விடாமுயற்சியின் வெற்றியாளன் சரிகமப புகழ் சபேசன்



 



வி.சுகிர்தகுமார் 

இந்தியாவின் ZeeTamil தமிழ் தொலைக்காட்சி சரிகமப பாடல் போட்டி நிகழ்வின் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகியுள்ள கிழக்கு மாகாணத்தில் இருந்து கலந்து கொண்ட முதல் மைந்தன் சுகிர்தராஜா சபேசனுக்கு பலரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.


கிழக்கு மண்ணின் அம்பாரை மாவட்டம், திருக்கோவில், விநாயகபுரம் எனும் கிராமத்தில் பிறந்து இன்று நம்நாட்டினதும், பிறந்த மண்ணினதும் பெருமையினை உலகறியச் செய்துள்ள அந்த ஒப்பற்ற கலைஞனுக்கு உலகளாவிய ரீதியிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

1995.12.02ஆம் திகதி பிறந்த சபேசன்,  சுகிர்தராஜா ஜெயந்தி தம்பதிகளின் நான்கு பிள்ளைகளில் முதலாவது ஆண் பிள்ளை. 
முதலாம் தரம் தொடக்கம் க.பொ.த.சாதாரண தரம் வரை விநாயகபுரம் மகாவித்தியாலயத்தில் கற்றுக்கொண்ட இவர் திருக்கோவில் மெதடிஸ்த மிசன் தமிழ் மகாவித்தியாலயத்தில் உயர் தரத்தினை இசைத்துறை இணைந்ததான கலைப்பிரிவில் பயின்று மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டு ஆசிரியர்களதும் விரிவுரையாளர்களதும் வழிநடத்தலில் இசை நுண்கலையில் இளமானி பட்டம் பெற்றார். 

பட்டம் பெற்று பல வருடங்கள் கடந்தும் தொழில் கிடைக்கவில்லையே எனும் ஏக்கத்துடன் வாழ்ந்து வந்த சபேசன்; தாய் தந்தை குடும்பம் சகோதரர்கள் மற்றும் உறவுகளதும் வழிகாட்டலில் இசைத்துறையில்
சாதிக்க முடியும் என நம்பிக்கை கொண்டார்.

தனது தந்தை வழிவந்த கலைத்துறையின் நாட்டத்தால் இசைத்துறையின் மீது ஆர்வம் கொண்ட சபேசன் சிறுவயது முதலே ஆசிரியர்களது பயிற்சியினால் பாடும் திறமையினை பெற்றுக்கொண்டார். இதன் காரணமாக பாடசாலை கலைநிகழ்வுகள் ஆலயங்களின் உற்சவங்கள் பொது நிகழ்வுகளில் பாடி பலரது பாராட்டையும் பெற்றுக்கொண்டார். இதேநேரம் தனது தந்தை பாடகராக இருந்த அக்கரைப்பற்று ஜெயாலயா இசைக்குழுவிலும் ஆரம்பகாலத்தில் பாடி பின்னர் கிழக்கில் புகழ்பூத்த இசைக்குழுக்களிலும் பாடி தனது திறமையினை மேலும் வளப்படுத்தினார்.
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் சக்தி தொலைக்காட்சியில் நடாத்தப்பட்ட சக்தி சூப்பர் ஸ்டார் போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தினை பெற்று பெற்றோருக்கும் பிறந்த மண்ணிற்கும் பெருமை சேர்த்தார். இதன் பின்னராக இசைத்துறையில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய சபேசன் பல இறுவெட்டுகளிலும் பாடி புகழ் சேர்த்ததுடன் இந்தியாவில் உருவாக்கம் பெற்ற உலகப்பொது மறையான திருக்குறள் ஒலிப்பதிவிலும் தனது குரலால் குறள் ஒன்றை பாடி பதிவு செய்தார்.

இவரது இசைத்திறமை கண்டு கிழக்கு தொடக்கம் வடக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள இசைக்குழுக்களும் சபேசனை பாட அழைத்தது. சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திய இவரது புகழ் தேசிய ரீதியில் பரவியதுடன் அரசும் பல்வேறு அமைப்புக்களும் பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்தது.
தனது சொந்த விடாமுயற்சியும் பயிற்சியும் காரணமாக சரிகமப சீசன் 4 இல் முதல் முறையாக கலந்து கொண்டபோதும் பாடகர்களை தெரிவு செய்யும் சுற்றில் வாய்ப்பை இழந்தார். ஆனாலும் அவர் தனது முயற்சியை கைவிடவில்லை. குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு இசைத்துறையில் உள்ள நண்பர்களது வழிகாட்டுதலுடன் முயற்சியை தொடர்ந்தார்.

இதன் பயனாக யாருக்கும் சொல்லாமல் இந்தியா சென்று
 மீண்டும் சரிகமப சீசன் 5 இல் நுழைந்து தெரிவானபோது தனது உள்ளக்குமுறலை அழுகையாக வெளிப்படுத்தினார். அப்போது அவரை பலரும் விமர்சனம் செய்தனர். தனது தாய் நாட்டிற்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளதாகவும் வன்மத்தை கொட்டித்தீர்த்தனர். அப்போது கூட சபேசன் சளைக்கவில்லை. தன்மீது பாய்ந்த அம்புகளை எல்லாம் துறைத்தெறிந்து தனது இசைப்பயணத்தின் இலக்கை நோக்கி பயணித்தார்.

 இந்திய மண்ணின் ஜீ தமிழ் தொலைக்காட்சியின்  வாய்ப்பு, நடுவர்களதும் நிகழ்ச்சித்தொகுப்பாளரதும் ஆலோசனை , பயிற்றுவிப்பாளர்களது சிறந்த பயிற்சி,  அவரது இடைவிடாத முயற்சி, சக போட்டியாளர்களது அன்பு, 
இன மத பேதம் கடந்த இலங்கையிலும், இந்திய மண்ணிலும் உலகவாழ் மக்கள் அத்தனைபேரினதும் அரவணைப்பு இதற்கும் மேலாக பெற்றோர்களது ஆசிர்வாதம் இறையருள் ஆகியவற்றுடன் இன்று இறுதிச்சுற்றிற்கு தெரிவு செய்யப்பட்டு சர்வதேசத்தில் வாழும் அத்தனை மக்களையும் திரும்பி பார்க்கச் செய்துள்ளார்.
அதுபோல் இறுதிச்சுற்றிலும் டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டு நாட்டிற்கும் வீட்டிற்கும் புகழ் சேர்ப்பார் எனும் பெரு நம்பிக்கையோடு அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் பெருவரவேற்பளித்து  அவரது வெற்றியை கொண்டாடி மகிழ.

இதேநேரம் சபேசனுக்குரிய களத்தை சரியான நேரத்தில் அமைத்து கொடுத்த ஆதரவை வழங்கிவரும் இந்திய தமிழ் நாட்டு மண்ணிற்கும்,  ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கும்,  சரிகமப நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், இலங்கை மக்கள் சார்பில் நன்றி செலுத்துவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.