புது வருடத்திற்கான மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்னிருத்தி துறைமுக ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றிய உறுப்பினர்கள் நால்வர் தற்போது சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, முன்னதாக அவர்கள் மெதுவாக வேலை செய்யும் போராட்டத்தை முன்னெடுத்த போதும், அது குறித்து நிர்வாகிகள் உரிய கவனம் செலுத்தாமையால் தற்போது நால்வர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக, துறைமுக தேசிய சேவைகள் சங்கத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுஇவ்வாறு இருக்க, துறைமுக நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் அனைத்து ஊழியர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலதிகக் கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரி துறைமுக வளாகத்தில் இவர்கள் மேற்கொண்டு வருவது தொழிற்சங்க நடவடிக்கை அல்ல சீர்கேடு என, இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் சரத் குமார பிரேமசந்திர குறிப்பிட்டுள்ளார்.
துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கை என்ற பெயரில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வை சீரழிக்க எவருக்கும் உரிமை இல்லை எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
இதேவேளை, ஊழியர்களுக்கு வழங்க முடிந்த உயரிய போனஸ் கொடுப்பனவை வழங்கியுள்ளதாக, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட துறைமுக அதிகார சபையின் நிதி பணிப்பாளர் ஷிரானி வன்னியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்

