சவுதியில் ஷியாப் பள்ளிவாசல் மீது தாக்குதல்: மூவர் பலி




சவுதி அரேபியாவில் ஷியாப் பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறைந்து மூவர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சவுதியில் தொடர்ச்சியாக ஷியா பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள மெஹசின் நகரிலுள்ள இமாம் ரேசா பள்ளிவாசலில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலின் போது தற்கொலை குண்டுதாரி ஒருவர் தற்கொலை இடுப்புப் பட்டியை இயக்க முயன்றபோது, வழிபாடு செய்யவந்திருந்த ஒருவரால் தடுக்கப்பட்டார் என சமப்வத்தை நேரில் கண்ட ஒருவர் கூறுகிறார்.
தாக்குதல் நடத்திய மேலும் சிலருடன் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடுகள் நடத்துவதும், ஒருவர் கைது செய்யப்படுவதையும் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

சவுதி அரேபியாவிலுள்ள ஷியாக்களை முன்னரும், இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் அமைப்பு தாக்கியுள்ளது.

சுன்னி இனப் பெரும்பான்மையினரைக் கொண்ட சவுதி அரேபியாவுக்கு, ஷியா மக்கள் அதிகமாக இருக்கும் இரானுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

கடந்த டிசம்பரில் சவுதியில் இருந்த பிரபலமான ஷியா மதகுரு ஒருவருக்கு அங்கு மரண தண்டனை நிறைவேற்றபட்டிருந்தது.