாட்வெயார்

எம்.ஐ.எம்.முகர்றப்-தலைவர் மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல்

சட்ட ஆலோசனை சபை:

சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.பதுறுதீன். 

சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.ஜமீல்.

சிரேஷ்ட சட்டத்தரணி, காதி நீதிவான்-எப்.எம்.அன்சார் மௌலானா.

சிரேஷ்ட சட்டத்தரணி றைசுல் ஹாதி.

சமய ஆலோசனை சபை:

எம்.எல்.எல்.முபாறக் மதனி,

எம்.எப்.அகமது அன்சார், மௌலானா நழீமி மற்றும் 

றஸ்மி மூஸா(ஸலபி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள்.

இப்பேரவையானது மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமம் மற்றும் பாண்டிருப்பு முஸ்லிம் பிரிவுகளை உள்ளடக்கிய அச்சு, இலத்திரனியல் ஊடகவியலாளர்களைக் கொண்டு   ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 நூருல் ஹுதா உமர்


கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையேற்று வினைத்திறனாக சேவையாற்றிக் கொண்டிருக்கும் இலங்கை நிர்வாக சேவை தரம் ஒன்றை சேர்ந்த ஏ. எல். எம். அஸ்மி அவர்களின் நேர்த்தியானதும், நேர்மையானதுமான சேவையைப் பாராட்டி கல்முனை மாநகர மக்களால் கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.


ஆஷாத் ப்ளாஸா வரவேற்பு மண்டபத்தில் கடந்த செவ்வாய் கிழமை (18) இடம்பெற்ற கல்முனையன்ஸ் போரத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வின் போதே இக்கெளரவம் ஆணையாளருக்கு வழங்கப்பட்டது. கடமையைப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திற்குள் காத்திரமான பல முன்னெடுப்புக்களை முன்னெடுத்து சேவையை வழங்கிக்கொண்டிருக்கும் ஆணையாளரின் சேவையைப் பாராட்டியே இக்கெளரவம் கல்முனை மக்கள் சார்பாக கல்முனையன்ஸ் போரமினால் வழங்கப்பட்டது.


மாநகர ஆணையாளருக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம். அப்துல் ரஸாக் (ஜவாத்), தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், கல்முனையின் முதுசம் என அழைக்கப்படும் கல்முனை மறுமலர்ச்சி மன்ற தலைவர் ஏ.எம். நஸீர் ஹாஜி மற்றும் கல்முனையன்ஸ் போரத்தின் தலைவர் முபாரிஸ் எம். ஹனீபா ஆகியோரால் பொன்னாடை போர்த்தி இக்கெளரவம் வழங்கப்பட்டது. நிகழ்வில் பெருந்திரளான பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.

 


அக்கரைப்பற்று பட்டினப் பள்ளியை (சின்னப் பள்ளியை) மீள்நிர்மாணம் செய்வதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 19.04.2023 புதன் கிழமை நேற்று இடம்பெற்றது.


நிர்வாகிகள், குடும்பப் பிரதிநிதிகள் கல் எடுத்துக் கொடுக்க, உலமா சபைத் தலைவர் அப்துல் லத்தீப் மௌலவி தலைமையில் உலமாக்கள் அடிக்கல் நட்டனர்.

அதனை அடுத்து அக்கரைப்பற்று ஜமஇய்யத்துல் உலமாவின் சிரேஸ்ட மௌலலி  அஸ்ரப் அவர்களால் துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது. 

மிக உணர்வுபூர்வமான நிகழ்வு இது.



இதை நிர்மாணித்த அப்துஸ் ஸமது மௌலானா (சின்ன மௌலானா) .1850 களில் நிர்மாணிததார். அதன் பிறகு அதனை நிர்வகித்ததாக  அபூபக்கர் லெப்பை ஆலிமாகும்.

நுாற்றாண்டு பழமை வாய்ந்த இந்தப் பள்ளிவாயலலில் மாரி காலங்களில் நிலக்கீழ நீர் உட்புகுவதனால், தொழ முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் இதனைக் கட்ட வேண்டுமென்று பள்ளவாயல் ஜமாஅத்தினர் கோரி நின்றனர். 

இந்த ரமழான் மாதத்தில் பள்ளிவாயல்“ நிருவாகம் முன்வைத்த கோரிக்ககைக்கு அமைவாக தனவந்தர்கள், பரோபகாரிகள் பலர் தாமாகவே முன்வந்து நிதி உதவி  அளித்ததன் பேரில் இன்று தினம் அடிக்கல் நடப்பட்டுள்ளது.


பாறுக் ஷிஹான்


கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கோழி இறைச்சியின் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, கோழி இறைச்சி வியாபாரிகளுடன் விஷேட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

கல்முனை மாநகர பிரதேசங்களில் 01 கிலோ கிராம் கோழி இறைச்சியானது 1600 வரை அதிகரித்த விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்தே கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கோழி இறைச்சிக் கடைகளின் உரிமையாளர்கள்  செவ்வாய்க்கிழமை (18) பிற்பகல் மாநகர சபைக்கு அழைக்கப்பட்டு, விலைக் கட்டுப்பாட்டுக்கான சாதக நிலைமை குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டிருக்கிறது.

இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், கணக்காளர் கே.எம்.றியாஸ், பொறியியலாளர் ஏ.ஜே.ஹலீம் ஜௌஸி, வருமான பரிசோதகர்களான ஏ.ஜே.சமீம், எம்.சலீம், எம்.எஸ்.எம்.உபைத், எம்.ரி.சப்னம் சாஜிதா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது நோன்புப் பெருநாளை முன்னிட்டு நுகர்வோரின் நலனைக் கருத்தில் கொண்டு, சாதாரண மக்களும் கொள்வனவு செய்யும் வகையில் கோழி இறையிச்சியின் விலையை முடியுமானவரை குறைத்து விற்பதற்கு வியாபாரிகள் முன்வர வேண்டுமென ஆணையாளர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

தற்போது கோழி உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்திருப்பதால், உற்பத்தி நிறுவனங்களினால் கூடிய விலைக்கே தமக்கு கோழிகள் விநியோகிக்கப்படுவதாகவும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கேள்வி நிரம்பல் காரணமாக சடுதியாக அதிகரித்த கோழி இறைச்சியின் விலை அடுத்த சில தினங்களில் சிறிதளவு குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் கோழி இறையிச்சி வியாபாரிகள் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தனர்.

எவ்வாறாயினும், கோழி உற்பத்தி நிறுவனங்களின் தற்போதைய சந்தை விலைக்கேற்ப கொள்ளை இலாபமின்றி நியாய விலையில் கோழியிறைச்சியை விற்பதற்கும் அவ்வப்போது சந்தை விலை குறைகின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் நுகர்வோருக்கு அவற்றின் பயன்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் விலைக்குறைப்பு செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

அதேவேளை, அனைத்து கோழி இறைச்சிக் கடைகளிலும் கண்டிப்பாக சுத்தம், சுகாதாரம் பேணப்பட வேண்டும் எனவும் கழிவுகள் யாவும் முறையாக சேகரிக்கப்பட்டு, மாநகர சபையின் பிரத்தியேக கழிவகற்றல் வாகனத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது அறிவுறுத்தப்பட்டது.

 


(கல்முனை நிருபர்)


புனித ரமழான் மாத பாடசாலை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள முறையில் கழிக்க வேண்டும் என்றநோக்கில் கல்முனை முஹம்மதிய்யா இஸ்லாமிய நூலகத்தினால் வருடாவருடம் நடாத்தப்படுகின்ற மாணவர்களுக்கான ரமழான் கால இலவச செயலமர்வு இவ்வருடமும் கல்முனையில் இடம்பெற்றது


இத் செயலமர்வில் இஸ்லாமிய அகீதா,பிக்ஹ்ஹதீஸ் மற்றும் துஆ மனனம் ஆகிய வகுப்புகள்நடைபெற்றதுடன்வுழு மற்றும் தொழுகை முறைகள் செய்முறை மூலமாகவும் பயிற்றுவிக்கப்பட்டன.



செயலமர்வில் முதலாம்,இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பண பரிசில்கள்சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுஅத்துடன் செயலமர்வு வகுப்பில் கலந்து கொண்ட அனைத்துமாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


 


(வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு விளையாட்டு கழகம் நிருமாணித்து அரைகுறையாக கிடக்கும் உள்ளக விளையாட்டரங்கை, கிராமிய வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேஷன் ஆகியோர் பார்வையிட்டார்கள்.

