இலங்கையின் 68வது சுதந்திர தினம் இன்று வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. இதன் பிரதான வைபவம் கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறுகின்றது.
அதேநேரம் சுதந்திர தினத்தை வெளிப்படுத்தும் வகையில் நாடெங்கிலும் மூன்று வர்ணங்களைத் தாங்கிய தேசியக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.
445 வருடங்கள் ஐரோப்பியரின் ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருந்த இந்நாடு 1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் திகதி பிரித்தானியரிடமிருந்து சுதந்திரத்தை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக் கொண்டது. இத்தினம் தான் இந்நாட்டின் தேசிய சுதந்திர தினமாக வருடாந்தம் கொண்டாடப்படுகின்றது.
1505 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயரின் வருகையோடு இலங்கை ஐரோப்பியரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. போர்த்துகேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் என மூன்று தரப்பினரும் சுமார் நாலரை நூற்றாண்டுகள் இந்நாட்டை ஆக்கிரமித்து ஆட்சி செய்தனர்.
இக்காலப் பகுதியில் இந்தாட்டு மக்கள் அடிமைகளாகவே நடாத்தப்பட்டனர். இந்நாட்டின் செல்வங்களும் வளங்களும் அந்நாடுகளுக்கு கவர்ந்து செல்லப்பட்டன.
அதேநேரம் ஐரோப்பிய ஆக்கிரமிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்களும், கிளர்ச்சிகள் செய்தவர்களும் கொடுங்கரங் கொண்டு அடக்கியொடுக்கப்பட்டனர். அவர்களுக்கு மிகக் குரூரமான தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இருப்பினும் இந்நாட்டின் மீது பற்றுக் கொண்டவர்கள் ஆக்கிரமிப்புக்கு எதிராக அவ்வப்போது கிளர்ச்சிகளை மேற்கொண்டனர். இது 20ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியை அடையும் போது இந்நாட்டின் விடுதலை வேட்கை வேகமடையத் தொடங்கியது. இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் சகலரும் ஒன்றுபட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
இவ்வாறான நிலையில் பிரித்தானியா அரசியல் சீர்திருத்தங்களை முன்வைத்தது. அந்தடிப்படையில் 1921ம் ஆண்டில் மனிங் அரசியல் சீர்திருத்தம், 1931ம் ஆண்டில் டொனமூர் அரசியல் சீர்த்திருத்தம் என்பன முன்வைக்கப்பட்டன.
இருப்பினும் சோல்பரி அரசியல் சீர்திருத்தத்தின் ஊடாக இந்நாட்டுக்கு சுதந்திரம் வழங்க வேண்டிய நிலைமைக்கு பிரித்தானியர் தள்ளப்பட்டனர். இதன்படியே இந்நாட்டுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.
இவ்வாறு இந்நாடு சுதந்திரம் அடைந்து இற்றைக்கு 68 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. சுதந்திரத்தின் பின்னர் இந்நாட்டைப் பல தலைவர்கள் ஆட்சி செய்துள்ளனர். இவர்கள் முன்னெடுத்த ஆட்சி முறைமைகளால் நாட்டில் வாழும் மக்கள் மத்தியில் ஐயங்களும் சந்தேகங்களும் துளிர் விடத் தொடங்கின.
இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபட்டு ஒரணி நின்று சுதந்திரம் பெற்ற மக்கள் மத்தியில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டது பெரும் கவலைக்குரியது என்று அன்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் அவை பெரிதாகக் கருத்தில் எடுக்கப்படவில்லை.
இதன் விளைவாகத் தமிழ்த் தலைவர்கள் 1976 ஆம் ஆண்டில் சுயாட்சிக் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அத்தோடு இந்நாட்டின் சுதந்திர தின வைபவங்களைப் பகிஷ்கரிக்கவும் அவர்கள் ஆரம்பித்தனர்.
பேதங்களுக்கு அப்பால் ஒரணி நின்று சுதந்திரத்தைப் பெற்ற மக்கள் மத்தியில் பிளவுகளும் முரண்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்தனவேயொழிய அவற்றைக் குறைத்து நீக்கிடவென ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மாறாக ஐரோப்பியர் விட்டுச் சென்ற பிரித்தாளும் தந்திரத்தின் எச்சசொச்சங்கள் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டு வந்தன.
இந்த நாடு சுதந்திரம் அடைந்து ஆறரைத் தசாப்தங்கள் கடந்தும் கூட இன்னும் வளர்முக நாடாவே உள்ளது. ஆனால் இந்நாடு சுதந்திரம் அடைந்த போது இந்நாட்டை விடவும் பின்தங்கி இருந்த நாடுகள், இந்நாட்டை முன்னுதாரணமாகக் கொண்ட பல நாடுகள் இன்று இலங்கையை விடவும் வளர்ச்சி அடைந்து விட்டன.
அன்னிய ஆட்சியில் இருந்து விடுபட்டு இலங்கைத் திருநாடு சுதந்திரக் காற்றினை சுவாசிக்கத் துவங்கிய நாள் இன்றாகும்.1948 பெப்ருவரித் திங்கள் 04ம் திகதி இலங்கை சுதந்திரம் பெற்றது.
இலங்கையின் 68ஆவது சுதந்திரதினம் தேசிய நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கரமசிங்க ஆகியோரின் தலைமையில் இன்று காலை 8.45 மணிக்கு காலி முகத்திடலில் ஆரம்பமாகவுள்ளது.
“ஒரே நாடு – பெரும் சக்தி” என்ற இலக்கை அடிப்படையாக கொண்டு இடம்பெறவுள்ள சுதந்திரத்தின நிகழ்வானது இரு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது.
காலையில் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்புகளும் மாலையில் கலாசார நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.
காலையில் ஜனாதிபதியினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதன் பின்னர் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இம்முறை தேசிய கீதத்தை பாடுவதற்கு ஏற்பாடாகியுள்ளது.

