இந்தியா vs பாகிஸ்தான்: ஆறே ஓவர்களில் தலைகீழாக மாறிய ஆட்டம்




 


இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் ஆறே ஓவர்களில் தலைகீழாக மாறிப் போனது. தொடக்கத்தில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பாகிஸ்தானுக்கு வழக்கம் போல் கேப்டன் பாபர் ஆசம் - விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் ஆகியோர் ஆபாத்பாந்தவன்களாக வந்து காப்பாற்றினர். ஆனால், இந்த ஜோடி பிரிந்த பிறகு ஆட்டம் தலைகீழாக மாறிப் போனது.

பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் ஆட்டம் முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. முடிவில் பாகிஸ்தான் அணி 43-வது ஓவரிலேயே 191 ரன்களுக்கு ஆல்ஆகிவிட, எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி ரோகித் அதிரடியால் சிரமமின்றி வெற்றி பெற்றது.

ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை என்ற வரலாறை இந்திய அணி இதன் மூலம தக்க வைத்துக் கொண்டது.

இந்தியா vs பாகிஸ்தான்

ரோகித் சர்மா சரவெடி ஆட்டம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 63 பந்துகளில் சதம் அடித்து உலகக்கோப்பையில் சாதனை படைத்த ரோகித் சர்மா, அதே பார்மை பாகிஸ்தானுக்கு எதிராகவும் தொடர்ந்தார். அவரது பேட்டில் இருந்து பவுண்டரிகளும், சிக்சர்களும் பறந்த வண்ணம் இருந்தன.

மறுமுனையில் நின்றிருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி 18 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 16 ரன் எடுத்திருந்த நிலையில் ஹசன் அலி பந்துவீச்சில் நவாஸிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அதனைத் தொடர்ந்து ரோகித் சர்மாவுடன் ஸ்ரேயாஸ் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார்.

36 பந்துகளில் ரோகித் சர்மா அரைசதம் அடித்து அசத்தினார். ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராகவும் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், நல்ல பார்மில் இருந்த அவர், 86 ரன்களில் அப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 63 பந்துகளை எதிர்கொண்ட அவர் 6 சிக்சர்களையும, 6 பவுண்டரிகளையும் விளாசியிருந்தார்.

இந்திய அணி வெற்றிக் கோட்டை நெருங்கும் இந்த வேளையில் ஸ்ரேயாஸ் - கே.எல்.ராகுல் ஜோடி விளையாடி வருகிறது.

இந்தியா vs பாகிஸ்தான்