கழகத்தின் அழைப்பை ஏற்று  புத்தாண்டன்று காரைதீவில் இடம் பெற்ற புத்தாண்டு விளையாட்டு விழாவிற்கு வருகை தந்த இருவரும், நிதியின்மை காரணமாக அரைகுறையில் கிடக்கும் உள்ளக விளையாட்டரங்கை பார்வையிட்டனர்.

 இதன்போது கழகத் தலைவர் ரி.தவக்குமார் கழகப் போஷகர்களான சிவ.ஜெகராஜன், வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்டோர் விளையாட்டரங்கு தொடர்பான பூரண விவரங்களை வழங்கினார்கள்.

 இதனை நிறைவுறுத்த முப்பது மில்லியன் ரூபாய் தேவையாகின்றது என்றும் குறிப்பிடப்பட்டது.
 இதிலே ஒரு பகுதியையாவது முதலில் செய்து தர வேண்டும் என்று கழகத்தினர் கோரிக்கை விடுத்தனர். அந்த கட்டடத்தை பார்வையிட்ட அவர்கள் முதலில் கூரை அமைப்பதற்கும் அருகில் வீதி அமைப்பதற்கும் முயற்சி செய்வதாக கூறிச் சென்றார்கள்.

 


சுகாதாரத்துறை எதிர்நோக்கும் சவால்கள் குறித்து கல்முனையில் விசேட கலந்துரையாடல்.


நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரிவு தலைவர்களுக்கான கலந்துரையாடல் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது தற்போது நாட்டில் இருந்து அதிகமான சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் வெளிநாடு செல்வது கல்முனை பிராந்தியத்தையும் பாதித்துள்ளது. அதே போன்று சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாட்டு உள்நாட்டு வேலை வாய்ப்புகளுக்காக மருத்துவத்துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் ஏனைய சுகாதார உத்தியோகத்தர்கள் விடுமுறை பெறுவதனாலேயே இவ்வாறான சிக்கல்கள் ஏற்படுகிறது என்பது தொடர்பிலான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

மேலும், இந் நிலைமையை சமாளிப்பதற்கும் நோயாளிகளை வேறு மாகாணங்களுக்கு சிகிச்சைகளுக்காக அனுப்புவதில் உள்ள சவால்கள் மற்றும் பிராந்தியத்தில் அதிகரித்துள்ள தரமற்ற உணவு விநியோகம், வைத்திய ஆலோசனை இன்றி தனியார் மருந்தகங்களினால் மருந்துகள் விநியோகம், ஆக்சிஜன் சிலிண்டர்களை அண்மையில் உள்ள வைத்தியசாலைகளில் இருந்து பெறுதல், இரத்த மற்றும் ஏனைய மாதிரிகளை தபால் மூலமாக அனுப்பி வைப்பதன் மூலம் செலவுகளை பாரியளவில் குறைத்தல் தொடர்பிலும் மீன்களுக்கு அசுத்தமான மண்ணை கலத்தல் மற்றும்  உணவகங்களின் தரம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது

 


நூருல் ஹுதா உமர்


மாளிகைக்காடு பிறீடம் விளையாட்டு கழகமும், சுதந்திர சமூக நலன்புரி மையமும் இணைந்து தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள, தெரிவு செய்யப்பட்ட  வறுமையான குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகளும், பாடசாலை மாணவர்களுக்கான புத்தக பை மற்றும் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பிறீடம் விளையாட்டு கழகத்தினதும், சுதந்திர சமூக நலன்புரி மையத்தினதும் தலைவர் எம்.எஸ்.எம். ஹக்கீம் தலைமையில் மாளிகைக்காடு கமு/கமு/அல்-ஹுசையின் வித்தியாலயம், மற்றும் கமு/கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு அப் பாடசாலைகளின் அதிபர்களான ஏ.எல்.எம்.ஏ. நளீர், எம்.ஐ.எம். அஸ்மி ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இக் கழகத்தின் வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் உள்ள உறுப்பினர்களின் நிதியுதவியில் வழங்கி வைக்கப்பட்ட இவ்வுதவி திட்டத்தை கழகத்தின் ஆலோசகர் எம்.எம்.ஆர். நிறுவன பணிப்பாளர் ஏ.மன்சூர், கழகத்தினதும் அமைப்பினதும் செயலாளர் எஸ். நவாஸ், ஏனைய நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டு உதவி பொருட்களை வழங்கி வைத்தார்கள். இவ் உதவிகளை பெற்றுக்கொள்ள அக் குடும்பங்களின் உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உதவிப் பொருட்களை பெற்றுக்கொண்டார்கள்

 


(RikasAhamed)
நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் மாட்டு வண்டியுடன் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிர் ராஜியூன்.


இச்சம்பவம் இன்று  அதிகாலையில் இடம் பெற்றுள்ளது.


இந்த விபத்து சம்பவத்தில்  உயிரிழந்தவர் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த  இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் எனவும்,  மாட்டு வண்டிகள் இரண்டும் நிந்தவூரைச் சேர்ந்தது என்றும் தெரியவந்துள்ளது.


 காரைதீவு MOH பிரதேசங்களில் டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க களச் செயற்பாடும் புகை விசிறல் நடவடிக்கையும் !


நூருல் ஹுதா உமர்


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் றிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வஸீரின் பணிப்புரைக்கமைய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் பைசல் முஸ்தபா தலைமையில் டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க களச் செயற்பாடுகளும் புகை விசிறல் நடவடிக்கையும் இன்று (13) காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டது.


அண்மைக்காலமாக டெங்கு நுளம்பின் ஆதிக்கம் சமிக்கை காட்டி வருகின்றதை அவதானிக்க கூடியதாக இருப்பதனால் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக டெங்கு கட்டுப்பாட்டு கள ஊழியர்களால் நாளாந்தம் களச் செயற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதன் தொடர்ச்சியாக கல்முனை மாநகர சபை புகை விசிறல் இயந்திரங்களின் உதவியுடன் டெங்கை கட்டுப்படுத்தும் முகமாக அதனை பரப்பும் முதிர்ந்த நுளம்புகளை அழிக்கும் புகை விசுறும் (Fogging) விசேட நடவடிக்கைகள் பொதுச்சுகாதார பரிசோதர்களான கலந்தர்ஷா ஜெமீல், எம்.எம். முஹம்மட் சப்னூஸ், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்களின் பங்கெடுப்புடன் மேற்கொள்ளப்பட்டது. 


ஆட்கொள்ளியான டெங்கு நோய் ஊடுருவி நம்மை வந்தடைந்து மரண அச்சுறுத்தலை வழங்குவதுடன் குழந்தைகளையும், சிறுவர்களையும், மாணவர்களையும் மிகவும் அதிகமாக பாதித்து டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு உயிராபத்தை உண்டாக்கிவிடும் அபாயம் நிலவுகிறது. ஆகவே சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் நீர் தேங்கி நின்று அதனில் நுளம்புகள் உருவாவதற்கு ஏதுவான பொருட்களையும்

இடங்களையும் இல்லாதொழிக்குமாறும் சுகாதாரத்துறை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.


 (எம்.என்.எம்.அப்ராஸ்)


கத்தார்  நாட்டிற்கு வருகை தந்திருக்கும்  இலங்கை மூத்த கவிஞர்   காப்பியக்கோ, ஜின்னா சரிபுத்தீன் அவர்களை ஸ்கை தமிழ் பணிப்பாளர் ஜே.எம்.பாஸித், ஊடகவியலாளர் பிஸ்ரின் மொஹமட்,இந்தியாவைச் சேர்ந்த கவிஞர் தஞ்சாவூரான் ஆகியோர் நேற்று (12)சந்தித்தனர்.


இந்த சந்திப்பில் கத்தாரில் உள்ள தமிழ் பேசும் எழுத்தாளர்கள் இலக்கியவாதிகள் அனைவரையும் ஒன்று சேர்த்து கவியரங்கு மற்றும் விருது விழா என்ன பல நிகழ்ச்சி திட்டங்களை கத்தாரில் நடத்துவதற்கு கலந்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் குறிப்பாக இலங்கை மற்றும் இந்தியா வாழ் தமிழ் உறவுகளை ஒன்றிணைத்து இலக்கிய செயற்பாடுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் முக்கியமாக இந்த சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 .


சுகிர்தகுமார் 0777113659

  அம்பாரை மாவட்டத்தில் வாழும் தமிழ் சிங்கள மக்களும்; சித்திரைப்புத்தாண்டை கொண்டாட தயாராகி வரும் அதேநேரம் பெருநாள் கொண்டாட்டத்திற்காக முஸ்லிம் மக்களும் தயாராகிவருகின்றனர்.
நாட்டில் பொருட்களின் விலை சற்று குறைவடைந்துள்ள நிலையில் மக்கள் பொருட்கொள்வனவிலும் ஆடைக்கொள்வனவிலும் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிந்தது.
பொருட்தட்டுப்பாடு பணத்தட்டுப்பாடு போன்ற காரணிகள் கடந்த நாட்களில்; தாக்கம் செலுத்தியபோதும் தற்போது மக்கள் புத்தாண்டை ஓரளவேனும் மகிழ்ச்சியுடனும் இன்முகத்துடன் வரவேற்க காத்திருப்பதையும் காண முடிந்தது.
இதேநேரம் புதுவருடத்தின் பின்னராவது நாட்டில் சுமூகமான நிலை உருவாக வேண்டும் என்பதே பலரது பிரார்த்தனையாக இருக்கின்றது.
இந்நிலையில் நடமாடும் விற்பனை நிலையங்கள் அதிகளவாக அமைக்கப்பட்டுள்ள நிலையில் வெளியூர் வியாபாரிகளின் வருகையும் அதிகரித்து காணப்பட்டது.
சதொச போன்ற அரச விற்பனை நிலையங்களிலும் ஏனைய விற்பனை நிலையங்களிலும் தேவையான அளவிற்கு பொருட் கொள்வனவு செய்ய கூடிய நிலை உள்ளதையும் மக்கள் கருத்துக்கள் மூலம் அறிய முடிகின்றது.
எனினும் பழவகைகள் மரக்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் சந்தையில் தேவையான அளவு காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 


சர்வோதயம் அமைப்பின் அக்கரைப்பற்று பிரதேச செயலக குழுவின் அறிமுக கலந்துரையாடலும் சர்வோதயம் மற்றும் யுனிசெய் இணைந்து செயற்படுத்தும் கிராம மட்டத்தில் சுகாதாரத்தை மேம்படுத்தல்,  தொற்றுநோய் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குதல் திட்டத்தின் தெளிவூட்டல் நிகழ்வு வியாழக்கிழமை (13) சுகாதார வைத்திய அதிகாரி காரியலாயத்தில் இடம்பெற்றது. இதில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி Dr.Kader மற்றும் PHI A.H.Fahmi வளவாளர்களாக கலந்து கொண்டதுடன் இதில் சர்வோதயம் அமைப்பின் அம்பாரை மாவட்டத்தின்  UNICEF திட்டத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் H.M.அமாஸிர் மற்றும் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். 

இந்த பயிற்சியின்போது எதிர்காலத்தில் அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட கிராமங்களில் டெங்கு,  ஊட்டச்சத்து, தொற்று மற்றும் தொற்றா நோய்கள் போன்ற சுகாதார பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு வழங்க வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.


(எஸ் சினீஸ் கான்)

 


