Showing posts with label Uva. Show all posts

(க.கிஷாந்தன்)
பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் பவானி ரகுநாதன், முழந்தாளிட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 30.01.2018 அன்று ஹட்டன் நகரில் கொட்டும் மழையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் ஹட்டன் பேரூந்து நிலையத்திற்கு முன்பாக பிற்பகல் 2 மணியளவில் இலங்கை ஆசிரியர் சங்கம், மலையக ஆசிரியர் முன்னணி, ஆசிரியர் விடுதலை முன்னணி, இலங்கை கல்வி சமூக சம்மேளனம், இலங்கை ஐக்கிய தமிழர் ஆசிரியர் சங்கம் என்பன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியாறு ஆசிரியர்கள், அதிபர்கள், சிவில் சமூகத்தினர் என பலரும் கலந்து கொண்டு சுமார் ஒரு மணித்தியாலயம் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இதன்போது, ஆசிரியர் சமூகத்தையும், அதிபர் சமூகத்தையும், கல்விச் சமூகத்தையும், பெண்கள் சமூகத்தையும் அவமானப்படுத்தியவர்கள் அனைவரையும் உடனடியாக பதவி நீக்கவும், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.

பதுளையை வசிப்பிடமாக கொண்ட 7 வயது சிறுமியான அமானி ராயிதா என்னும் சிறுமியின் ஆசையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்றியுள்ளார்.
குறித்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியை சந்திக்க தனது பெற்றோருடன் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக காத்திருந்தார். இதனை அறிந்துக்கொண்ட ஜனாதிபதி வேலைப்பளுவுக்கு மத்தியிலும், தனது பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்பி குறித்த சிறுமியை அழைத்து வந்துள்ளார்.
இதன்போது, இந்த சிறுமி தன்னால் வரையப்பட்ட ஓவியத்தை ஜனாதிபதிக்கு  பரிசளித்து விட்டு, ஜனாதிபதி பதுளைக்கு விஜயம் செய்யும் போது, தனது வீட்டுக்கு வருமாறு அன்பான வேண்டுகோளையும் விடுத்துச் சென்றுள்ளார்.
இதன்படி, நேற்று(28) பதுளைக்கு விஜயம் செய்திருந்தப் போது, ஜனாதிபதி குறித்த சிறுமியின் வீட்டுக்குச் சென்று, பாட்டுப் பாடி அங்கு கூடியிருந்த ஏனைய சிறுவர்களையும் மகிழ்வித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

தனமல்வில - வெல்லவாய பிரதான வீதியின் தெலுல பிரதேசத்தில் இன்று காலை பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இதுவரை 03 பேர் உயிரிழந்ததுடன் மேலும் மூன்று பேர் ஆபத்தான நிலயில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பஸ் ஒன்றும் கார் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.



ஊவா மாகாண சபைக்கு முன்னால் சற்று அமைதியின்மை நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார். 

இதன்போது ஊவா மாகாண சபையின் பொதுச் சபை அமைர்வுக்காக சென்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் இருவர் உட்பட மூன்று உறுப்பினர்கள் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் இருவர் தற்போது பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். 

ஊவா மாகாண சபை தமிழ்க் கல்வி அமைச்சானது கீரியிடம் இருந்த பிடுங்கி நரியிடம் ​கொடுக்கப்பட்ட கதையாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

நேற்று(24) ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான் 2 வருடங்களுக்கு முன்பு பண்டாவளை நகரில் வைத்து அரச பணியாளரான தபால் ஊழியர் ஒருவரைத் தாக்கி பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் தற்போதும் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், அதிபரை முழங்காலிட வைத்த சம்பவத்தின் குற்றவாளியான ஊவா மாகாண சபை முலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் பதவியை எவ்வாறு செந்தில் தொண்டமானுக்கு வழங்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் ​கேள்வி எழுப்பினார்.

இன்று  (24) தோட்ட, உட்கட்டமைப்பு அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் பிறந்து வளர்ந்து, மலைநாட்டு சூழலில் வளர்ந்த இலங்கை கலாசாரத்தை பின்பற்றும் ஒருவருக்கே தமிழ் கல்வி அமைச்சராவதற்குரிய தகுதி இருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.

அத்துடன், பாடசாலை அதிபர் விடயத்தில் முதலமைச்சருக்கு எதிராக ஜனாதிபதி எடுத்துள்ள  மாற்று நடவடிக்கைக்கு எதிர்ப்பினை தெரிவிப்பதாகவும், குறித்த விடயத்தில் சிறந்த மு​டிவினைப் பெற்றத்தரக்  கோரியும் எதிர்வரும் 31ஆம் திகதி ஹற்றன் நகரில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாகவும், இதில் அனைவரும் கலந்துக்கொண்டு தமது எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டும் என்றும், அவர் தெரிவித்தார்.

ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சராக செந்தில் தொண்டமான் இன்று பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.
மாகாண ஆளுநர் எம்.பி.ஜயசிங்க முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.
அதிபர் ஒருவரை முழந்தாளிடச் செய்த சம்பவம் தொடர்பில் எழுந்த எதிர்ப்புக்கள் காரணமாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் திசநாயக்க, மாகாண கல்வி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

-எம்.செல்வராஜா, தாஹிர் எம்.பாயிஸ்-
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை முழங்காலிடச் செய்தார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, மூன்று சட்டத்தரணிகளுடன் பதுளை பொலிஸில், நேற்று (23) சரணடைந்தார்.
இதனையடுத்து பதுளை பொலிஸார் அவரை, பதுளை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்தபோது, நீதவான் அவரை, தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்ததுடன், வழக்கை எதிர்வரும்  மே மாதம் 16ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இதன்போது முதலமைச்சர் சார்பாக, ஐந்து சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
நீதிமன்றத்துக்கு முதலமைச்சர் கொண்டு செல்லப்பட்டபோது, இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேராவும், முதலமைச்சரின் ஏராளமான ஆதரவாளர்களும், நீதிமன்றத்துக்கு வெளியே குழுமியிருந்தனர்.
முதலமைச்சர் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தை அடுத்து, பதுளையில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
ஊவா முதலமைச்சரின் ஆதரவாளர்கள், வெளிப் பிரதேசங்களிலிருந்து பதுளை நகருக்கு வரமுனைகின்றனரென, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.
இதனையடுத்து அமைச்சர் செந்தில் தொண்டமான், தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, ஊவா மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கோரியதற்கிணங்க, ஊவா மாகாணத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் சில பகுதிகளில், கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
மேலும், பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், நாடாளுமன்றக் கட்டடத்தில் கூட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த விசாரணைக்கு, மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, ஊவா மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வெல, மாகாண கல்விப் பணிப்பாளர் ஆர்.எம்.பி.ரத்நாயக்க, பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர்.பவானி ஆகியோரும் அழைக்கப்பட்டிருந்தனர். இதில், முதலமைச்சர் தவிர்ந்த அனைவரும் கலந்துகொண்டிருந்தனர் எனத் தெரியவருகிறது.

(க.கிஷாந்தன்)

பதுளை மகளிர் வித்தியாலயத்தின் பெண் அதிபரை முழந்தாழிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவத்தைக் கண்டித்து பெரும் ஆர்ப்பாட்டமொன்று பதுளையில் இடம்பெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டமானது பதுளை மகளிர் வித்தியாலயத்திற்கு முன்னால் 22.01.2018 அன்று காலை ஆரம்பிக்கப்பட்டு பேரணியாக பதுளை நகரை சென்றடைந்துள்ளது.

குறித்த ஏதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பதுளை மகளிர் வித்தியாலயத்தின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் உட்பட பெருந்தொகையானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவையும் சில அதிகாரிகளையும் பதவி விலக்கி அவர்களை கைதுசெய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர்  ஆளுநருக்கு மகஜரொன்றையும் கையளித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு ஊவா மாகாண சபைக்கு முன்னால் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மாகாண கல்வி அமைச்சர் பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார்.
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபரை முழந்தாழிடச் செய்ததாக, முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மாஅதிபரை கேட்டுள்ளதாக முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க  கூறினார்.
விசாரணைகளை சுயாதீனமாக மேற்கொள்வதற்கு இடமளிக்கும் வகையில் கல்வி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்காக இந்த சம்பவத்தை சிலர் பயன்படுத்த முயற்சிப்பதாகவும் ஊவா மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகியதைப் போன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலகி சுயாதீன விசாரணைக்கு இடமளிக்க வேண்டும் எனவும் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க வலியுறுத்தியுள்ளார்.


ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து தன்னை திட்டியதுடன் அச்சுறுத்தியதாகவும் இதனால் முழந்தாளிட்டு மன்னிப்பு கேட்டதாகவும் பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் மற்றொரு தடவை தன்னை அழைத்து, இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறவில்லை என்றும், தான் முழந்தாளிட்டு மன்னிப்பு கோரவில்லை என்றும், ஊடகங்களிடம் கூறுமாறு ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க தனக்கு பணித்ததாகவும் தமிழ் பாடசாலை அதிபர் கூறியுள்ளார். 

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையில், சம்பந்தப்பட்ட பாடசாலையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின்போது பதுளை மாவட்ட மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார். 

குறித்த பாடசாலையில் தனது மகளை அனுமதிப்பதற்காக, இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவிடம் இருந்து கடிதம் ஒன்றை எடுத்துக் கொண்டு, அதிபரைப் பார்க்கச் சென்றுள்ளனர். 

எனினும், அந்தக் கடிதத்தை நிராகரித்த அதிபர், அந்த அரசியல்வாதியின் கோரிக்கையை நிறைவேற்றாததோடு, கல்வி அதிகாரிகளின் உத்தரவுக்கு இணங்க மட்டுமே தான் செயற்படுவேன் எனவும், கூறியுள்ளார். 

இதனையடுத்து, ஊவா மாகாண முதலமைச்சரின் செயலாளர், தன்னை முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு முதலமைச்சர் தன்னை தகாத வார்த்தைகளால் நிந்தித்ததாக சம்பந்தப்பட்ட அதிபர் கூறியுள்ளார். 

இந்த சம்பவத்தை முதலில் ஊவா மாகாண மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சமந்த வித்யாரத்ன ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். 

எவ்வாறாயினும் இது பொய்க் குற்றச்சாட்டு என்று மறுத்திருந்த ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டிருப்பதால் சமந்த வித்யாரத்னவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப் போவதாக கூறியிருந்தார். 

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போது, சம்பந்தப்பட்ட அதிபர் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் முன்னிலையில் இந்த விடயங்கள் குறித்து தௌிவுபடுத்தியதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். 

இந்த சம்பவத்தில் ஊவா மாகாண கல்விச் செயலாளரும் ஊவா மாகாண முதலமைச்சருடன் இணைந்துகொண்டு தன்னை அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்ட அதிபர் கூறியுள்ளார்.

