ஆக்கம்:எம்.வை.எம் யூசுப் இம்ரான் (ஆசிரியர்)BA (Hons), MA (Political Science) LLB (OUSL), AAL ®
மறைந்தது மருத்துவத்தின் முத்து
அம்பாறை மாவட்டத்தின் புகழ்பூத்த கல்முனை நகரில் மருத்துவத் துறையின் முத்தாக திகழ்ந்தவர்களில் டாக்டர் ஏ.எல்.எம். நஸீர் மறக்க முடியாத ஒருவர். டாக்டர் ஏ.எல்.எம். நஸீர் அவர்கள் 1958.02.01ம் திகதி உதுமாலெப்பை அஹமட் லெப்பை மற்றும் முஹம்மட் இப்றாஹீம் பாத்துமா ஆகியோருக்கு மகனாக பிறந்தார். குடும்பத்தின் முதல் வாரிசாக பிறந்த இவர் மருத்துவத் துறையின் முத்தாக உருவெடுத்தார்.
தனது ஆரம்ப கல்வியை கல்முனை அல் - அஸ்ஹர் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை கைதடி மத்திய மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை கல்முனை ஸாஹிரா கல்லூரியிலும் கற்ற டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் 1978ம் ஆண்டு மருத்துவத் துறையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவப் பட்டப் படிப்பினை முடித்த டாக்டர் ஏ.எல்.எம். நஸீர் இலங்கையின் சுகாதாரத் துறையின் முத்தாகத் திகழ்ந்தார்.
பின்னர் பதுளை பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 2012 முதல் 2016 வரையான காலப்பகுதியில் வைத்திய அத்தியட்சகராகவும் பணிபுரிந்துள்ளார். இவரது காலப்பகுதியில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரத்த வங்கியை கொண்டு வருவதில் பங்களிப்பு செய்துள்ளார்.
இவர் திகழ்ந்தார்.
கடந்த 2004 ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி ஆழிப்பேரலையின் பின்னர் கல்முனையை கல்வி, வர்த்தகம் மட்டுமன்றி சகல துறைகளிலும் மீள கட்டியெழுப்பும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்ட கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்துக்குமான சபையின் (Kalmunai Development and Management Council ) ஸ்தாபக தலைவராகவும் கல்முனை ஸகாத் அமைப்பின் ஸ்தாபக தலைவராக கடந்த 2000ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை சுமார் 18 ஆண்டுகளாக கடமையாற்றி கல்முனையின் அபிவிருத்திக்காக பெரும் பங்காற்றிய பெருமகனை இன்று கல்முனை நகரம் இழந்து நிற்கின்றது.
டாக்டர் நஸீர் 1989ம் ஆண்டு பதுளையைச் சேர்ந்த பஹ்மிதா (நில அளவையாளர்) என்பவரை கரம் பிடித்தார். நுஸ்ஹா நஸீர் , நாதிரா நஸீர் , நவீட் நஸீர் ஆகியோரின் அன்புத் தந்தையும் காலம் சென்ற புவாட் இஸ்மாயில் மற்றும் கதீஜா தம்பதிகளின் மருமகனும் ஆவார். மேலும் ஹக்கீம் (பொறியியளாளர்) , அப்துல் சலாம் (ஓய்வுநிலை முகாமையாளர்) , சம்சுன் நிஹாரா , சித்தி பௌசியா மற்றும் மர்ஹூம் தமீம் (சென்ட்ரல் ஹார்ட்வெயார்) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
இன்று கல்முனை மாநகரம் வரலாற்றுப் பொக்கிஷமான டாக்டர் ஏ.எல்.எம். நஸீர் அவர்களை இழந்து நிற்கின்றது. டாக்டர் ஏ.எல்.எம். நஸீர் அவர்கள் 2025.11.14ம் திகதியன்று வெள்ளிக்கிழமை மாலை தனது ராஜகிரிய வீட்டில் திடீர் சுகவீனம் காரணமாக லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது தனது 67வது வயதில் வபாத்தானார்கள். அன்னாரது ஜனாஸா மறுநாள் 2025.11.15ம் திகதி சனிக்கிழமை கொழும்பு - 07 ஜாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் இழப்பு எம் மத்தியில் என்றுமே நிரப்ப முடியாத ஒரு பேரிழப்பாக இருக்கின்றது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகள் மற்றும் பாவங்களை பொறுத்து அவரின் நற்செயல்களை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயர்ந்த சுவர்க்கத்தை அவருக்கு வழங்குவானாக... ஆமீன்...


Post a Comment
Post a Comment