தங்கும் இடம் இல்லாமல் தவிக்கும் வைத்தியசாலை பணிப்பாளர்




(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளருக்கு தங்குமிட வசதி இல்லாமையினால் மிகவும் சிரமப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

பல நோயாளர்களின் நோய்களை குணப்படுத்தும் வைத்தியர்களின் பிரதானியாக செயற்பட்டு வருபவரும், வைத்தியசாலையின் அபிவிருத்திகளை முன்னெடுத்து வரும் பணிப்பாளருமான இவருக்கு இப்படியான அவல நிலை ஏற்படுகின்றமை மிகவும் வேதனை அளிப்பதாகவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலை கடந்த காலங்களில் கிழக்கு மாகாண சபையின் கீழ் கண்காணிக்கப்பட்டு வந்தது இருந்தபோதிலும் தற்பொழுது மத்திய அரசாங்கத்தினால் இவ் வைத்தியசாலை கண்காணிக்கப்படுகின்றன நிலையில்  வைத்திய பணிப்பாளர் தங்குவதற்கு இடமின்றி அவதியுறும் நிலையில் வைத்தியசாலையின் அபிவிருத்தி விடயத்தில் இவர் எவ்வாறு செயற்பட முடியும் எனவும் நோயாளர்கள் விடயத்தில் எவ்வாறு செயல் படுவார் எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை அதிகமாக காணப்படுகின்ற போதிலும் வைத்திய பணிப்பாளருக்கு இவ்வாறான நிலை என்றால் புதிதாக நியமிக்கப்படுகின்ற வைத்தியர்கள் கூட வர தயங்க மாட்டார்கள் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆகவே மத்திய அரசாங்கமும் அரசியல்வாதிகளும் கண்திறந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் காணப்படுகின்ற குறைகளை கண்டறிந்து நோயாளர்கள் விடயத்திலும் வைத்தியர்களின் விடயத்திலும் மிகக் கூடுதலான கரிசனை காட்ட வேண்டும் எனவும் திருகோணமலை  மாவட்டத்திலுள்ள புத்தி ஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.