Showing posts with label Western. Show all posts

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கட்டுநாயக்க நோக்கிய திசை தற்காலிகமாக மூடப்படவுள்ளது. 

அதன்படி பேலியகொட சுற்றுவட்டத்தில் இருந்து கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதிக்கு உள்நுழையும் பகுதி எதிர்வரும் 04ம் திகதி முதல் 20ம் திகதி வரையில் மூடப்பட உள்ளது. 

இதனால் சாரதிகளுக்கும் பொது மக்களுக்கும் ஏற்படுகின்ற அசௌகரியங்களை தடுப்பதற்காக மாற்று வழிகளை கையாளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

புதிய களனி பாலம் அமைக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் இவ்வாறு போக்குவரத்து தடை செய்யப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தகுதி வாய்ந்தவர் இல்லை என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

நேற்று (22) களனி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கோட்டபய ராஜபக்ஷ தற்போது அரசாங்க உத்தியோக்கதர் ஒருவர் இல்லை எனவும் அவர் மக்கள் தற்போது எந்த ஒரு சேவையையும் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தனது பாதுகாப்பிற்காக 17 பாதுகாப்பு உத்தியோகத்தர்களே வழங்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இதுவரையில் 25 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இதேவேளை பொலிஸ் மா அதிபருக்கு முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நியாயமான விசாரணை ஒன்றை மேற்கொண்டு உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேருவளை பிரதேசத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற படகு ஒன்று கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துள்ளானதில் காணாமல் போன இருவரையும் தேடும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அகில இலங்கை பொது மீன்பிடி சங்கம் கூறியுள்ளது. 

மீன்பிடிக்க சென்ற படகுடன் மோதி கப்பல் சம்பந்தமாக விசாரணை செய்வதற்கு அரசு இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே கூறினார். 

காலி பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் கூறினார். 

அண்மையில் பேருவளை பிரதேசத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற படகு ஒன்று கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துள்ளானதில் நால்வர் உயிரிழந்ததுடன் இருவர் காணாமல் போயுள்ளனர்.

வத்தள, உஸ்வெடகெய்யாவ கடற்கரை பகுதியில் நேற்று காலை முதல் எண்ணை படிவுகள் பாரிய அளவில் மிதந்து கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றனர். 

எரிபொருள் கப்பலில் இருந்து முத்துராஜவெல முனையத்திற்கு எரிபொருள் எடுத்துச் செல்லும் குழாய் ஒன்றில் கசிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் தான் இவ்வாறு எண்ணை படிவுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று (08) காலை குறித்த குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் தெரியவந்துள்ளதுடன் அதனை திருத்தம் செய்வதற்கு 3 நாட்கள் செல்லும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார் 

குறித்த திருத்த வேலை காரணமாக எவ்வித எரிபொருள் தட்டுப்பாடுகளும் ஏற்படாது எனவும் சூழல் பாதிப்புக்களை குறைத்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

சுமார் 25 டொன் எரிபொருள் இவ்வாறு கசிவடைந்துள்ளதாக கடல்சார் சுற்றுச்சூழல் ஆணையத்தின் தலைவர் ரியல் அத்மிரல் ரோஹன பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பேபுரூக் பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டிடமொன்றில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு, தீயணைப்பு பிரிவு கூறியுள்ளது. 

எவ்வாறாயினும் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், அப்பிரதேசத்தில் பாரிய புகைமூட்டங்களை காணக்கூடியதாக உள்ளது. 

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொள்ளைச் சம்பவம் ஒன்று தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

களுத்துறை பாலத்திற்கு அருகில் வைத்து இவர்கள் மூவரும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். 

பாணந்துறை வலய குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் காண்ஸ்டபிள்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள கடற்படைப் புலனாய்வு அதிகாரியான நேவி சம்பத் எனப்படும், லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சிக்கு கடற்படை நிதியில் இருந்து 5 இலட்சம் ரூபா வழங்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் கைது செய்யப்பட்ட நேவி சம்பத் நேற்று இரண்டாவது தடவையாக கோட்டை நீதிவான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட போது,, ஓகஸ்ட் 29ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று நீதிமன்றில் முன்னிலையாகிய குற்றப் புலனாய்வு அதிகாரிகள், நேவி சம்பத் போலியான ஆவணங்களைக் கொடுத்து, தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு என்பனவற்றைப் பெற்று, 2017 ஏப்ரல் மாதம் மலேசியாவுக்குச் சென்று மறைந்திருந்தார் என்று தெரிவித்தனர்.
பின்னர் இவர் கடந்த மார்ச் மாதம், நாடு திரும்பி தொம்பே பகுதியில் உள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.
சிறிலங்கா துறைமுக அதிகாரசபையிடம் வாடகைக்குப் பெற்ற இரண்டு வாகனங்களை பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு வந்திருந்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேவி சம்பத் மலேசியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு, சிறிலங்கா கடற்படையின் உயர் அதிகாரி ஒருவர் கடற்படை நிதிக் கணக்கில் இருந்து, 5 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளார் என்றும் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு பற்றிய விபரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்குமாறு இலங்கை வங்கிக்கு உத்தரவிட்ட நீதிவான், நேவி சம்பத் போலி அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகியவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு உதவிய எந்தவொரு அதிகாரியையும் கைது செய்யுமாறும் உத்தரவிட்டார்.

வாத்துவை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது திடீரென சுகயீடமடைந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

திடீரென சுகயீடமடைந்த நான்கு பேர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரும் கெஸ்பேவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளது. 

வாத்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு தர நிர்ணயத்திற்கான சர்வதேச அமைப்பின் நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு படை வீரர்களுக்கு தேவையான மருத்துவ தேவைகளுக்கு வழங்கப்பட்ட சேவைகளுக்காக நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போது இச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

இலங்கை தர நிர்ணய நிலையத்தினால் உறுதிப்படுத்தப்பட்டு இராணுவ வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட இச்சான்றிதழை (ISO 9001 - 2015/SLSI ISO 9001 - 2015) இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனநாயக, தர நிர்ணய நிலையத்தின் தலைவர் பந்துல ஹேரத் மற்றும் தர நிர்ணய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், வைத்தியர். சுசந்திகா சேனாரத்ன ஆகியோரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். 

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, 5 கிலோமீற்றர் தூரத்துக்குள் பட்டங்களை பறக்கவிடும்போது மிகவும் அவதானமாக இருக்குமாறு விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
விமான நிலையங்களுக்கு மிகவும் அண்மையில், பட்டங்களை பறக்கவிடுவதனால், விமானங்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதென குறிப்பிட்டுள்ள அந்த நிறுவனம், அது சட்டவிரோதமானதாகும் என்றும் தெரிவித்துள்ளது.

புளத்சிங்கள பிரதேசத்தில் மிளகாய் தூளை வீசி தாக்கிவிட்டு பணக் கொள்ளை நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் தன்னியக்க இயந்திரத்திற்கு நிரப்புவதற்காக எடுத்து வரப்பட்ட சுமார் 20 மில்லியன் ரூபா பணமே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் குறித்த தனியார் நிறுவனத்தின் வாகன ஓட்டுனரையும் பாதுகாவலனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹொரணை, வகவத்தை பிரதேசத்தில் இரண்டு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 

களுகங்கையில் நீராடச் சென்று இரண்டு பேரே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

பஸ்ஸர, வத்துயாய மற்றும் உடபுசல்லாவ, ஹோர்டன்வத்தை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இரண்டு பேரே காணாமல் போயுள்ளனர். 

காணாமல் போயுள்ள இரண்டு பேரையும் தேடும் பணிகள் கடற்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

(அப்துல்சலாம் யாசீம்)

சீனா மக்கள் விடுதலை இரானுவத்தின் 91வது ஆண்டு விழா கொழும்பு Shangri La Hotel இல் (27)நேற்று நடை பெற்றது.

அந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம சீனா தூதுவர் He Mr.Chang Xueyuan அவர்களுக்கு கௌரவ விருதினையும் வழங்கி வைத்தார்.

இதன் போது ஆளுநரின் மகள் வைத்தியர் டில்சானி போகொல்லாகமவும் கலந்து கொண்டார்.

லண்டன் செல்வதற்காக விமானத்திற்கு ஏறிய சந்தர்ப்பத்தில் வணக்கத்திற்குரிய உடுவே தம்மாலேக தேரர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளார். 

வெளிநாடு செல்வதற்கு நீதிமன்ற தீர்ப்பில் வழங்கப்பட்ட திகதி பற்றிய சர்ச்சை காரணமாகவே அவர் இவ்வாறு விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளார். 

லண்டனில் இவ்வார இறுதியில் நடைபெற உள்ள சொற்பொழிவு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு செல்வதற்காக தம்மாலேக தேரர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 

இதன்போது வெளிநாடு செல்ல அனுமதி இல்லை என விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின்னர் அவர் விமானத்தில ஏற்றப்பட்டுள்ளார். 

பின்னர் விமானம் செல்வதற்கு சிறிது நேரம் இருந்த போது மீண்டும் நீதிமன்ற தீர்ப்பில் வழங்கப்பட்ட திகதி பற்றிய சர்ச்சை இருப்பதாக தெரிவித்து அவர் மீண்டும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளார். 

அவர் மறுபடியும் விகாரைக்கு வந்துள்ளதுடன் அவருடைய சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதாகவும் அவர் அத தெரண செய்திப் பிரிவிடம் தெரிவித்துள்ளார். 

இந்த பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு நாட்களில் தீர்வு கண்டு பின்னர் வெளிநாடு செல்ல எதிர்பார்ப்பதாகவும், பெறுமையாக இதனை தாங்கிக் கொள்ளும் சக்தி இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு - மெலிபன் வீதியில் அமைந்துள்ள ஐந்து மாடி கட்டிடத்தின் நான்காம் மாடியில் உள்ள விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தின் களஞ்சியசாலையில்  திடீரென தீ பரவியதால் அப் பகுதியில் சற்று பதற்ற நிலை தோன்றியுள்ளது.

தீயணைப்பு துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து தீயிணை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.
தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
விளையாட்டு பொருட்கள் விற்பனை  நிலையத்தின் களஞ்சியசாலை முற்றாக தீயில் கருகியுள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 
மேலும்இச்சம்பவத்தின் போது உயிராபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும்  பொலிஸார் தெரிவிக்கின்றனர். 
குறித்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஜூலை மாதம் 25 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை கொழும்பின் சில பகுதிகளுக்கு மின்சாரத் தடை ஏற்படும் என மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

132 கிகா வெட் மின் கட்டமைப்பில் அவசர திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இந்த மின்சாரத் தடை ஏற்படும் எனவும் மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

மேலும், கொழும்பு 03, 04, 05, 07 மற்றும் 08 ஆகிய பகுதிகளுக்கு ஜூலை 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரத் தடை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு மேலதிகமான மேற்கூறிய பகுதிகளுக்கு, ஜூலை 25 முதல் ஜூலை 31 ஆம் திகதிகளில் அவ்வப்போது மின்சாரத் தடை ஏற்படும் எனவும் மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்காவுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று இடம்பெறுகின்றது. 

அதன்படி இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. 

காலியில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 278 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கை அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை கூறத்தக்கது.

கம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நாளையதினம் 16 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது. 

அத்தியவசிய திருத்தப் பணி காரணமாக நாளை (15) காலை 08.00 மணி முதல் நள்ளிரவு வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது. 

அதன்படி களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல மற்றும் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள் மற்றும் பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய நகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வழங்கல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட உள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று அதிகாலையில் வீசிய பலத்த காற்று காரணமாக 153 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய ஹோமாகம பிரதேசத்தில் 75 வீடுகளும், தெஹிவளையில் 15 வீடுகளும், இரத்மலானையில் 20 வீடுகளும், பிலியந்தலையில் 5 வீடுகளும், மஹரகமயில் 15 வீடுகளும், கெஸ்பேவயில் 15 வீடுகளும், மொரட்டுவையில் 7 வீடுகளும், ஏனைய பிரதேசங்களில் சில வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் ஊடக பேச்சாளர் பிரதிப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
அனர்த்த நிலைமை தொடர்பில் ஏதாவது சிக்கல் இருந்தால் 117 இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.பாதிப்பு ஏற்பட்ட வீடுகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் விரைவாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக மத்திய நிலையத்தில் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.