தாஜீதீன் கொலை-அநுர சேனநாயக்க இன்றிரவு கைது செய்யப்படுவார்?




முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க இன்றிரவு கைது செய்யப்படலாம் என்று பொலிஸ் குற்றத் தடுப்புத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வசீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் தொடர்பில் கடந்த இரண்டு நாட்களாக அனுர சேனநாயக்கவிடம் நீண்ட விசாரணைகள் நடைபெற்றிருந்தது.
குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர குறித்த விசாரணைகளை நெறிப்படுத்தியிருந்தார்.
இதன் போது அவர் தெரிவித்திருந்த தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அக்காலத்தில் அவரது பாதுகாவலர்களாக இருந்த பொலிசாருக்கு குற்றத் தடுப்புத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இன்று பிற்பகல் அனுர சேனநாயக்கவுக்கு மீண்டும் குற்றத் தடுப்புத்திணைக்களத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இன்றிரவுக்குள் தான் பெரும்பாலும் கைது செய்யப்படக் கூடிய நிலை ஏற்பட்டிருப்பதை அடுத்து அனுர சேனநாயக்க தனது குடும்பத்தினருடன் கம்பஹா, மினுவாங்கொடையில் இருக்கும் பிரசித்த தேவாலயம் ஒன்றிற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
அத்துடன் தான் குற்றத் தடுப்புத் திணைக்களத்தில் ஆஜராக தாமதமாகும் என்றும் அவர் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
குற்றத் தடுப்புத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்தும் அனுர சேனநாயக்கவின் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
அத்துடன் இன்றிரவு அவர் கைது செய்யப்பட்டு கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படலாம் என்றும் நம்பகமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.