148 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஜாக் காலிஸ் சாதனையை யாராலும் நெருங்க முடியாதது ஏன்?



 

(ஜக்கலிசுடன் கட்டுரையாளர்)

தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாக் காலிஸ் இன்று அரைசதம் அடித்திருக்கிறார்.பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என கிரிக்கெட்டின் அனைத்து ஏரியாக்களிலும் ஜொலித்த அவருக்கு இன்றோடு ஐம்பது வயது ஆகிறது.


சுமார் 19 ஆண்டுகள் சர்வதேச அரங்கில் விளையாடிய அவரது பயணத்தை எண்களின் வாயிலாக அலசுவோம். ஏனெனில், "நம்பர்களை வைத்துப் பார்த்தால் ஒரு முழுமையான கிரிக்கெட்டர் என்பதற்கு மிக அருகில் வருவது காலிஸ்தான்" என்று டிராவிட்டே கூறியிருக்கிறார்!



டெஸ்ட் கிரிக்கெட்டில் காலிஸ்

166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் காலிஸ், 55.37 என்ற சராசரியில் 13289 ரன்கள் குவித்திருக்கிறார். சச்சின், ஜோ ரூட், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்கு அடுத்து டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் குவித்தவர் இவர்தான்.


அதிக டெஸ்ட் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினுக்கு (51) அடுத்து 45 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.


"டெஸ்ட் பேட்டர் காலிஸை உடைப்பதென்பது சாதாரண விஷயமில்லை. எத்தனை திட்டங்கள் வேண்டுமானால் தீட்டுங்கள், நாளின் முடிவில் அவர் ஆட்டமிழக்காமல் களத்தில் நிற்பார்" என்று ஒருமுறை புகழ்ந்திருந்தார் ரிக்கி பாண்டிங். ஆனால், அவரது சாதனைகள் பேட்டிங்கோடு நின்றுவிடவில்லை.



ஜாக் காலிஸ்

148 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஜாக் காலிஸ் சாதனையை யாராலும் நெருங்க முடியாதது ஏன்?


பேட்டிங் போல் பந்துவீச்சிலேயும் காலிஸ் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். 32.65 என்ற சராசரியில் 292 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் அவர்.


அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் 43வது இடத்தில் இருக்கும் காலிஸ், ஹர்பஜன் சிங், இஷாந்த் ஷர்மா, ஜஹீர் கான், இஷாந்த் ஷர்மா, ஸ்வீட் ஹார்மிசன் போன்ற முன்னணி பௌலர்களுக்கு இணையான சராசரி வைத்திருக்கிறார்.


148 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10000 ரன்களுக்கு மேலும் 250 விக்கெட்டுகளுக்கு மேலும் எடுத்த ஒரே வீரர் காலிஸ்தான்.


ஏன், 5000+ ரன்கள் & 250+ விக்கெட்டுகள் என்ற பட்டியலில் இருப்பவர்களே மூவர்தான். அதில் காலிஸோடு இருப்பவர்கள் கபில் தேவ் மற்றும் சர் இயான் போத்தம் ஆகியோர் மட்டுமே.


இது மட்டுமல்ல, டெஸ்ட் போட்டிகளில் அதிக ஆட்ட நாயகன் விருதுகள் (23) வென்றவரும் இவர்தான். 9 முறை தொடர் நாயகன் விருது பெற்று, அஷ்வின் & முரளிதரன் (இருவரும் 11) இருவருக்கும் அடுத்து அந்தப் பட்டியலிலும் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் காலிஸ்.


ஜாக் காலிஸ்பட மூலாதாரம்,Graham Crouch-ICC/ICC via Getty Images

ஒருநாள் போட்டிகளில்...

ஒருநாள் ஃபார்மட்டைப் பொறுத்தவரை 328 போட்டிகளில் 44.36 என்ற சராசரியில் 11579 ரன்கள் விளாசியிருக்கிறார். அதிக ஒருநாள் ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் எட்டாவது இடம். அதேபோல் 31.79 என்ற சராசரியில் 273 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். இந்தப் பட்டியலில் 19வது இடம். தென்னாப்பிரிக்காவின் மிகச் சிறந்த பௌலராகக் கருதப்படும் ஆலன் டொனால்டை விடவும் அதிக விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார்.


ஆல்ரவுண்டராகப் பார்க்கும்போதும், ஒருநாள் போட்டிகளில் 5000+ ரன்களும் 250+ விக்கெட்டுகளும் எடுத்திருக்கும் ஐந்து பேரில் இவரும் ஒருவர்.


