உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் உயிரிழப்பு


கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 64 லட்சத்து, 4 ஆயிரத்தை கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவித்துள்ளது. அதேவேளையில் இந்த தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 3 லட்சத்து, 80 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் இந்த தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து, 47 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதனிடையே, உலக அளவில் வெவ்வேறு நாடுகளில் என்ன நிலவரம் என்று பார்ப்போம்.

இந்தியாவில் 2 லட்சத்தை கடந்த பாதிப்பு

இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் இன்று காலை 8 மணிக்கு வெளியிட்ட தரவுகளின்படி, அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 8,909 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சிகிச்சையில் இருந்த 217 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,07,615ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 5,815 பேர் உயிரிழந்துள்ளனர்.

1,01,497 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மலேசியாவில் 20 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம்

கோப்புப்படம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionகோப்புப்படம்

புதிதாக 93 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியதை அடுத்து மலேசியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,970ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 61 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,324 நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து 12ஆவது நாளாக மலேசியாவில் கோவிட்-19 நோய் காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை. பலியானோர் எண்ணிக்கை 115ஆக நீடிக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தால் மலேசியாவில் சுமார் 20 லட்சம் பேர் வேலை இழப்பர் என அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வைரஸ் பரவலுக்கு முன்பு பணியில் இருந்த ஐந்து மலேசியர்களில் ஒருவரேனும் தற்போது வேலை இழந்துள்ளார். மொத்தம் 5 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வின் போது தரவுகள் சேகரிக்கப்பட்டன.

35 விழுக்காடு மலேசியர்கள் தங்களது ஊதியம் 30 விழுக்காடு அளவு குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 54 விழுக்காட்டினர் புது வேலை தேடி வருவதாகக் கூறியுள்ளனர்.

மலேசியாவில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் கூகுளில் சுமார் 74 மில்லியன் தேடல்கள் வேலை வாய்ப்புகள் தொடர்பாக இருந்துள்ளது.

இதற்கிடையே 14 நாட்கள் தனிமைப்படுத்தப் பட்டிருந்த பிரதமர் மொகிதின் யாசினுக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு வாரங்களுக்கு முன்பு பிரதமரைச் சந்தித்த அதிகாரிக்கு வைரஸ் தொற்று இருந்ததால் சந்தேகத்தின் பேரில் பிரதமர் தனிமைப்படுத்தப்பட்டார்.

சிங்கப்பூர் நிலவரம்

சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36 ஆயிரத்தைக் கடந்தது.

கோப்புப்படம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 569 பேருக்கு வைரஸ் தொற்றியதை அடுத்து சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இவர்களில் 33,567 பேர் அந்நியத் தொழிலாளர்கள் ஆவர். மொத்த நோயாளிகளில் 65 விழுக்காட்டினர், அதாவது 23,175 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் விவகாரத்தால் பணியை இழக்கும் பட்சத்தில் சிங்கப்பூரர்கள் பலரிடம் அடுத்த ஆறு மாதங்களுக்கு மேல் நடப்பு வாழ்க்கை முறையை தொடரும் அளவுக்கு போதுமான சேமிப்புகள் இல்லை. அண்மைய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர வசிப்பிட உரிமை பெற்றவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் மூன்று பேரில் இருவர் தங்களிடம் போதிய சேமிப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர்களில் சரிபாதி பேர் ஊதியம் குறைக்கப்பட்டது, கட்டாய விடுப்பு உள்ளிட்ட காரணங்களால் பிரச்சினையில் உள்ளனர். மேலும் தங்களது சேமிப்பின் பெரும் பகுதி கரைந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

பாகிஸ்தானில் 6 லட்சம் பேருக்கு அறிகுறிகள் இல்லாத கொரோனா இருக்கலாம்

இந்நிலையில் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் சுமார் 6 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்று இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 30 நாட்கள் முடக்கநிலையை அமலாக்க வேண்டும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ்

அந்த மாகாணத்தின் தலைநகரான லாகூரில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகமாகி வரும் நேரத்தில், பொருளாதாரம் பாதிக்கப்படுவதால் ஊரடங்கை நீட்டிக்க முடியாது என்று கூறிய பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் மக்கள் "வைரசுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

வங்கதேசம்: ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் முகாமில் முதல் கொரோனா உயிரிழப்பு

தென் கிழக்கு வங்கதேசத்தில் உள்ள ஒரு ரோஹிஞ்சா முஸ்லிம்கள் முகாமில் 71 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

மியான்மர் எல்லைப்பகுதியில் உள்ள காக்ஸ் பசார் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய அகதிகள் முகாமான குடுபலோங்கில் வாழ்ந்து வந்த அவர், மருத்துவ தொண்டு நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த தனிமைப்படுத்தும் மையத்தில் இறந்தார்.

உலகிலேயே அதிக அளவிலாக அகதிகள் வாழும் அந்த முகாமில் இதுவரை 29 ரோஹிஞ்சா அகதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அங்கு வெறும் 339 பரிசோதனைகள் மட்டுமே இதுவரை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இத்தாலி

உலகில் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இத்தாலியில் படிப்படியாக ஊடரங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு தங்கள் எல்லைகளை திறக்கவுள்ளது இந்நாடு.

இத்தாலி நாட்டுக்குள் பயணிப்பதற்கான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட உள்ளன.

இத்தாலியின் பொருளாதாரம் பெரிதும் சுற்றுலாவை நம்பி இருக்கிறது. ஆனால், தொற்று பாதிப்பால் கடந்த சில மாதங்களால் அந்நாடு முடங்கிப்போனது.

இத்தாலியில் கொரோனா தொற்றால் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

நியூசிலாந்து

நியூசிலாந்தில் அடுத்த வாரத் தொடக்கம் முதல் சமூக விலகல் உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச போக்குவரத்தும் தொடங்கப்படலாம் என்பதால் அங்கு இயல்புநிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 12 நாட்களாக எந்த புதிய தொற்றும் அங்கு கண்டறியப்படவில்லை. ஒரே ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

தென் கொரியா

கோப்புப்படம்படத்தின் காப்புரிமைREUTERS

கொரோனா நோயாளிகள் குணமடையும் நேரத்தை குறைக்க உதவுவதாக கூறப்படும் ரெம்டிசிவிர் மருந்தின் இறக்குமதிக்கு தென் கொரிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக உலகளவில் நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில், ரெம்டிசிவிர் மருந்து கொரோனா நோயாளிகள் குணமடையும் காலத்தை 15 நாட்களில் இருந்து 11 நாட்களாக குறைப்பது தெரியவந்தது.

ரெம்டிசிவிர் மருந்தை கோவிட்-19 சிகிச்சைக்கு பயன்படுத்த அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளன.