மேல் கொத்மலையில் 48 வயது மதிக்கதக்க பெண்ணின் சடலம்




க.கிஷாந்தன்)

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை தெவீசிரிபுர எனும் கிராமத்திற்கு அருகில் மேல் கொத்மலை நீர்தேகத்தில் 48 வயது மதிக்கதக்க பெண்ணின் சடலம் 05.02.2016 அன்று மதியம் 3 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

05.02.2016 அன்று காலை 11 மணியளவில் குறித்த பெண் தெவீசிரிபுர கிராமத்தில் நடமாடியதாகவும் மேல் கொத்மலை நீர்தேக்கத்திற்கு அருகில் இவர் வெற்றிலை சாப்பிட்டுக்கொண்டு நிற்கையில் கிராமத்தின் மக்கள் வினாவிய போது சுற்றி பார்க்க வந்தேன் என தெரிவித்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த பெண் நீர்தேக்கத்தில் தவறி விழுந்ததை நேரில் கண்ட சிலர் தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதை தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்த தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.வணிகதுங்க தலைமையிலான பொலிஸ் குழு பெண்ணை மீட்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதற்காக சுழியோடிகள் மற்றும் தலவாக்கலை பொலிஸார், இராணுவத்தினர், பொது மக்கள் உள்ளிட்ட பலர் மேல் கொத்மலை மின்சார சபையின் விசை படகு ஊடாக தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டு மதியம் 3 மணியளவில் பெண்ணின் சடலத்தை மீட்டனர்.

அடையாளம் காணப்படாத இப்பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.