முன்பொருமுறை காலிஸின் ஒருநாள் போட்டி அணுகுமுறையைப் புகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங், "காலிஸ் ஒருநாள் கிரிக்கெட்டை செஸ் போட்டி போல் மாற்றிவிடுவார். வியூகங்கள் வகுப்பார், நிதானமாகக் காத்திருப்பார், கருணை காட்டமாட்டார். ஆர்ப்பாட்டமே இருக்காது. ஆனால், முடிவுகள் கிடைக்கும்" என்று கூறியிருந்தார்.


ஜாக் காலிஸ் சாதனையை 148 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாராலும் முறியடிக்க முடியாதது ஏன்? 

பட மூலாதாரம்,Carl Fourie/Gallo Images/Getty Images

மூன்று ஃபார்மட்களிலும் சேர்த்தால்?

கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு ஃபார்மட்களிலுமே 10,000 ரன்களுக்கு மேல் எடுத்தவர்கள் மொத்தமே ஆறு பேர் தான் - சச்சின், டிராவிட், பான்டிங், ஜெயவர்தனே, சங்கக்காரா, காலிஸ். இவர்களுள் பந்துவீச்சிலும் கலக்கியது சச்சினும், காலிஸும் மட்டும்தான்.


டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து ஃபார்மட்களிலும் சேர்த்து 25534 ரன்கள் (ஆறாவது இடம்) & 519 விக்கெட்டுகள் (31வது இடம்) எடுத்துள்ள இவர், அதிக 50+ ஸ்கோர்கள் (211) எடுத்ததில் ஐந்தாவது இடம் பிடித்திருக்கிறார்.


இவ்வளவு ஏன் ஐபிஎல் அரங்கிலும் கூட சிறப்பாகவே செயல்பட்டார். 2010 சீசனில் 572 ரன்கள் விளாசி இரண்டாம் இடம் பிடித்தார். 2012 சீசனில் 409 ரன்கள் குவித்ததோடு 15 விக்கெட்டுகளும் கைப்பற்றி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கியக் காரணமாக விளங்கினார்.


ஜாக் காலிஸ்பட மூலாதாரம்,Duif du Toit/Gallo Images/Getty Images

நீண்ட காலம் சீராக ஆடியவர்!

காலிஸ் இன்னும் அதிகளவு புகழப்படுவதற்கு இன்னொரு காரணம் அவர் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்பது.


வேகப்பந்துவீச்சைத் தேர்ந்தெடுக்கும்போதே கிரிக்கெட் வீரர்கள் காயத்துடனான போராட்டத்துக்கும் தயாராகிவிடுவார்கள். பேட்டர்கள் போல், ஸ்பின்னர்கள் போல் அவர்களால் அனைத்து போட்டிகளிலும் விளையாடிவிட முடியாது.


அதேபோல், எந்தவொரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராலும் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் விளையாடிட முடியாது. இன்றைய காலகட்டத்தில் ஹர்திக் பாண்டியா தொடங்கி ஆண்ட்ரே ரஸல் வரை அவர்கள் காயத்தோடு போராடுவதை பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம்.


ஆனால், சர்வதேச அரங்கில் 519 போட்டிகளில் விளையாடியிருக்கிறார் காலிஸ். அனைத்து ஃபார்மட்களிலும் சேர்த்து அதிக போட்டிகளில் விளையாடியவர்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.


சர்வதேச கிரிக்கெட்டில் 28903 பந்துகளை (3வது இடம்) சந்தித்திருக்கும் காலிஸ், பௌலராக 31258 பந்துகள் வீசியிருக்கிறார் (18வது இடம்). வக்கார் யூனுஸ், டேல் ஸ்டெய்ன், பிரெட் லீ போன்ற ஜாம்பவான் பௌலர்களை விடவும் அதிக பந்துகள் வீசியிருக்கிறார்.


மொத்தம் 60161 பந்துகளில் நேரடியாக காலிஸின் பங்களிப்பு இருந்திருக்கிறது. அதாவது சுமார் 10026 ஓவர்கள் அந்த 22 யார்டு பிட்சுக்கு நடுவே உழைத்திருக்கிறார்.


தொடர்ந்து போட்டிகளில் விளையாடியது மட்டுமல்லாமல், அந்தப் போட்டிகளில் அவர் சீரான செயல்பாட்டையும் கொடுத்திருக்கிறார். 1999 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் ஒரே ஒரு ஆண்டு மட்டும்தான் (2008) அவரது ஆண்டு பேட்டிங் சராசரி நாற்பதுக்கும் குறைவாக இருந்திருக்கிறது.


