சாய்ந்தமருதில் பொருத்தமற்ற இடத்தில் எருமை மாடுகள் வளர்ப்பு



 


நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது பகுதியில் மனித குடியேற்றத்திற்கு பொருத்தமற்ற இடத்தில் எருமை மாடுகள் வளர்க்கப்பட்டதால் அயல் வீட்டாருக்கு கடும் அசௌகரியங்களும் சுகாதாரத் தொந்தரவுகளும் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு எழுந்துள்ளது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்க்கு உட்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக அயல் வசிப்பிடத்தவர்களிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே. மதன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சாய்ந்தமருது பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுற்றுச்சூழல் பிரிவிற்கு பொறுப்பான சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் அதிகாரிகள் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் இணைந்து சம்பந்தப்பட்ட இடத்தில் திடீர் பரிசோதனை மேற்கொண்டனர்.

பரிசோதனையின் போது, குடியிருப்பு பகுதியின் மத்தியில் எருமை மாடுகள் வளர்க்கப்பட்டு, கழிவுகள் சரியான முறையில் அகற்றப்படாததன் காரணமாக துர்நாற்றம் மற்றும் கொசு பெருக்கம் உள்ளிட்ட சுகாதாரப் பிரச்சினைகள் உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக பொதுமக்கள் தொல்லை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பொதுச் சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் வளர்ப்பதை தவிர்க்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகள் எதிர்காலத்திலும் கண்டறியப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.