வி.சுகிர்தகுமார் 0777113659 


  ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் தொடர்பாக தனியார் ஊடகங்களில்  அன்மையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட செய்தி தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு ஆலையடிவேம்பு பிரதேச சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று(12) மாலை அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது ஆலையடிவேம்பு பிரதேச சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் இளைஞர்கள் பொதுமக்கள் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது பிரதேச செயலாளருக்கு எதிராக கிராம உத்தியோகத்தர்களினால் பொது நிருவாக அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்ட கடிதம் எதுவும் தம்மால் அனுப்பி வைக்கப்பட்டவில்லை என்றும் இதற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தாம் எவ்விதத்திலும் மன உளைச்சலுக்கு உள்ளாகவில்லை என்றும் அனைத்து கிராம உத்தியோகத்தர்களினாலும் கையொப்பமிடப்பட்ட மறுப்பறிக்கை காண்பிக்கப்பட்டது.
மேலும் மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண் பிரதேச தனக்கு உதவிகள் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் அங்கு சென்றதாகவும் இவ்வாறு அங்கு நடைபெறும் என தான் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார்;
மேலும் பிரதேச செயலகத்தால் தனக்கு 10 இலட்சம் பெறுமதியான வீடொன்று வழங்கப்பட்டதாகவும் பிரதேச செயலகத்தில் தனக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களும் வழங்கப்படுவதாகவும் பிரதேச செயலாளருக்கு எதிராக தான் செயற்படவில்லை என்றும் தன்னை பெண் ஒருவரே அங்கு அழைத்துச் சென்றதாகவும் வாக்குமூலமும் அளித்தார்.
அத்தோடு கலந்து கொண்ட பிரதேச சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஓய்வு பெற்ற அரச உயர் அதிகாரிகளும் ஒளிபரப்பட்ட செய்தி அறிக்கைக்கு எதிராக தமது கவலையினை தெரிவித்ததுடன் உண்மை தன்மை தொடர்பில் நேரடி களவிஜயமொன்றை மேற்கொண்டு குறித்த ஊடகம் தமது செய்தியினை மீள் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
 அத்தோடு சம்மந்தப்பட்ட ஊடகத்தின் பிரதானி மற்றும் செய்தி ஆசிரியர் பொது நிருவாக அமைச்சின் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோருக்கான மகஜர்களை தயாரித்து அதில் அனைத்து சமூக அமைப்புக்களும் கையொப்பமிட்டு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
இதேநேரம் உண்மை நிலையினை வெளிக்கொண்டு வரும் பொருட்டு குறித்த ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர்களுக்கும் தகவல் வழங்கப்பட்டபோதும் அவர்கள் சமூகமளிக்காமையிட்டு மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் அங்கு கையொப்பமிடப்பட்ட மகஜர்களில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்து.
இலங்கையில் வாழும் மக்களின் நம்பிக்கையினை பெற்ற தமிழ் ஊடகம் எனும் அடிப்படையிலும் உண்மையான செய்திகளை வெளிக்கொண்டுவரும் ஊடகம் எனும் அடிப்படையிலும் குறித்த தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவிக்கும் அதேநேரம் அன்மையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் தொடர்பில் ஒளிபரப்பப்பட்ட செய்தி தொடர்பில் சமூக அமைப்புக்கள் எனும் அடிப்படையிலும் இப்பிரதேசத்தில் வாழும் பொதுமக்கள் எனும் வகையிலும் பெரும் கவலை அடைந்துள்ளோம்.
இச்செய்தி அறிக்கையில் ஒன்றோடு ஒன்று தொடர்பிலாத முரண்பாடான உண்மைத்தகவலை உள்வாங்காத பிரதேச செயலாளரை வேண்டுமென்றே அவமதிக்கும் செய்தியாக அமைந்துள்ளமை தொடர்பில் மனவருத்தத்தை தெரிவித்துக்கொள்வதுடன் அதன் பின்னணி தொடர்பிலும் பின்வரும் விடயங்களை தெரியப்படுத்துகின்றோம்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளராக கடமையாற்றும் திரு. வினாசித்தம்பி பபாகரன் அவர்கள் தமது கடமையினை 2020.06.19ஆம் திகதி பொறுப்பேற்றதன் பின்னர் இங்கு வேரூன்றி காணப்பட்ட போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாடுகள் மற்றும் சட்டவிரோத நில அபகரிப்பிற்கு எதிரான வழக்குத்தாக்கல்கள் பிரதேசத்தின் பிரதான வளமாக காணப்படும் பெரியகளப்பு நில ஆக்கிரமிப்பினை தடுக்கும் நடவடிக்கை என பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.
பிரதேச நன்மைகருதி இவரால் எடுக்கப்படும் காத்திரமான நடவடிக்கைகளை பொறுக்க முடியாத போதைப்பொருள் வியாபாரிகளும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்பாளர்களும்; இவருக்கு அச்சுறுத்தல்களை விடுத்து வருவதுடன் கொலை அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். இது தொடர்பான வழக்கு பொலிசாரினால் நீதிமன்றில் நடாத்தியும் செல்லப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் 28000 ஆயிரம் மக்கள் வாழும் பகுதியில் கடந்த 2023.03.08ஆம் திகதி வெறுமனே ஒரு சில அப்பாவி பொதுமக்களை பிழையான முறையில் வழிநடத்தி நிவாரணம் பெற்றுத்தருவதாக கூறி சுமார் 50 பேரை மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைத்து போராட்டம் எனும் பெயரில் பிழையாக வழிநடத்தியமைமையும் தெரியவருகின்றது.
இதற்கு பின்புலமாக செயற்பட்ட பெண் ஒருவர் ஆலையடிவேம்பு பிரதேத்தை சேர்ந்தவர் அல்ல எனவும் அவர் தமண பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் வாழ்பவர் எனவும் தெரியவருகின்றது. அவரது சகோதரர் ஒருவரின் அரச காணி அத்துமீறலை தடுத்த பிரதேச செயலாளருக்கு அவதூறு விளைவிக்கும் முகமாகவே மேற்படி ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.
இவ்வாறான நிலையில் கடந்த 2023.04.09 ஆம் திகதி தங்களது ஊடகத்தில் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்யுமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அச்செய்தி அறிக்கையில் குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான எமது விளக்கம்.
குற்றம் 1 - கிராம அலுவலர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி அது தொடர்பான முறைப்பாட்டை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பபட்டதாக தெரிவித்தமை
விளக்கம் - அவ்வாறான எந்தவித மன உளைச்சலும் தங்களுக்கு இல்லை எனவும் அவ்வாறு எவ்வித குற்றச்சாட்டையும் தாங்கள் முன்வைக்கவில்லை எனவும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கடமைபுரியும் கிராம அலுவலர்கள் எழுத்து மூலமான மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளனர்.
குற்றச்சாட்டு 2  அம்பாரை மாவட்ட செயலகம் முன்னால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்
விளக்கம் இது தொடர்பான தகவல் முன்னர் வழங்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு 3  சின்னமுகத்துவார அகழ்வும் வெள்ளப்பாதிப்பும்
விளக்கம்  வெள்ளப்பாதிப்பிற்கு காரணம் முறையான வடிகான் இன்மையாகும். மேலும் பெரிய களப்பு என்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரமகாவும் நிலத்தடி நீரை பாதுகாக்கும் மூலமாகவும் காணப்படுகின்றது. சின்னமுகத்துவார அடிக்கடி அகழ்வின் மூலம் களப்பின் நீர் வெளியேற்றப்பட்டு  நீர்மட்டம் குறைவடைவதுடன் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகின்றது. நிலத்தடி நீர் மட்டம் குறைவடைந்து காலப்போக்கில் 13000 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் வரட்சியடையும் நிலையும் தோன்றும்.
மேலும் கோளாவில் 03 மாரியம்மன் ஆலய விளையாட்டுத்திடல் காலகாலமாக பயன்படுத்தப்பட்டு வருவதுடன் அரச நிதியில் அதனை அபிவிருத்தி செய்த தேசிய வேலைத்திட்டமாகும். இதனால் போதைப்பொருள் பாவனையில் இருந்து இளைஞர்களை மீட்டெடுத்து விளையாட்டின் பக்கம் திருப்புவதற்காக செய்யப்பட்ட நல்ல நோக்கமாகும்.
இத்திடல் அமைந்துள்ள இடம் ஏற்கனவே விளையாட்டு மைதானம் அமைந்த இடமாகும். இது எவ்விதத்திலும் வடிச்சலை பாதிக்காது என்பது உண்மையாகும். தங்களால் காண்பிக்கப்பட்ட காட்சியானது ஆலையடிவேம்பு பகுதியில் கனமழை பொழிந்து ஊரே வெள்ளக்காடாக காட்சியளித்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டதாகும். மேலும் இம்மைதானம் கடலிலிருந்து சுமார் 900 மீற்றருக்கு அப்பால் அமைந்துள்ளது. அத்துடன் மைதானத்திற்கு அருகில் அரச மற்றும் தனியார் கட்டடங்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இம்மைதானத்திற்கு ஆலையடிவேம்பு பிரதேச சபையால் மின்சாரம் ஒளிவிளக்குகள் வழங்கப்பட்டுள்ளமை சபையின் அனுமதி பெற்ற செயல் என்பது தெளிவாகின்றது. இம்மைதானம் அமைக்கப்பட்ட காலத்தில் காணப்பட்ட சடுதியான விலை அதிகரிப்பு காரணமாக ஆலையடிவேம்பு பிரதேச சபை மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றில் இருந்து அனுமதி பெறப்படவில்லை என்பது உண்மை. இது ஒரு பிரதேச செயலாளரை இடமாற்றம் கோருமளவிற்கு பாரிய குற்றமா என்பதே எமது கேள்வியாக அமைந்துள்ளது.
குற்றச்சாட்டு 4  ஒரு அரச காணி அரச காணியல்ல என அறிக்கை செய்யப்பட்டுள்ளது.
விளக்கம்  மேற்படி அறிக்கை பிரதேச செயலாளரால் வழங்கப்பட்டது உண்மை. இருப்பினும் அது உடன் சீர் செய்யப்பட்டு அறிக்கை செய்யப்பட்டதன் பின்னரே முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் அக்காணி அருகிலுள்ள காணிகள் ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு தனியார் உறுதிகள் எழுதப்பட்ட அடிப்படையிலும் அவ்விடத்திற்கான கிராம இறுதி வரைபடம் இல்லாமையினாலும் அத்தவறு நடந்ததாக பிரதேச செயலாளரால் அறிக்கையிடப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு 5 இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பிரதேச செயலாளர் குற்றம் இழைத்தவர் என அறிக்கை செய்யப்பட்டது.
விளக்கம் மேற்படி விடயமானது 2008 ஆம் ஆண்டு அரச நிதியில் கட்டப்பட்ட மீனவர் கட்டடம் 2018ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பாளர்களால் உடைக்கப்பட்டது. இதனை அந்த காலத்தில் தங்களுக்கு காணப்பட்ட செல்வாக்கினை பயன்படுத்தி ஆக்கிரமிப்பாளர்கள் மேற்கொண்டது. அது தொடர்பில் மீனவர்களால் பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்;டு பின்னர் உரிய நியாயம் கிடைக்காமையினால் பின்வாங்கப்பட்டது. மேலும் 2018ஆம் ஆண்டு இது மனித உரிமை ஆணைக்குழுவில் விசாரிக்கப்பட்டது. இருப்பினும் 2020 ஆம் ஆண்டு பதவி நிலை பொறுப்பேற்ற பிரதேச செயலாளருக்கு பாதிக்கப்பட்ட தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அதனை மீண்டும் விசாரிக்க பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுத்தார். அதன் பின்னர் மனித உரிமை ஆணைக்குழு மீண்டும் விசாரணை மேற்கொண்டு அதனை மீள் அளவீடு செய்ய பரிந்துரை செய்தது. அத்தோடு நீதிமன்ற வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வாறான பின்னணியை ஆராயும்போது இது பிரதேச செயலாளரின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட சட்டவிரோத கும்பலின் பின்னணியிலேயே பக்கச்சார்பான முறையில் தயாரிக்கப்பட்ட படங்களும் காட்சிகளும் ஆவணமாக காட்டப்பட்டது என்பது தெளிவாகின்றது. இது தங்களது ஊடகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமான ஒரு தரப்பினரின் செயற்பாடாக எண்ணத் தோன்றுகின்றது.
ஒரு சிலரது தவறான தகவல்களையே இச்செய்தியில் உள்வாங்கப்பட்டுள்ளதை உணருகின்றோம்.

இது இவ்வாறிருக்க செய்தி அறி;க்கையில் சின்னமுகத்துவாரத்தை சின்னமுத்து ஆறு என தவறாக குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
மேலும் களப்பினை ஆக்கிரமிக்கும் சிலருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதையும் குறிப்பிட விரும்புகின்றோம்.
இதற்கு மேலாக கிராம உத்தியோகத்தர்களை பிழையாக வழிநடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதை மறுப்பதுடன் அவர்களது மறுப்பறிக்கையினையும் இணைத்துள்ளோம்.
ஆகவே பொறுப்புள்ள ஊடகம் எனும் அடிப்படையில் தங்களது சுயாதீன குழுவொன்றை இங்கு அனுப்பி வைத்து களவிஜயத்தின் பின்னர் உண்மைத்தன்மையை அறிந்து செய்தியினை மீள் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்குமாறும் தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.