காலிஸ் பற்றி ஒருமுறை பேசிய இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கார, "தென்னாப்பிரிக்க அணிக்கு ஒரு டிராவிட்டும், கபில் தேவும் இருந்திருந்து, அவர்களை ஒன்றிணைத்தால் என்ன வருமோ அதுதான் காலிஸ். அவரது திறன், ஒழுக்கம், நீண்ட காலம் ஆடிய தன்மையெல்லாம் அசாத்தியமானது" என்று புகழ்ந்தார்.


ஃபீல்டிங்கிலும் அசத்துபவர்!

ஜாக் காலிஸ்பட மூலாதாரம்,Getty Images

பேட்டிங், பௌலிங் மட்டுமல்ல, காலிஸ் ஃபீல்டிங்கிலும் அசத்தும் முழுமையான 3D வீரர். சர்வதேச அரங்கில் அதிக கேட்ச் பிடித்தவர்கள் பட்டியலில் 338 கேட்சுகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறார் அவர்! இத்தனைக்கும் பெரும்பாலான கேட்ச்களை கடினமான ஸ்லிப் பகுதியில் நின்று பிடித்திருக்கிறார்.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் நிர்வாக இயக்குநரான ஜாய் பட்டச்சார்யா காலிஸின் ஃபீல்டிங் திறனை வெகுவாகப் பாராட்டி சில ஆண்டுகளுக்கு X தளத்தில் பதிவிட்டிருந்தார்.


அந்தப் பதிவில், "2011ம் ஆண்டு டெல்லிக்கு எதிரான போட்டியில் பௌண்டரி எல்லையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார் காலிஸ். அங்கு மூன்று முழு நீள டைவ்கள் அடித்து 3 பௌண்டரிகளைத் தடுத்தார் காலிஸ். அணியின் ஃபிசியோ அவருக்கு உதவி செய்வதற்காக கிளம்பியபோது வேண்டாம் என்று காலிஸ் மறுத்துவிட்டார். அந்தப் போட்டியில் கொல்கத்தா அணி 18 ரன்களில் வென்றது. டிரஸிங் ரூமில் காலிஸ் அவர் உடையைக் கழற்றியபோது அனைவரும் உரைந்து போனார்கள். ஏனெனில் உடல் முழுக்க காயம் பட்டிருந்தது. ரத்தம் ஒழுகியது. இளம் வீரர்கள் அர்ப்பணிப்பின் அர்த்தத்தை அன்று உணர்ந்து கொண்டார்கள்" என்று குறிப்பிடிருந்தார் ஜாய் பட்டாச்சார்யா.


இந்த நிகழ்வு நடந்தபோது காலிஸின் வயது 35.


ஓய்வுப் பிறகான சர்ச்சைகள்

ஓய்வு பெறும் வரை தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டுக்கு பெரும் பங்களிப்பைக் கொடுத்த காலிஸ், ஓய்வுக்குப் பிறகு சில சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார்.


2016ம் ஆண்டு இட ஒதுக்கீடு இலக்குகளை எட்டாததற்காக தென்னாபிரிக்க விளையாட்டு சங்கத்தை அந்நாட்டு அரசு கலைத்தது.


அதை விமர்சித்து அப்போது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார் காலிஸ். அது விமர்சனத்துக்குள்ளனதும், "நான் அரசியில் தலையீட்டைத்தான் விமர்சித்தேனே ஒழிய, சமத்துவத்துக்கு எதிராக கருத்து சொல்லவில்லை" என்று விளக்கம் கூறிவிட்டு அந்தப் பதிவை நீக்கினார்.


1995ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்காக அறிமுகம் ஆனவர் 2014 வரை சர்வதேச போட்டிகளில் பங்கேற்றார். சாதனைகள் பல படைத்திருந்தாலும், தென்னாப்பிரிக்க அணிக்காக ஒரு உலக கோப்பையை வெல்ல முடியாதது குறித்து எப்போதுமே வருந்தியிருக்கிறார்.


காலிஸைப் பற்றி சுருக்கமாகச் சொல்ல, ஜாம்பவான் பிரயன் லாரா ஒருமுறை சொன்னதையே பயன்படுத்தலாம் "ஒரு அணியில் பேட்டராக மட்டும் காலிஸால் இடம்பெற முடியும். ஒரு அணியில் பௌலராக மட்டுமே அவரால் இடம்பெற முடியும். ஒரு அணியில் ஸ்லிப் ஃபீல்டராக மட்டுமே அவரால் இடம்பெற முடியும். காலிஸ் அவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்".