பொகவந்தலாவ தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்



 (க.கிஷாந்தன்)

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ தோட்ட தொழிலாளர்கள் 03.05.2021 அன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

1000 ரூபா கிடைத்ததில் இருந்து மேலதிக கொடுப்பனவு கிடைப்பதில்லை எனவும், வேலை நாட்கள் குறைக்கப்படுவதாகவும், தோட்ட அதிகாரிக்கு எதிர்ப்பு தெரிவித்துமே தொழிலாளர்கள் பொகவந்தலாவ அட்டன் பிரதான வீதியில் இருமருங்களிலும் நின்று இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கொரோனா வைரஸ் காரணமாக சமூக இடைவெளியோடு பதாதைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் சுமார் ஒரு மணித்தியாலயம் நடைபெற்றது.

இதன்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

தேனீருக்கு 5 நிமிடத்தை கூடுதலாக எடுத்தால் கூட கடுமையாக எசுகின்றனர். காலையில் இருந்து இரவு வரை வேலை வாங்குவார்கள். எந்த பயனும் இல்லை. எனவே தோட்ட அதிகாரி வேண்டாம்.

கிழமையில் மூன்று நாள் வேலை தருவதாக சொல்லி இரண்டு நாளே வேலை தருகின்றனர். கேட்கப்போன இளைஞர்களையும் பொலிஸில் நிறுத்தியுள்ளனர். அதற்கான நியாயம் வேண்டும்.

20 கிலோ கொழுந்தை பறிக்குமாறு கேட்கின்றனர். அப்படி பறிக்க முடியாது. 13 நாள் வேலை கூட இந்த மாதம் கிடைக்கவில்லை. ஆயிரம் ரூபா கொடுத்ததில் பிரயோசனம் இல்லை.

1000 ரூபா வழங்கப்பட்டதில் இருந்து 20 கிலோவை எடுத்தால் மாத்திரமே பெயர் என தோட்ட நிர்வாகம் கூறுகின்றது. கிழமையில் 3 நாள் வேலை மாத்திரமே வழங்கப்படுகின்றது. கேட்டதால் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆகவே இந்த முகாமையாளர் தேவையில்லை என கருத்து தெரிவித்தனர்.