சந்திரிகா தலைமையில்,புதிய கட்சி?


முன்னாள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க புதிய தேசியக் கட்சி ஒன்றை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தின் மத்தியில் சந்திரிகா இந்த முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கை அரசியல் விரக்தியிலிருந்தவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கட்சி உருவாக்கத்துக்காக முன்னணி விளையாட்டு வீரர்கள் சிலருக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.
மஹிந்த ராஜபக்ஷ தரப்பிலிருந்து வெளியேறி, நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன தெரிவாகியதன் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அவர் தலைமையில் சீரமைப்பதற்கு சந்திரிகா ஒத்தாசை புரிந்துவந்தார்.
எனினும் தற்போது மைத்திரிபால சிறிசேன மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ அணியினருடன் கைகோர்த்துள்ள நிலையில் சந்திரிகாவின் பரம்பரைக் கட்சி தொடர்பில் அவர் கவலை கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதன் பின்னர் சந்திரிகா பொதுவெளியில் எதுவுமே கூறாது இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் மாதுலுவாவே சோபித தேரரின் நினைவு தினத்தில் கலந்துகொண்ட சந்திரிகா, தொடர்ந்தும் நாட்டில் நீதியான ஒரு ஆட்சி வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதை எடுத்துக்காட்டியுள்ளது. இதன் பின்னணியிலேயே புதிய தேசியக்கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. (ஸ)