இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியின் 149 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை நிறுத்தம்



எகிப்து நாட்டில் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியைச் சேர்ந்த 149 பேருக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனை குறித்த தீர்ப்பை நிறுத்தியுள்ள நீதிமன்றம், மறுவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
2013ஆம் ஆண்டில் கெய்ரோவுக்கு அருகில் உள்ள கெர்தஸா என்ற இடத்தில் ஒரு காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி, 11 அதிகாரிகளக் கொலைசெய்தாக இவர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.
2013ல் அதிபர் முஹம்மத் மோர்சி பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட பிறகு, இஸ்லாமியவாதிகளைக் கடுமையாக ஒடுக்கிவருகிறது எகிப்து.
இவர்கள் மீது கூட்டம்கூட்டமாக விசாரணை நடத்தி, நூற்றுக்கணக்கானவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த விசாரணை முறைக்கு மனித உரிமை அமைப்புகளும் ஐ.நா.வும் பரவலாகக் கண்டனங்களைத் தெரிவித்தன.
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த மோர்ஸிக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடந்ததையடுத்து அவர் தூக்கியெறியப்பட்டார்.
2013 ஆகஸ்ட் 14ஆம் தேதி, எகிப்துப் படையினர் சகோதரத்துவக் கட்சியினரின் ஆதரவாளர்களின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.
அதே நாளில் மின்யா மற்றும் கெர்தஸா ஆகிய இடங்களில் உள்ள காவல்நிலையங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 13 அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதல்களில் கோப்து கிறிஸ்தவர்களின் 40 தேவாலயங்களும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
கெர்தஸா தாக்குதல் தொடர்பாக 188 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டனர். ஆனால், இந்த 188 பேரில் பலர் நீதிமன்றத்திற்கு வராத நிலையிலேயே அவர்கள் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. இப்போது, மறுவிசாரணயைச் சந்திக்க அவர்கள் தாங்களாக முன்வந்து சரணடைய வேண்டியிருக்கும்.
மோர்சியைத் தூக்கியெறிவதில் முன்னணி வகித்த எகிப்திய ராணுவத்தின் முன்னாள் தலைவரான அப்துல் ஃபடா அல் சிசி பிறகு அதிபராகத் தேர்வுசெய்யப்பட்டார்.
அதன் பிறகு, இஸ்லாமியவாதிகள் மீதான நடவடிக்கையில் 1000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 40,000க்கும் மேற்பட்டவர்கள் சிறையில் இருப்பதாக நம்பப்படுகிறது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியைச் சேர்ந்தவர்கள். இந்த அமைப்பு 2013ல் தடைசெய்யப்பட்டுவிட்டது.
இருந்தபோதும், 2013ஆம் ஆண்டின் போராட்டத் தடை சட்டத்தை மீறியதற்காக மதச்சார்பற்ற-தாராளவாத செயற்பாட்டாளர்களும்கூட தண்டிக்கப்பட்டிருக்கின்றனர்.