மூங்கில் தோப்பினால் போக்குவரத்துக்கு பாதிப்பு



அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா கோவிலுக்கு அருகாமையில் வீதியின் ஓரத்தில் அமைந்துள்ள மூங்கில் தோப்பிற்கு 04.02.2016 அன்று காலை இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக மூங்கில் தோப்பு தீயினால் எரிந்து பிரதான வீதியில் விழுந்ததன் காரணமாக அவ்வீதியினூடான போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் தடைப்பட்டிருந்ததாக அட்டன் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
எனினும் அட்டன் பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து இந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதன் பிறகு போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

இந்த தீ விபத்தினால் அந்த பகுதியில் அமைந்துள்ள தொலைபேசி கம்பத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.