தனது தாயின் தொண்டையில் தொலைபேசியை சொருகி மூச்சுத்திணறலை ஏற்படுத்தி கொலை செய்த சந்தேகத்தில் குறித்த தாயின் மகனை ஊவா பரணகம பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
ஊவாபரணகம –மொரகொல்ல உமான கிராமத்தைச் சேர்ந்த 61 வயதான ரத்னாயக்க முதியன்சலாகே கருணாவதி என்ற தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தன்னுடைய தாய் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்து கடந்த 16ஆம் திகதி ​பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.
15ஆம் திகதி தானும், தன்னுடைய மனைவியும் வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும், மறுநாள் காலை  வீட்டுக்கு வந்தபோது தனது தாய் உறங்கிய நிலையிலேயே உயிரிழந்திருப்பதாக சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
எனினும், குறித்த மரணம் சந்தேகத்திற்கிடமாக உள்ளதாக தெரிவித்து நீதவான் விசாரணைகளை முன்னெடுத்ததாகவும், நீதவானின் உத்தரவுக்கமைய   பிரேத பரிசோதனைகளுக்காக உயிரிழந்த பெண்ணின் உடலம் பதுளை தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரேத பரிசோதனைகள் நேற்றைய தினம்(17) நீதிமன்ற விசேட வைத்தியர் முன்னிலையில் நடைபெற்றதுடன், இதன்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு குறித்த தாய் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கமைய, தொலைபேசியை குறித்த தாயின் தொண்டைக்குள் சொருகி மூச்சுத்திணறலை ஏற்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்



எம்.செல்வராஜா
“பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை மண்டியிட்டு மன்னிப்புக் கேட்குமாறு நான் கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் எவ்வித உண்மையும் இல்லை” என்று, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.   
ஊவா மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,   
“தேர்தல் காலம் என்பதால், எனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்தே, மாகாண அபிவிருத்தி குறித்த கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றேன்.
அதேபோன்று, பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து, வித்தியாலய அதிபர், மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரையும் பிரச்சினைக்குரிய பெற்றோரையும் அழைத்து, கலந்துரையாடல்களை மேற்கொண்டேன்.   
“இந்தக் கலந்துரையாடல் சுமூகமான முறையிலேயே நடத்தப்பட்டது. எந்தவோர் உத்தரவும் வித்தியாலய அதிபருக்கு விடுக்கப்படவில்லை. வித்தியாலய நடைமுறைகளைப் பின்பற்றும்படியும் அதிபரிடம் கேட்டுக்கொண்டேன். அதிபரும் அதற்கு இணக்கம் காட்டினார். அதையடுத்து, அதிபர் புத்தாண்டு வாழ்த்துகளையும் கூறிவிட்டுச் சென்றார்.   
“இதனை ஜே.வி.பியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரட்ன உள்ளிட்ட சிலர், அரசியல் இலாபம் தேடிக்கொள்ளும் வகையில், முழங்காலிட்டு மன்னிப்புக் கோருமாறு முதலமைச்சர், அதிபரை கூறியதாக செய்திகளைப் பரப்பி விட்டுள்ளனர். இது விடயத்தில் உண்மை ஏதும் இல்லை.   
“ஆனால், பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை இடமாற்றக் கோரி, ஊவா மாகாண சபையின் தமிழ் உறுப்பினர்கள் அனைவருமே எனது கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். அதிபரை இடமாற்றுவதற்கு, நான் தீர்மானிக்கவில்லை. அதிபர் தரமுள்ளவர்களின் பற்றாக்குறையால், புதிய அதிபரொருவரை இவ்வித்தியாலயத்துக்கு நியமிப்பதில் இடையூறுகள் உள்ளன.   
“வித்தியாலய அதிபரை முழங்காலிட்டு, நான் மன்னிப்பு கோரியதாக எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியமைக்காக, ஊவா மாகாண சபையின் ஜே.வி.பி உறுப்பினர் சமந்த வித்யாரட்னவுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளேன்” என்றார்.   
இவ்விடயம் தொடர்பில், பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர்.பவானியுடன் தொடர்புகொண்டு வினவிய போது,   “முதலமைச்சர், என்னிடம் மன்னிப்புக் கோருமாறு கோரவில்லை. முழங்காலிடுமாறு கூறவும் இல்லை. முதலமைச்சருடன் சுமூக பேச்சுவார்த்தையொன்றையே குறிப்பிட்ட தினத்தில் மேற்கொண்டோம். எமது வித்தியாலய அபிவிருத்திக்கு, முதலமைச்சர் ஆகக் கூடிய கவனம் செலுத்தி வருகின்றார். முதலமைச்சருக்கும் எனக்கும் எத்தகைய பிரச்சினையும் இல்லை. நல்லுறவுகளே தொடர்கின்றன” என்று கூறினார். 

(க.கிஷாந்தன்)
பதுளை மாவட்டத்திலிருந்து வெலிமடை பொரலந்த வழியாக ஹோட்டன் சமவெளி செல்லும் ஒஹிய பிரதான வீதியில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒஹிய பிரதேசத்திலிருந்து ஹோட்டன் சமவெளி மற்றும் உடவேரிய, ஒஹிய ஆகிய தோட்டங்களுக்கு செல்லும் பிரதான வீதியில் ஒஹிய புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் வளைவுப்பகுதியில் இவ்வாறு மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.
இதனால் சாரதிகளை அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு ஹப்புத்தளை பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சீரற்ற காலநிலையினால் பாதையில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், கற்பாறைகளும் மலைகளிலிருந்து உருண்டு வருவதோடு, மரங்களும் முறிந்து விழுகின்றன.
ஹோட்டன் சமவெளி காட்டுப்பகுதியில் அதிக காற்று வீசும் பொழுது மரக்கிளைகள் முறிந்து விழுவதனால் அப்பாதையில் நடந்து செல்லும் பாதசாரிகளும் அவதானத்துடன் செல்ல வேண்டும்.
அத்தோடு வீதியை ஒரு வழி போக்குவரத்தாக சீர் செய்துள்ள போதிலும், வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்படுவதாகவும் தெரியவருகின்றது.
குறித்த பகுதிகளுக்கு செல்வதற்கு ஒரே ஒரு பஸ் சேவை ஈடுப்பட்டுள்ளதுடன், அதிக மண்சரிவு காரணமாக குறித்த பஸ் சேவை ஒஹிய புகைியரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பஸ்ஸிலும், புகையிரதத்திலும் செல்லும் சுற்றுலா பிரயாணிகள் அவ்விடத்திலிருந்து சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள ஹோட்டன் சமவெளி மற்றும் உலக முடிவு ஆகியவற்றை பார்வையிடுவதற்கு குறித்த வீதியே பயன்படுத்த வேண்டியுள்ளது.
ஆகையால் மாற்று வழிகள் இன்மையால் பயணிகள் நிதானத்துடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

(க.கிஷாந்தன்)

வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை – வெலிமடை பிரதான வீதியின் வெலிமடை வேல்லேவெல பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 03 பேர் காயமடைந்துள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து 03.12.2017 அன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹியாங்கனையிலிருந்து வெலிமடையில் நிகழ்வு ஒன்றுக்கு பயணிகளை ஏற்றிச் சென்று இறக்கி விட்டு மீண்டும் வெலிமடையிலிருந்து மஹியாங்கனை நோக்கிப் பயணித்த போது வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
விபத்தில் பஸ் சாரதி உட்பட 03 பேர் காயமடைந்த நிலையில், வெலிமடை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் திம்புலபத்தனை போகவத்தை பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
போகவத்தையை சேர்ந்த 6 வயதான ராஜேந்திரகுமார் அஸ்வின் என்ற சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நீதவான் விசாரணகைளுக்காக சடலம் ஆற்றங்கரையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹட்டன் நீதவானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
நேற்று பிற்பகல் வீட்டிலிருந்து வெளியே சென்றதன் பின்னர் காணமற்போன சிறுவனை உறவினர்களும் பிரதேச மக்களும் இணைந்து தேடியுள்ளனர்.
இதனையடுத்து இன்று காலை 6.45 அளவில் சிறுவன் ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
ஆற்றங்கரையிலுள்ள கொய்யாமரத்திலிருந்து சிறுவன் தவறி வீழ்ந்திர்க்கக் கூடும் என தோட்ட மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் திம்புலபத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பதுளை மாவட்டத்தில் இருக்கும் 98 பள்ளிக்கூடங்கள் மண்சரிவு அபாயம் காணப்படும் மிக ஆபத்தான பிரதேசங்களில் அமைந்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததுள்ள அந்த நிலையத்தின் கட்டட ஆய்வாளர் கிரிஷான் சன்னக சுகதபால அண்மையில் தனது நிலையம் மேற்கொண்ட ஆய்வின்போது இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
இதன்படி சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்கள் பதுளை மாவட்டத்தில் ஆளிஹெல பதுள்ள, கண்தேகேட்டிய, சொரனாதொட்ட, ஹெல்ல, ஹப்புதலே, பெரகல, வெளிமட மற்றும் ஊவா பரணகம ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்குள் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனவே சம்பந்தப்பட்ட பள்ளிக் கட்டடங்களை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்வது அவசியமென்றும் அந்த அமைப்பு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இது குறித்து கல்வி அமைச்சர் அக்கிள விராஜ் காரியவசமிடம் பிபிசி கேட்டபோது சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்கள் தொடர்ப்பாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஆலோசனைகளைப் பெற்று விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை மேலும் கருத்து தெரிவித்துள்ள தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் ஆய்வாளர் கிரிஷான் சன்னக சுகதபால பதுளை மாவட்டத்தில் 29,000 க்கும் மேற்பட்ட கட்டடங்கள் மண்சரிவு அபாயம் காணப்படும் மிக ஆபத்தான பகுதிகளில் அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
அவற்றுள் 28,040 வீடுகள் 160 அரச நிறுவனங்கள் 691 வியாபார நிறுவனங்கள் மற்றும் 98 வழிபாட்டு கட்டடங்கள் அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுரா பிரியதர்ஷன யாப்பாவிடம் கேட்டபோது பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் மிக அதிகமாக காணப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் கட்டடங்களை அகற்றும் திட்டத்தை விரைவில் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கான மாற்று நிலங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் காணி அமைச்சிடம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தின் மண்சரிவு அபாயமுள்ள வலயங்களில் 29,000 – இற்கும் அதிகமான கட்டடங்கள் காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
அவற்றில் 98 பாடசாலைகளும் அடங்குவதாக நிறுவகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பதுளை மாவட்டத்திலுள்ள 13 பிரதேச செயலகப் பிரிவுகளில் இந்த கட்டடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.
பதுளை, ஹாலி எல, ஹப்புத்தளை, வெலிமடை உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளிலேயே இந்த அபாய நிலை காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.
பதுளை மாவட்டம் எல்ல பிரதேச செயலகத்திற்குட்பட்ட கினலன் தமிழ் வித்தியாலய மாணவர்கள் மண்சரிவு அபாயத்திற்கு மத்தியில் கல்வியைத் தொடர்கின்றனர்.
மலைப்பாங்கான பகுதியில் இந்த பாடசாலை அமைந்துள்ளதுடன், மழைக்காலங்களில் மிகுந்த அச்சத்துடன் மாணவர்களும் ஆசிரியர்களும் கற்றல், கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, ஹாலி எல பிரதேச செயலகத்திற்குட்பட்ட ரொஸட் தமிழ் வித்தியாலயமும் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.
இந்நிலையில், மழை வீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதால், மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளுக்கான அதிகாரிகளை நியமிக்கத் தீர்மானித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்தது.
200-க்கும் அதிக மழை மானிகளை தேவையான பகுதிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

(க.கிஷாந்தன்)

வெலிமடை அம்பகஸ்தோவ நகரில் உடப்புஸ்ஸலாவை வெலிமடை பிரதான வீதியை மறித்து மக்கள் 19.10.2017 அன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வந்தனர்.

