அரிய வகை மனித குரங்கான #ஹைனன்கிப்பான்


அழிவின் விளிம்பில் உள்ள, உலகின் மிக அரிய வகை மனித குரங்கான ஹைனன் கிப்பான் இனத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபடத் தகுதியுள்ள ஓர் இணை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த இனத்தைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கைக் கீற்று துளிர்விட்டுள்ளது.

காடழிப்பு, வேட்டை ஆகிய காரணங்களால் இந்த வகை மனிதக் குரங்கு தற்போது சீனாவில் உள்ள ஹைனன் தீவிலுள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.

1950களில் எடுத்த கணக்கெடுப்பின்படி உலகில் 2000 கிப்பான் குரங்குகள் மட்டுமே இருந்தன. ஆனால் 1970களில் 10க்கும் குறைவான கிப்பான் குரங்குகள் மட்டுமே இருந்தன என்று அப்போதைய கணக்கெடுப்பு காட்டியது.

ஆனால் இப்போது சமீபத்திய கணக்கெடுப்பின்படி 30க்கும் மேற்பட்ட கிப்பான் குரங்குகள் ஐந்து குடும்பங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றன.

பல தசாப்தங்களாக வேலை செய்து ஹைனன் கிப்பான் பாதுகாப்பு திட்டத்தை நடத்தி வரும் கடூரி பண்ணை மற்றும் ஹாங்காங்கின் தாவிரவியல் பூங்காதான் குரங்குகளின் எண்ணிக்கை முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தன.

ஹைனன் மழைக்காடுகள் இந்த அழகிய விலங்கையும் அதன் பாடலையும் இழந்தால் எப்படி இருக்கும் என என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்கிறார் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஃபிலிப் லோ.

மரத்தின் உச்சியில் சென்று இங்குமங்கும் தாவுவதும், மிகவும் சத்தமான குரல் எழுப்பி பாடி தங்கள் பகுதி என்று உணர்த்துவதும் கிப்பான் குரங்குகளின் திறனாகும். இனப்பெருக்கத்தில் ஈடுபட்டுள்ள இணை தங்களுக்குள் இருக்கும் பிணைப்பை மேம்படுத்த சேர்ந்து பாடும்.

கடந்த ஆண்டு இரண்டு கிப்பான் குரங்குகள் சேர்ந்து பாடுவதை காட்டிற்கு அருகில் வாழும் கிராம மக்கள் கேட்டுள்ளனர்.

அதன் பின் ஒரு ஆண் கிப்பானும் ஒரு பெண் கிப்பானும் சேர்ந்து பாடுவதை பார்த்துள்ளனர். அப்போது அவை இரண்டுக்கும் நடுவில் நல்ல நிலையான பிணைப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

கிப்பான் குரங்குகளின் குடும்பத்தில் ஒரு ஆண் குரங்கு இரண்டு பெண் குரங்குகள் மற்றும் அதன் குட்டிகள் இருக்கும். காட்டின் வேறு பகுதியில் ஐந்தாவதாக இனப்பெருக்கத்தில் ஈடுபடும் இணையை கண்டறிந்தது மிக முக்கியமானதாகும்.

(கோப்புப்படம்)படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image caption(கோப்புப்படம்)

இந்த புதிய இணை கிப்பான் வகையை சேர்ந்ததாக இருப்பதால் அழியும் நிலையிலிருந்து கிப்பான் வகை மீண்டு வரும் என்ற நம்பிக்கை வளர்கிறது என்கிறார் ஃபிலிப் லோ. இந்த நல்ல விஷயம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மற்றவர்களுக்கு ஒரு ஊக்கமாகவும் வெற்றியாகவும் அமையும் என்கிறார் அவர்.

இந்த மனித குரங்குகளை பாதுகாப்பது, கண்காணிப்பது அவைகளின் நடவடிக்கையையும் வாழ்க்கை முறையையும் ஆராய்வது, பல மரங்களை வளர்த்து அவற்றிற்கு உணவும் தங்குமிடமும் அளிப்பது போன்றவை இந்த பாதுகாப்பு திட்டத்தில் அடங்கும்.

உலகம் முழுவதும் கிட்டதட்ட 20 கிப்பான் வகைகள் வடகிழக்கு இந்தியாவிலிருந்து போர்னியோ வரை உள்ளன. இந்த 20 வகைகளும் தற்போது காடுகளை அழிப்பது, வேட்டையாடுவது மற்றும் சட்டவிரோத வர்த்தகத்தால் அழியும் நிலையில் உள்ளன.

இரண்டு வகையான கிப்பான்கள் சமீபத்தில் சீனாவில் இருந்து காணாமல் போயின. ஹைனன் கிப்பான்களையும் சேர்த்து சீனாவை பிறப்பிடமாக கொண்ட பல வகை உயிரினங்கள் அழியும் நிலையில் இருப்பதாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் தெரிவிக்கிறது.