வெள்ளை மணல் பிரதேச கொலையாளிக்கு மேன் முறையீட்டிலும் தண்டனை உறுதியானது


























( அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-வெள்ளை மணல் பகுதியில் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளியை எதிர்வரும்  செப்டம்பர் மாதம் 03ம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்துள்ளார்.


இக்கட்டளையினை சிறைச்சாலை அத்தியட்சகருக்கு  இன்று (08) வியாழக்கிழமை விடுத்துள்ளார். 

2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் திகதி சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளை மணல் பகுதியில் தாஜூதீன் சமூன்  என்பவருக்கு மரணம் விளைவித்தமை தொடர்பிலும் இன்னும் சிலருக்கு காயங்களை விளைவித்தமை தொடர்பிலும் திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 2009 பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி முதலாவது சந்தேகநபரான ஷரீப்தீன் முஹம்மட் பௌசர் (41வயது) என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு பிழையானது என தெரிவித்து அவருடைய தீர்ப்பிற்கு எதிராக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு  வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் கொலை குற்றவாளியான சரீப்தீன் முகம்மட் பௌசர்  தாக்கல் செய்த வழக்கினை  பரிசீலனை செய்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு சரியானது என உறுதிப்படுத்தியது. 

இந்நிலையில் குறித்த மேல் முறையீட்டு தீர்ப்பை வாசித்து காண்பிப்பதற்காக குறித்த எதிரியை எதிர்வரும் செப்டம்பர் மாதம் மூன்றாம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கட்டளையிட்டுள்ளார். 

குறித்த கொலை குற்றவாளி தற்பொழுது வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை அனுபவித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.