(க.கிஷாந்தன்)
அரசியல் தலையீடு இல்லாமல் அர்ப்பணிப்புடன் கல்வி சேவையை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் முன்னெடுப்பதால் மாணவர்களின் பெறுபேறுகள் உயர்கின்றது. இந்த நிலை மேலும் உயர வேண்டும். அன்று 402 ஆசிரியர்களை நியமிக்க அமரர்.சௌமிய மூர்த்தி தொண்டமான் முயற்சித்தமையால் இன்று நாற்பதாயிரம் அரச தொழிலாளர்கள் கொடுத்தாலும் அதனை பெற்றுக் கொள்ளும் அளவிற்கு படித்தவர்கள் எமது சமூகத்தில் உள்ளனர் என மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தெரிவித்தார்.
Race For Education திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான “இந்து விழி” கணித பாட பயிற்சி நூல் கையளிக்கும் நிகழ்வு கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் தேவஸ்தான கலாச்சார மண்டபத்தில் 26.07.2018 அன்று நடைபெற்றது.
நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 124 பாடசாலைகளில் கல்வி பயிலும் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான கணித பாடத்தில் சித்தியை உயர்த்தும் நோக்கில் யாழ். இந்துகல்லூரியின் 1992ஆம் ஆண்டு பழைய மாணவர்களினால் முன்னெடுத்து வரும் இந்த Race For Education திட்டத்தின் மத்திய மாகாண இணைப்பாளர் பொன்னம்பலம் பிரதீபன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மத்திய மாகாண தமிழ் கல்வி மற்றும் விவாசாயத்துறை அமைச்சர் எம்.ரமேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத், மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எ.சத்தியேந்திரா, கோட்ட கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் அமைச்சர் எம்.ரமேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்த கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பரீட்சையின் பின் வெளியாகும் பெறுபேறுகளில் கணிதம் சம்மந்தப்பட்ட பாடங்களில் குறைவான பெறுபேறுகள் பெற்று வந்த நிலையில் இன்று அந்த நிலைமை மாற்றம் பெற்று கணித பாடத்தில் மட்டுமல்லாது ஏனைய பாடங்களிலும் உயர்வான பெறுபேறுகளை பெற்று யாழ் மாவட்டத்தை விட உயர்ந்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
மலையக கல்வி வளர்ச்சியில் அமரர்.சௌமிய மூர்த்தி தொண்டமான் அன்று 402 ஆசிரியர் நியமனத்தை பெற்றுக்கொள்ளும் போது நம் மத்தியில் படித்தவர்கள் எவரும் இருக்கவில்லை. மாறாக வடக்கு, கிழக்கு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர்.
இவ்வாறு வரவழைக்கப்பட்டவர்கள் தங்களது குடும்ப உறவுகளை பிரிந்து மலையகத்திற்கு வந்து கல்வி சேவையை முன்னேற்றினார்கள். இந்த நிலைமை இப்போது இங்கு இல்லை.
அட்டன் வலயத்திலிருந்து நுவரெலியா வலயத்திற்கு இடமாற்றம் செய்யப்படும் போது ஆசிரியர்கள் தாம் 20 வருடம் 25 வருடம் என சேவை காலத்தை ஞாபகப்படுத்தி செல்வதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர். இந்த நிலைமை மாற்றம் பெற வேண்டும்.
போக்குவரத்து, மின்சாரம், பாதை வசதி இல்லாத ஒரு காலகட்டத்தில் சிரமத்தில் வாழ்ந்து வந்த நமது மக்கள் இன்று கல்வியில் உயர்வதற்கான சகல வசதிகளும் இருக்கின்றது. அன்றைய காலகட்டத்தில் யாழிலிருந்து வருகை தந்த ஆசிரியர்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து மலையகத்தில் கல்வி சேவையை இந்த அளவிற்கு உயர்த்தியமைக்கு அடித்தளம் இட்டமைக்காக நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
அதிபராக இருந்தாலும் சரி, ஆசிரியர்களாக இருந்தாலும் சரி கல்வி சேவையில் மாணவர்கள் பெறும் பெறுபேறுகளை போல நீங்களும் பெறுபேறுகளை அடைய வேண்டும். பணத்திற்கு பின்னால் போகும் காலம் மாறப்பட்டு கல்விக்கு பின்னால் போகும் காலம் மாற வேண்டும். கடைசியாக நம்மோடு வருவது கல்வி மாத்திரமே. மலையக கல்விக்காக இன்று பலரும் உதவி செய்கின்றார்கள்
இந்த வகையில் இந்திய அரசாங்கம் 400 மில்லியன் ரூபாவை ஒதுக்கி அதில் 300 மில்லியன் ரூபாவை தற்போது வழங்கி உள்ளது. இதில் 98 மில்லியன் ரூபாய் புஸ்ஸல்லாவ சரஸ்வதி பாடசாலைக்கு வழங்கியுள்ளது.
மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண அமைச்சு கல்வி முன்னேற்றத்திற்காக கேட்ட நேரத்தில் உதவிகளை செய்து வருகின்றது. 742 பேரை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க தலைவர் ஆறுமுகன் தொண்டமான் போராட்டமின்றி ஜனாதிபதியுடன் பேசி அதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்பித்து பெற்றுக் கொண்டார்.
வேறு மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு இரண்டு, மூன்று மாதங்களாக போராட்டங்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.
பெருந்தோட்டதுறையை இருப்பிடமாக கொண்டு வாழ்ந்தாலும், அரசதுறைக்கு நாம் முன்னோக்கி செல்ல கல்வியை மேலும் வலுப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment