கூட்டு எதிர்க்கட்சியினால் கிருலப்பனயில் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மே தினக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்டுகின்றது.
கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்காது அதனை தந்திரமாக தவிர்க்க சில கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, வாசுதேவ நாணயக்கார ஏற்கனவே கியூபா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்ட காரணத்தினால் தாம் மே தினக் கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனதாக காண்பித்துக் கொள்வதே வாசுதேவவின் திட்டமாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளது.
தனது சம்பந்தியான வடக்கு முதல்வர் வி;க்னேஸ்வரனை கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் புலி என முத்திரை குத்தி விமர்சனம் செய்வதனை வாசுதேவ கடுமையாக எதிர்த்துள்ளார்.
மே தினக் கூட்டத்திலும் இவ்வாறான விமர்சனங்கள் எழக் கூடிய சாத்தியம் காணப்படுவதனால் கூட்டத்தில் பங்கேற்று முரண்பாடுகளை வளர்ப்பதனை விடவும், கூட்டத்தை தவிர்ப்பது பொருத்தமானது என்ற காரணத்தினால் வாசுதேவ நாணயக்கார வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.
கியுபாவிற்கு விஜயம் செய்துள்ள வாசுதேவ, எதிர்வரும் மே மாதம் 3ம் திகதியே நாடு திரும்பவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

