''இலங்கையின் உண்மையான நண்பரை நாம் இழந்துவிட்டோம்'' 'என்று இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி மரணம் குறித்து இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இரங்கல் தெரிவித்துள்ளார்.
GETTY IMAGES
இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி தனது 93 ஆவது வயதில், டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் காலமானார்.
அவரது மறைவுக்கு, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அதிபர் அவரது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தனது இரங்கலை பதிவுசெய்துள்ளார்.
TWITTER
"இன்று, நாம் ஒரு பெரிய மனிதநேயமுடையவரையும், இலங்கையின் உண்மையான நண்பரையும் இழந்துள்ளோம். இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி ஒரு தொலைநோக்கு கொண்ட தலைவர் மற்றும் ஜனநாயகத்தின் ஒரு தீவிர பாதுகாவலராவார். இந்நிலையில் அவரது குடும்பத்தினர் மற்றும் மில்லியன் கணக்கான மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்" என தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச ட்விட்டரில் பதிவுசெய்துள்ள இரங்கல் செய்தியில், "முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி என்னும் பெரும் தலைவரை இந்தியா இழந்து விட்டது. இந்திய மக்களுக்கும் அவரது குடும்பத்தவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
TWITTER
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.
"முன்னாள் பாரத பிரதமரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான வாஜ்பேயி அவர்கள் ஒரு மிகச்சிறந்த தலைவர் மட்டுமல்லாது அவரது தொலைநோக்கு தலைமைத்துவத்தின் கீழ் இந்தியா அநேக சாதனைகளை நிலைநாட்டுவதற்கும் வழிவகுத்தார்.
தனது நேர்மையான தாழ்மையுடன் கூடிய தலைமைத்துவத்தினால் இந்தியாவை வழிநடத்திய வாஜ்பேயி அவர்கள் உலகம் முழுவதுமுள்ள ஆயிரக்கணக்கான மக்களினால் நேசிக்கப்பட்ட மதிக்கப்பட்ட ஒரு தலைவராவார். இலங்கை வாழ் தமிழ் மக்களின் சார்பில், அவரது குடும்பத்தினருக்கும் , பாரதிய ஜனதா கட்சிக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment