சுஷ்மா ஸ்வராஜ் உடனான உணர்ச்சிமிகு உரையாடலை பகிர்ந்த மூத்த வழக்கறிஞரான ஹரிஷ் சால்வே

நேற்று மரணமடைந்த இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடன், அவர் இறப்பிற்கு சில மணி நேரங்களுக்கு முன் தாம் நடத்திய உணர்ச்சிமிகு உரையாடல் குறித்து பகிர்ந்துள்ளார் மூத்த வழக்கறிஞரான ஹரிஷ் சால்வே.
இந்திய உளவாளி என்று பாகிஸ்தானால் குற்றச்சாட்டப்பட்ட குல்பூஷன் ஜாதவின் வழக்கில், சர்வதேச நீதிமன்றத்தில், இந்தியாவின் சார்பாக வாதிட்டதற்காகவே, அந்த ஒரு ரூபாய் சம்பளத்தை பெறுவதற்காக காந்திருந்தார் மூத்த வழக்கறிஞரான ஹரீஷ் சால்வே என்பது குறிப்பிடத்தக்கது.
சுஷ்மா மரணம் குறித்து பேசிய மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, நேற்று மாலை சுஷ்மாவுடன் தான் நடத்திய தொலைபேசி கலந்துரையாடல் குறித்து டைம்ஸ் நவ் செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்டார்.
இதில் அவர், "அவரின் மரணச் செய்தி எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவரின் மரணம் இந்தியாவிற்கு பெரிய இழப்பு. நான் அவருடன் மாலை 8.50 மணியளவில் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்னேன். அது மிகவும் உணர்ச்சி மிகுந்த உரையாடலாக இருந்தது."
"நீங்கள் நாளை என்னை வந்து சந்தியுங்கள். நீங்கள் வெற்றி பெற்ற வழக்கிற்காக நான் உங்களுக்கு ஒரு ரூபாய் சம்பளம் அளிக்க வேண்டியுள்ளது என்று கூறினார். நான் அந்த மதிப்புமிக்க பணத்தை அவரிடமிருந்து பெற வேண்டும் என்றிருந்தேன். நாளை 6 மணிக்கு வந்து சந்திக்குமாறு அவர் என்னிடம் கூறியிருந்தார். இந்தியாவின் மிகப்பெரிய தலைவர்களுள் ஒருவராக அவரும் இருந்தார்," என்று நினைவுகூர்கிறார் சால்வே.
முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ் நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பிறந்த சுஷ்மா சுவராஜுக்கு 67 வயது.
உலக அளவில் பல தலைவர்கள் அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் மறைவு குறித்த செய்தி வெளியானவுடன், அவர் கடைசியாக பதிவிட்ட ட்வீட் பலராலும் பகிரப்பட்டது.


Advertisement