ஊவா பரணகமை குமாரபட்டி கிராம சேவகர் பிரிவிலுள்ள வல்கணடிய குளத்தின் எல்லையில் சுமார் 100 வருடங்களுக்கும் அதிக காலமாக வசித்து வரும் தம்மை பிரதேச செயலாளரின் தன்னிச்சையான தீர்மானத்தின்படி வெளியேற்ற முற்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற உத்தரவிற்கமைய அப்பகுதியில் உள்ள 4 வீடுகளை மாத்திரம் குறித்த பகுதியை விட்டு அகற்றுவதற்கு அனுமதி கிடைத்துள்ள போதிலும், பிரதேச செயலாளர் நீதிமன்ற அனுமதியற்ற மேலும் சில வீடுகளை அகற்றியுள்ளதாகவும், இதனால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

டயர்களை எரித்து சுலோகங்களை ஏந்தியவாறு, கோஷங்களை எழுப்பி மக்கள் சுமார் 2 மணித்தியாலயங்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)

தீபாவளி பண்டிகை நாளை (18.10.2017) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தீபாவளியை முன்னிட்டு இன்று (17.10.2017) அட்டனில் வர்த்தக நிலையங்களில் மக்கள் கூட்டம் சாதாரண அளவில் காணப்பட்டமையை காணக்கூடியதாக இருந்தது. இதன்போது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர். இரவு பகலாக பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கொழும்பிலிருந்து அட்டன் மற்றும் மலையகத்தில் உள்ள பிரதான நகரங்களுக்கு விசேட பஸ் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் பொருளதார ரீதியாக பெருமளவு பாதிக்கப்பட்ட இந்நிலையில் தீபாவளி முற்பணமாக 6500 ரூபா வழங்கப்பட்ட போதிலும், மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படும் என கூறிய போதிலும் கம்பனிகள் வழங்கப்படாத நிலையில் இம்மக்கள் குடும்பங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத அளவிலும் இன்று அட்டன் நகரில் காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடதக்கது.


எம்.செல்வராஜா                             
பதுளை மாவட்டத்தில், 70 சதவீதமான பகுதிகள் மண்சரிவு மற்றும் நிலம் தாழிறங்கும் நிலையிலுள்ளதெனவும் எனவே, இவ்வாறான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் அனர்த் நிலைமைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறம், பதுளை மாவட்டச் செயலாளர் நிமால் அபயசிறி கோரிக்கை விடுத்துள்ளார்.
பதுளை மாவட்ட பிரதேச செயலகத்தில், நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் கூறிய அவர்,
“பதுளை மாவட்டத்தின் பெரும்பகுதி, அனர்த்தம் ஏற்படும் பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், எழுபது சதவீதமான பகுதிகள், மண்சரிவு மற்றும் நிலம் தாழிறங்கும் நிலையிலுள்ளமைக் கண்டறியப்பட்டுள்ளன.
“பதுளை மாவட்டத்தின் 310 கிராம சேவையாளர் பிரிவுகளில், 6,188 குடும்பங்கள், அனர்த்தம் ஏற்படும் பகுதிகளில் தொடர்ந்தும் வசித்து வருகின்றனர். இக்குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியேறுமாறு, அனர்த்த அறிவிப்புகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
“இவ் அறிவுறுத்தலுக்கு அமைய இடம்பெயரும் குடும்பமொன்றுக்கு, 12 இலட்சம் ரூபாய் வரை,  இழப்பீடுகளை  வழங்குவதற்கும் ஏற்பாடுகளையும், மேற்கொண்டு வருகின்றோம்.
“தற்போது, பதுளை மாவட்டத்தில் மழை வானிலை நீடித்து வருவதால், மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கும்படியும், மேட்டுநிலங்களில் வாழ்பவர்கள் மண்சரிவு மற்றும் நிலம் தாழிறங்கும் விடயங்களிலும், தாழ் நிலங்களில் இருப்பவர்கள் வெள்ள அபாயங்களிலிருந்தும் மிகுந்த எச்சரிக்கைகளுடன் இருக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
“அனர்த்த முன்னெச்சரிக்கை விடுவிக்கப்பட்ட பகுதி மக்கள், மாவட்டச் செயலகத்தால் விடுவிக்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்”  என்று அவர் மேலும் கூறினார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.