சுதந்திர தின ஒத்திகைகளிளால் இன்று முதல் விசேட போக்குவரத்து



இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட ஒத்திகைகள் காரணமாக இன்றிலிருந்து விசேட வாகனப் போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை காலி வீதியில், காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையும், சைத்திய வீதியிலும் பேக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் காலை 7.15 தொடக்கம் நண்பகல் 12 மணி வரை காலி வீதியின் கொள்ளுப்பிட்டி சந்தி தொடக்கம் காலி முகத்திடல் சுற்றுவட்டம் வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், பயணிகள் போக்குவரத்து பஸ் மற்றும் அலுவலக போக்குவரத்து சேவை என்பனவற்றுக்கு மாத்திரம் குறித்த வீதிகளில் அனுமதி வழங்கப்படும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
லோட்டஸ் வீதி, செரமிக் சந்தி தொடக்கம் பழைய பாராளுமன்றம் நோக்கிய வீதியில் காலை 8.30 தொடக்கம் நண்பகல் 12 மணிவரை வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த வீதியிலும் அலுவலக போக்குவரத்து சேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதி மாவத்தை, வங்கி வீதி சந்தி, பழைய பாராளுமன்ற சந்தி வரை காலை 8.15 முதல் நண்பகல் 12 மணி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தபடவுள்ளதுடன், குறித்த பகுதியில் அலுவலக போக்குவரத்து சேவைக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
இதனிடையே நாளை 31 ஆம் திகதி முதல் பெப்ரவரி இரண்டாம் திகதி வரை காலி முகத்திடலினூடாக பயணிக்கும் பஸ்கள், கனரக வாகனங்கள், உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் கொழும்பிற்குள் பிரவேசிக்கும்போது கொள்ளுப்பிட்டி சந்தியினூடாக லிபர்ட்டி சந்தி, பித்தளை சந்தி, ரீகல் சந்தி, செரமிக் சந்தி ஊடாக புறக்கோட்டைக்கு செல்ல முடியும்.
கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள் புறக்கோட்டை, செரமிக் சந்தி, பித்தளை சந்தி, நூலக சுற்றுவட்டம், லிபர்ட்டி சந்தி, ஆர்.ஏ. டி மெல் மாவத்தை ஊடாக காலி வீதிக்குள் பிரவேசிக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது