சர்வதேச சட்டத்தின் மூலாதாரங்கள்


சர்வதேச சட்டத்தின் மூலாதாரங்கள்-1 
(Sources of international Law-1)

உள்நாட்டுச் சட்டங்களை இயற்றுவதற்கு அந்தந்த நாடுகளில் அரசும் அதன் சட்டமியற்றும் மன்றங்களும் இருப்பதுபோல், சர்வதேசச் சட்டங்களை இயற்றுவதற்கு உலக அரசாங்கமோ, உலக சட்டமியற்றும் மன்றமோ கிடையாது. அதுபோல உலகளவிலான ஒற்றை நீதி அமைப்பு  முறை (Single Judicial System) யும் கிடையாது. எனவே சர்வதேசச் சட்டத்தின் மூலாதாரங்கள் எவை என்பதை  தீர்மானிப்பது பலகாலம் விவாதத்திற்குரிய ஒன்றாகவே இருந்த வந்தது. மூலாதாரங்கள் என்ற வார்த்தையின் பொருளே வெவ்வேறு அறிஞர்களால் வெவ்வேறு விதமாகப் பொருள் கொள்ளப்பட்டது. உதாரணத்திற்கு ஓப்பன்ஹீய்ம், சர்வதேசச் சட்டத்தின் மூலாதாரங்கள் வேறு அதன் காரணங்கள் (Causes) வேறு என்று வேறுபடுத்தி காட்டினார்.
ஓப்பன்ஹீய்ம், சர்வதேசச் சட்டத்தின் மூலாதாரங்களை இரண்டு வகையாகப் பிரிக்கிறார். அவை:-
1.நாடுகளின் அரசுகளின் வெளிப்படையான சம்மதம் (Express Consent)
2.நாடுகளின் அரசுகளின் மறைமுகமான சம்மதம் (Tacit consent) - ஆகியனவாகும்.
ஆனால் ஃப்ரோஃப்.பிரெயர்லி (Prof.Brierly) வழக்காறு (Custom)களும் அவற்றை வலியுறுத்தும் ஆதாரங்களுமே (Reasons) சர்வதேசச் சட்டத்தின் மூலாதாரங்கள் என்கிறார்.
ஸ்டார்க் (Starke) சர்வதேசச் சட்ட வழக்கறிஞர்கள், தங்கள் முன் உள்ள குறிப்பிட்ட வழக்கின் சூழ்நிலைகளுக்குப் பொருந்தக்கூடிய சர்வதேசச் சட்ட விதிகளை கண்டறிவதற்கு நடைமுறையில் பயன்படுத்தும் உண்மையான சாதனங்களே (materials) சர்வதேசச் சட்டத்தின் மூலாதாரங்கள் என்கிறார். 
ஸ்டார்க்கின் நடைமுறைவாத அணுகுமுறையின்படி பின்வருவனவற்றை சர்வதேசச் சட்ட வழக்கறிஞர்கள் பயன்படுத்தும் மூலாதாரங்களாவன:-
1.வழக்காறு (Custom)
2.உடன்படிக்கைகள் (Treaties)
3.நீதிமுறை தீர்ப்பாயங்கள் (Judicial Tribunals) அல்லது இசைவுத் தீர்ப்பாயங்கள் (Arbitral Tribunals) வழங்கும் முடிவுகள்
4.சர்வதேச நிறுவனங்களின் உறுப்பு அமைப்புகளின் அறிக்கைகள் அல்லது தீர்மானிப்புகள் (Writings and determinations)
5.சர்வதேச நிறுவனங்களின் உறுப்பு அமைப்புகளின் முடிவுகள் (decisions) அல்லது தீர்மானிப்புகள்.

சர்வதேச நீதிமன்றச் சட்டவிதிகளில் அங்கீகரிக்கப்பட்ட மூலாதாரங்கள் 
(Sources recognized by statute of International law)
சர்வதேசச் சட்ட அமைப்புமுறை மையப்படுத்தப்படாததும் சர்வதேச அரசியல், பொருளாதார சூழ்நிலைகளின் மாற்றங்களுக்கு ஏற்ப அடிக்கடி மாறக்கூடியதும் ஆகும். எனவே, சர்வதேச நீதிமன்றச் சட்டவிதிகள் ஷரத்து 38-இல் பின்வருவன சர்வதேசச் சட்டத்தின் மூலாதாரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை:
1.    சர்வதேச உடனபடிக்கைகள் (International treaties)
2.    சர்வதேச வழக்காறு (International Custom)
3.    நாகரீக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட பொதுக் கோட்பாடுகள் (General Principle)

