அதிகம் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்




குளிர் பானங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களான பெப்சி, கோக் போன்ற நிறுவனங்கள்தான் அதிகளவில் பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்வதாக அரசு சாரா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. 

உலகளவில் குளிர்பானங்கள் விற்பனையில் பெப்சி, கோக், நெஸ்ட்லே போன்ற நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. இந்தப் புகழ்பெற்ற நிறுவனங்கள்தான் அதிக பிளாஸ்டிக் கழிவுகளை வெளியிடுவதாக கிரீன் பீஸ் (Greenpeace) என்ற அரசு சாரா அமைப்பு தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடை செய்யும் நோக்கத்துடன் அந்த அமைப்பு உலகம் முழுவதும் 42 நாடுகளில் 239 குழுக்களை அமைத்து பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் பணியை மேற்கொண்டது. இதன் முடிவில் மொத்தமாக 1,87,000 பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டன. இவற்றில் கோக் நிறுவனத்தின் பிளாஸ்டிக் குப்பைகள்தான் அதிகமாக உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்தது. 


தூய்மைப் பணிகள் நடைபெற்ற 42 நாடுகளில் 40 இடங்களில் கோக் நிறுவனத்தின் பிளாஸ்டிக் பொருள்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ``இந்த நிறுவனம் உலகளவில் பிளாஸ்டிக் மாசுபாட்டை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகுக்கிறது” என பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடை செய்யும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வோன் ஹெர்னான்டெஸ் (Von Hernandez) தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பொதுவாக பாலிஸ்டைரின் (polystyrene) என்ற பிளாஸ்டிக் தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பேக்கேஜிங், காபி கப் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. 


``கிரீன் பீஸ்ஸுடன் இணைந்து நாங்களும் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருள்களை தடுப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவோம்” என கோக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த மூன்று நிறுவனங்களும் தாங்கள் உற்பத்தி செய்யும் பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்து உபயோகிப்பதாக உறுதி அளித்துள்ளனர் என அந்த அமைப்பு கூறியுள்ளது.

பிளாஸ்டிக் பொருள்கள் அதிகம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பட்டியலையும் கிரீன் பீஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன் வரிசைகளின் முறையே கோக், பெப்சி, நெஸ்ட்லே, டனோனே, மோண்டலேஸ் இண்டர்நேஷனல், ப்ரோக்டர் அண்டு கேம்பிள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.