துணை மூலாதாரங்கள் (Subsidiary Sources) 
மேலே கண்ட மூன்று பிரதான மூலாதாரங்களுடன் பின்வருவன துணை மூலாதாரங்களாக சர்வதேச நீதிமன்ற சட்ட விதிகள், ஷரத்து 38-இல் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை:
(i)நீதிமன்ற தீர்ப்பாயங்கள் (Judicial Tribunals) மற்றும் இசைவுத் தீர்ப்பாயங்கள் (Arbitral Tribunals வழங்கும் முடிவுகள் (Decisions)
(ii)உள்நாட்டு நீதிமன்றங்களின் சர்வதேசச் சட்டத் தீர்ப்புகள் (Decisions of Domestic Courts)
(iii) சட்ட அறிஞர்களின் சட்டவியல் படைப்புகள் (Juristic Works)
துணை மூலாதாரங்கள் என்பவை உண்மையில் மூலாதாரங்கள் அல்ல. மாறாக அவை பிரதான மூலாதாரங்களான உடன்படிக்கைகள், வழக்காறுகள் மற்றும் பொதுக்கோட்பாடுகள் இருக்கிறது என்ற உண்மையை நிரூபிக்க உதவும் ஆதார சாட்சியங்களே ஆகும்.

1. சர்வதேச உடன்படிக்கைகள் (International Treaties)
    
நவீன கால சர்வதேசச் சட்டத்தில், சர்வதேச உடன்படிக்கைகள் மிக முக்கியமான மூலாதாரமாக விளங்குகின்றன. ஏனெனில் சர்வதேச உடன் படிக்கைகளின் மூலம் உருவாக்கப்படும் சர்வதேசச் சட்ட விதிகள் வெளிப்படையானதாகவும் குழப்பத்திற்கு இடமில்லாததாகவும் இருக்கின்றன. அவை சம்மந்தப்பட்ட அரசுகளை கட்டுபடுத்துவதில் சர்வதேச வழக்காறுகளைக் காட்டிலும் அதிக சட்ட வலிமை பெற்றவையாக இருக்கின்றன.
அதனால் தான் சர்வதேச நீதிமன்றச் சட்ட விதிகள், ஷரத்து 38 சர்வதேச உடன்படிக்கைகளை முதல் மூலாதாரமாக பட்டியலிட்டுள்ளது. இதன்படி சம்மந்தப்பட்ட அரசுகளால் வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்ட விதிகளை உருக்குகின்ற பொது அல்லது குறிப்பான சர்வதேச உடன்படிக்கைகள் சர்வதேசச் சட்டத்தின் முதல் மூலாதாரமாகும்.


மேனலி.ஓட்மர்.ஹட்சட்ன்
    
சர்வதேச நீதிமன்ற நீதிபதியாயிருந்த மேனலி ஓட்மர்.ஹட்சன் (Manely Ottmer Hudson) சர்வதேச உடன்படிக்கை என்பது ஓர் சர்வதேச ஆவணத்தின் வடிவம் அல்லது தலைப்பு எதுவாக இருந்தாலும் (i) உடன்படிக்கை (Treaty) (ii) பொது ஒப்பந்தம் (Convention) (iii) உடன்படிக்கை வரைவுக் குறிப்பு (Protocol) அல்லது (iv) உடன்பாடு (agreement) உள்ளிட்ட எதனையும் உள்ளடக்கியதாகும் என்கிறார்.
ஒரு சர்வதேச தீர்ப்பாயம், சர்வதேசப் பிரச்சனை ஒன்றை தீர்மானிக்கும் போது, அப்பிரச்சனையில் சம்பந்தப்பட்ட அம்சம் குறித்து சர்வதேச உடன்படிக்கை ஏதேனும் இருக்கிறதா என்பதையெ முதலில் பார்க்க வேண்டும். அவ்வாறு ஏதேனுமொரு சர்வதேச உடன்படிக்கை இருக்கும் பட்சத்தில் அத்தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றத்தின் முடிவு அவ்வுடன்படிக்கையில் அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும். எனவே தான் ஸ்டார்க் சர்வதேச உடன்படிக்கைகளை சர்வதேச சட்டமியற்றல் (International Legislation) என்கிறார்.

வகைகள் (Kinds)
சர்வதேச உடன்படிக்கைகளின் மூலாதார மதிப்பைப் பொறுத்து அவற்றை இருவகையாக பிரிக்கலாம். அவை:
(i)சட்டத்தை உருவாக்கும் உடன்படிக்கைகள் 
(ii)ஒப்பந்த உடன்படிக்கைகள்